செந்தில்நாதன் அவன் பெயர். அவன் ஓர் ஆட்டு இடையன். அவனை எல்லாரும் ‘செந்தில்’ என்றே அழைப்பர். செந்தில் அந்தக் கறுப்பு நிற ஆட்டுக்குட்டியை விட்டு எப்போதும் பிரிவதேயில்லை. எப்போதும் அதைத் தன் மார்பிலும் மடியிலும் சுமந்து திரிந்தான். எத்தனையோ ஆடுகளை அவன் ஓட்டிச்சென்றாலும், அந்த ஆட்டுக்குட்டி மட்டும் அவன் கண்பார்வையிலேயே இருக்கும். சில மனிதர்களை நமக்கு ஏன் பிடிக்கும் என்று நாம் சொல்ல முடியாததுபோல, அந்த ஆட்டுக்குட்டி ஏன் அவனுக்குப் பிடித்துப்போனது என்று அவனால் சொல்ல முடியவில்லை. அதற்கு ‘அம்மூ’ என்று பெயரிட்டான்.
அந்தக்
கூட்டத்திலிருந்த நாற்பத்திரெண்டு ஆடுகளில் வேறு எந்த ஆட்டிற்கும் அவன் பெயர் வைத்ததில்லை. செந்திலுக்குப் பல ஆண்டுகளாக ஓர்
ஆட்டுக்குட்டி சொந்தமாக வளர்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘இந்தமுறை வூடுப் போகும்போது எப்படியாவது எசமானிடம் சொல்லி இந்த அம்மூவ வீட்டுக்கு இட்டுச் செல்லணும். அத புள்ள மாதிரி
வளக்கணும்’ என்று
செந்தில் எண்ணிக் கொண்டான்.
செந்தில்
ஒரு மேய்ப்பன் அவ்வளவுதான்; அந்த நாற்பத்திரெண்டு ஆடுகளின் உரிமையாளன் அல்ல. பரம்பரைப் பரம்பரையாக ஆடு மேய்ப்பது அவன் தொழில் என்றாகிப்போனதால், வேறு எந்தத் தொழிலையும் பற்றி அவன் சிந்தித்ததே இல்லை.
மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு தேவநேசன் என்பவரின் செம்மறி ஆட்டு மந்தையை மேய்த்து வந்தான். இப்போது கவுண்டமணி என்பவரின் வெள்ளாடுகளை மேய்த்து வருகிறான். வாரத்திற்கு ஒரு முறை தன் முதலாளியிடம் எல்லா ஆடுகளையும் ஓட்டிச்சென்று எண்ணிக்கை சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும். முதலாளி கவுண்டமணி மிகவும் கோபக்காரர். ஆடுகளின் எண்ணிக்கை குறைந்தால் அவ்வளவுதான். ஏற்கெனவே கவுண்டமணியிடம் வேலை பார்த்த பொத்தன் என்பவன் ஆடு ஒன்றைக் களவாடிவிட்டு ‘ஆடு வழி தவறிடிச்சு’ என்று
நாடகமாடி கையும் களவுமாகப் பிடிபட்டதும், முதலாளியின் செருப்பு பிய்ந்து பொத்தனின் கன்னம் பழுத்தக் கதையைப் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் செந்தில். அதனால் ‘இந்தக் குட்டி ஆடு அம்மூவைக் கூலியாக எப்படிக் கேட்பது? இல்லை அம்மூவை ஒளித்து வைத்துவிட்டு தொலைந்து போனது என்று சொல்லிவிடலாமா?’ பயம் ஒருபுறமும், தயக்கம் மறுபுறமும் ஆட்டின் இரண்டு கூரியக் கொம்பாக மார்பில் பாய்ந்து செந்திலின் இதயத் துடிப்பை அதிகரித்தது.
கவுண்டமணி
ஐயா கைலி ஒன்றைக் கட்டிக் கொண்டு திறந்த மேனியாய் அந்த மச்சு வீட்டின் வெளியே வந்தார். ‘என்னடே செந்தில், ஆடுகளெல்லாம் நோஞ்சானாய் போச்சு? புல்லு, தண்ணி காட்டுறியாடே?’ என்று கேட்டபடி மடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த மூக்குப்பொடி டப்பாவைக் கையில் எடுத்தார். மூக்குப்பொடியை மூக்கில் வைத்து வேகமாக உறிஞ்சிக்கொண்டே ஆடுகளை எண்ண, அதனருகிலே வந்தார். எப்படியாவது அம்மூவைக் கேட்டு வாங்கிடவேண்டும் என்ற எண்ணத்தில் சரியான வார்த்தைக்காகத் திணறினான்.
‘ஐயா!’ என்று தொடங்கும்போது வாய்க்கு வந்த அந்த வார்த்தை வெளியே வராமல் தொண்டைக் குழிக்குள்ளேயே வழுக்கி விழுந்தது. பலமுறை தனியாக இருக்கும்போதெல்லாம் எப்படி ஆட்டுக்குட்டி அம்மூவை முதலாளியிடம் பேசிப்பெறுவது என்பதைப் பல கோணத்தில் பேசி
பயிற்சி எடுத்திருந்தும், அவர் முன்னால் அவனுக்கு வார்த்தைகள் வசப்படவில்லை. ஆடு மேய்ப்பவன் அத மேய்க்கணுமே தவிர,
சொந்தம் கொண்டாடக்கூடாது என்பது வைக்கப்படாத விதி போலும்.
தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு ‘ஐயா’ என்று தொடங்கும்போதே, “டேய் செந்திலு! என்னடா இந்த ஆட்டுக்குட்டி மட்டும் வடிவா சதையா இருக்கு?”
“ஐயா! இது புதுகுட்டிங்க. கொஞ்சம் நோய்ங்க. முரட்டு வேறு பிடிக்குதுங்க. நான் வேணும்ணா அத எடுத்துக்கட்டுமா?’ என்று தயக்கத்தோடு
மூஞ்சில் வெளிப்பட்ட வேர்வையைத் துடைத்துக்கொண்டே சொல்ல நினைக்கும்போதே, “என் மவளும் அவ பிள்ளையளும் டவுணுலயிருந்து
லீவுக்கு வாராங்க, அவங்களுக்குக் கறி சமச்சிப்போடணும். இந்த ஆட்ட மட்டும் விட்டுட்டு மத்தத ஓட்டிக்கிட்டுப்போடே” என்றார்
கவுண்டமணி ஐயா.
செந்திலுக்குத்
தூக்கிவாரிப்போட்டது.
‘எப்படியாவது இந்த வருசமாவது ஐயாகிட்டப்பேசி. ஓர் ஆட்ட வூட்ல வைச்சி புள்ளையா வளக்கலாமுணு பார்த்தா... இப்படி ஆயிடுச்சே’
என்று எண்ணி வருத்தத்தோடே நாற்பத்தியொரு ஆடுகளோடு அடுத்த வார மேய்ச்சலுக்குத் தயாரானான் செந்தில்.
இரண்டு
மாதங்கள் கழித்து, தன் கிடையிலிருந்த சினையாட்டில் ஒன்று ஒரே ஒரு குட்டி ஈன்றது. இந்தத் தடவையாவது இந்த ஆட்டுக்குட்டிய முதலாளியிடம் சொல்லி நம்ம வூட்டுக்குக் கொணர்ந்திடணும்’ என்ற
எண்ணத்தோடே அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து தன் மடியில் வைத்து அதற்கு ‘அம்மூ’ என்று பெயரிட்டான். இது இந்த மூன்று ஆண்டுகளில் ‘அம்மூ’ என்று பெயர் பெறும் ஐந்தாவது ஆட்டுக்குட்டி.
எந்தவகை
ஆடுகள் கொடுக்கப்பட்டாலும், அவ்வகை ஆடுகளைக் கேள்வி கேட்காமல் மேய்த்துத் தரும் செந்திலைப்போல, கேள்வி கேட்காமல் இக்காலகட்டத்தில் அதிகமாக நுகரப்படுவது ‘OTT’ (Over-The-Top) தளங்கள் எனலாம். இன்றைய காலத்தில் இணைய உலகில் அதிகமாகப் பேசு பொருளாக மாறியிருப்பது நெட்ஃப்ளிக்ஸ் (Netflix), அமேசான்
பிரைம் வீடியோ (Amazon Prime viedo), டிஸ்னி
பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney +Hotstar) போன்ற
OTT தளங்களே
ஆகும். உலகத் திரைப்படங்களிலிருந்து இணையத் தொடர்கள் (Web-series)
மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் வரை அனைத்தையும் விரும்பிப் பார்க்கும் தளமாக அது விளங்குகிறது. பல ஆண்டுகளாகக் கேபிள்
டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குறிப்பாக, இளைய தலைமுறையினர் இந்தத் தளங்களையே விரும்புகின்றனர்.
செயற்கைக்கோள்
ஒளிபரப்பு (satellite
transmission) மற்றும் கேபிள் வழி ஒளிபரப்பு (cable
transmission) முறைமைகள் இன்று மாற்றம் கண்டுள்ளதை, ‘காரட் கட்டிங்’ (Cord-cutting)
என்கின்றனர். புற்றீசல்போல அதிகரிக்கும் O.T.T. தளங்கள்
ஒரு தனிமனித விருப்பத்திற்கேற்ப (Personalized Viewing Experience) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யார், எதை, எப்போது பார்க்க விரும்புகின்றார்களோ, அதை அவர் அப்போது பார்க்க முடியும். பல்வேறு மொழிபேசும் பயனர்களுக்கு அவர்களின் மொழியிலேயே காணொளிகளைத் தயாரித்துக்கொடுக்க முடிகிறது. இதனால் பல்வேறு மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் நமக்கு அறிமுகமாகின்றன. நமது பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரச் செழுமைகள் உலகத்தின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
O.T.T. தளங்களைக்
காலத்தின் கொடை என நம்பி அப்படியே
ஏற்றுக்கொள்வதிலும் சிக்கல் இருக்கின்றது. மொழி, கலாச்சார, பண்பாட்டுத் திணிப்பு, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் பல மணி நேரமாகத்
தொடர்ந்து பார்க்க வைப்பது (Binge-watching),
தணிக்கையற்ற வெளியீடுகள் (lack
of regulations), குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகள் போன்ற கூறுகள் OTT தளங்களை ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் விமர்சன அணுகுமுறையோடும் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
ஒவ்வொரு
மக்கள் தொடர்பு ஊடகத்திலும் நன்மையும் தீமையும் புதைந்திருப்பதுபோல, இணையதள OTT தளங்களிலும் அவை காணக்கிடக் கின்றன. OTT தளங்கள் மனித மாண்பைப் போற்றுவதிலும், சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை மையப்படுத்துவதிலும் கருத்தாய் இருந்தால், அதுவே வளங்குன்றா வளர்ச்சியை (sustaina
bility of life) நோக்கி மனிதனை அழைத்துச்செல்ல உதவும் மிகச்சிறந்த தொடர்புக் கருவியாக இருக்கும்.