அழகிய சிட்டுக்குருவி ஒன்று பறக்க இயலாமல் தாவித்தாவி அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட சிறுவன் ஒருவன் அதனைப் பிடித்து வளர்க்கலாம் என நினைத்து வீட்டிற்கு எடுத்துவந்தான். தன் அன்னையிடம் கொடுத்தான். அன்னையானவள் குருவி ஏன் பறக்க இயலவில்லை என்று சிறகின் தூவல்களைப் பிரித்துப் பார்த்தபோது ஒரு நீளமான நெகிழி (Plastic) நூல் சிக்கி இருந்தது. அதனை மெதுவாக எடுத்துவிட, கண்ணிமைக்கும் நேரத்தில் குருவி சிட்டாய்ப் பறந்து சென்றது.
அன்னை
தன் மகனிடம் “பார்த்தாயா? நாம் ஒரு சிறிய தீச்செயலில் ஈடுபட்டாலும் நம் வாழ்வு குறிக்கோளினை அடைந்துவிட இயலாது. அதனால் பெருந்துன்பங்கள் அடைந்து வேதனைப்பட நேரிடும்”
என்றுரைத்தாள்.
ஆம்,
நம் வாழ்வில் குறிக்கோளினை அடைந்திட வேண்டுமெனில் நமது விருப்பங்கள், நாட்டங்கள், விருப்பு-வெறுப்புகள், செல்வம், புகழ், பதவி, அந்தஸ்து இவை அனைத்தும் நிலையானவை அல்ல என்ற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். “அனைத்தையும் நான் குப்பை எனக் கருதுகின்றேன்” என்று
தூய பவுல் தனது திருமுகத்தில் குறிப்பிடுகின்றார். வெறுமையிலிருந்து படைக்கப்பட்டான் மனிதன். திரும்பவும் வெறுமையை நோக்கிதான் பயணம் செய்கின்றான். இதனிடையே தன் வாழ்வில் ‘என் வீடு, என் உறவு, என் நாடு, என் மொழி, என் உலகம்’ என்று நம் மனத்தினுள் பெரிய பெரிய கோட்டைகளைக் கட்டி விடுகிறோம். இவற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஆனால், ஒருசிலர் இவ்வுலக நாட்டங்களிலிருந்து தங்களையே விடுவித்துக் கொண்டு இறைவனுக்காக, இறைமக்களுக்காகத் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டு தனியாகவோ, குழுமமாகவோ வாழ்ந்து மகிழ்கின்றனர்.
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக
பற்று விடற்கு’
(குறள் 350)
எனும்
திருக்குறளைத் திருவள்ளுவர் ஏழு பதங்களில் இரண்டடிகளில் பற்றற்ற வாழ்வினைப் பற்றித் தெளிவாக எடுத்தியம்புகின்றார். எல்லாம் வல்ல இறைவனைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவன்தான் துறவு வாழ்வை மேற்கொள்பவன் என்று விளக்குகிறார்.
பற்றற்ற
வாழ்வு அமைதியையும் மகிழ்ச்சியையும் நிறைவான ஆன்மிக வாழ்வினையும் வழங்குகின்றது. நேர்மறையான செயல்பாட்டிற்கும் ஆரோக்கியமான சமநிலைக்கும் வித்திடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்தான் புனித குழந்தை தெரஸ். சிறுவயதிலேயே இறைவனை அன்பு செய்ய வேண்டும், அவரோடு வாழ வேண்டும் என்ற ஆழமான உணர்வினால் உந்தப்பட்டவளாய், தந்தை, சகோதரிகள் இவர்களை விட்டுப் பிரிந்து தனது பதினைந்தாவது அகவையில் கார்மேல் துறவு வாழ்வு வாழ நாட்டம் கொண்டாள்.
‘அன்பு ஒன்றுதான் நம்மைக் கடவுளுக்கு உகந்தவர்களாக்குகிறது; அன்பின் பொருட்டு என் வீட்டு உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்தும் அந்தத் தியாகத்தை நான் ஒரு பொருட்டாய் எண்ணவில்லை’ என்று
தனது பற்றற்ற வாழ்வின் தன்மையை உணர்த்துகிறாள்.
‘இவ்வுலகில் எவ்வகை ஆறுதலையும் இழந்தவளாய் வாழ்வதே எனக்குப் பேரின்பம்’
என்று தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகின்றாள். பற்றுகளகற்றி இறைப்பற்றில் வாழும்போது மனிதன் புனிதனாகிறான். துன்பங்கள் அனைத்தையும் இறைவன் தரும் வரமாகக் கண்டாள். தனக்கு வந்திருந்த எலும்புருக்கி நோயினைக்கூட தன்மீது கடவுள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாக நினைத்தாள்.
இறைவனின்
அரசில் நாம் பங்குபெறும்போது நம் வாழ்வின் குறிக்கோள் நிறைவடைகிறது. இறைவன் கரங்களில் தவழும் பந்து என்றே தன்னை நினைத்துக்கொண்டு இறைத்திட்டம் தன்னில் நிறைவேறட்டும் என்று வாழ்ந்து வந்தவள் தான் ‘சின்ன ராணி’ என்றழைக்கப்படும் தூய குழந்தை தெரேசா!
தெரேசா
இறைவனை முழுமையான அன்பினால் பற்றிக்கொண்டாள். இவ்வுலகம் நிலையானது அல்ல; மற்றொரு வாழ்வு உண்டு என்று எதிர்நோக்கிய தூய குழந்தை தெரேசா, ஒவ்வொரு நொடியையும் விண்ணக வாழ்வினை எதிர்நோக்கியே தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாள். தனது பற்றுக்கோடு தன் தலைவன் இயேசுதாம் என முழுமையாகக் கண்டுணர்ந்தாள்.
இவ்வுலகப் பற்றுகளிலிருந்து நாமும் விடுபட்டு நம்பிக்கை, எதிர்நோக்கு, விசுவாசம் எனும் பண்புகளைப் பற்றிக்கொண்டு நம் வாழ்வு புனிதமடைய நடைபோடுவோம்.