news-details
ஞாயிறு மறையுரை
செப்டம்பர் 14, 2025 பொதுக்காலத்தின் 24 -ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (திருச்சிலுவையின் மாட்சியின் விழா) எண் 21:4-9; பிலி 2:6-11; யோவா 3:13-17 - திருச்சிலுவை கடவுளின் அளப்பரிய அன்பு!

நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உரோமைப் பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் அன்னை புனித ஹெலெனா அவர்கள், கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களைத் தேடி புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம், எருசலேமில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் ஓரிடத்தில் மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்ட சிலுவை எது என்பதை ஆய்வுசெய்ய, மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்த ஒரு பெண் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக, மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்ட சிலுவை எனப் புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.

அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், 335-ஆம் ஆண்டு புனித கல்லறைக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகிய நாள்களில் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அர்ப்பணிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14-ஆம் நாள் திருச்சிலுவையின் மகிமை விழாவெனத் திரு அவையில் கொண்டாடப்படுகிறது.

அன்பானவர்களே! நமது பாவம் மற்றும் உலகின் தீமையைச் சிலுவை மரத்தோடு ஏற்றுக்கொண்டு, உலக மக்களை அன்பால் வெற்றிகொண்ட இயேசு கிறிஸ்துவினுடைய திருச்சிலுவையின் மகிமையை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவ்விழாதிருச்சிலுவையின் மாட்சி, ‘திருச்சிலுவையின் வெற்றி, ‘பெருமைமிகு திருச்சிலுவை நாள், ‘சிலுவை உயர்த்தப்பட்ட நாள்எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

நாம் இந்த உலகில் பிறந்தபோது, நம்மை வரவேற்க நம் பெற்றோர் நம்மீது வரைந்த முதல் வரவேற்பு அடையாளம் சிலுவை. திருமுழுக்கு அருளடையாளம் வழியாக, நம்மைத் திரு அவையில் ஓர் உறுப்பினராகச் சேர்த்திடும் அடையாளம் சிலுவை. நாம் இறந்தபோது நம் கல்லறையின்மீது ஊன்றப்படும் அடையாளம் சிலுவை. இறந்த நாம் அனைவரும் மீண்டும் உயிர்ப்பெற்றெழ இறைமகன் தேர்ந்தெடுத்த அடையாளம் திருச்சிலுவை. பிறப்பு முதல் இறப்பு வரை சிலுவையோடு தொடர்பு கொண்டிருக்கின்றோம். சிலுவை அடையாளம் வரைந்து நாள்தோறும் நமது நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றோம். எங்குச் சென்றாலும் சிலுவையை நாம் மறப்பதில்லை. சிலுவை என்பது நம் வாழ்வில் ஒரு தவிர்க்கமுடியாத நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது. கிறித்தவர்களின் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைந்திருந்திருப்பது திருச்சிலுவை. சிலுவையின்றிக் கிறித்தவத்தைப் புரிந்துகொள்ள இயலாது. திருச்சிலுவை நம்பிக்கையின் அடையாளம்; திருச்சிலுவை வாழ்வின் அடையாளம்; சிலுவை வெற்றியின் அடையாளம்; சிலுவை மீட்பின் அடையாளம்; திருச்சிலுவை அனைத்து நன்மைகளின் ஊற்று. இன்று நாம் கொண்டாடும் திருச்சிலுவையின் மாட்சி விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலில், திருச்சிலுவை என்பது நம் நம்பிக்கையின் அடையாளம். இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச் சுற்றி வந்து, ஓர் என்ற மலையிலிருந்து செங்கடல் சாலை வழியாகப் பயணப்படும்போது மோசேவுக்கும் கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். இறைவனுக்கு எதிராகப் பேசி, பாவம் செய்த மக்களைப் பாம்புகள் கடித்தன. இச்செயல் இஸ்ரயேல் மக்கள் கடவுள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதற்கான அடையாளமாகவும் அமைந்திருக்கின்றது. வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குப் பாலைவனத்தின் வழியாகக் கடந்து சென்ற கடவுளின் மக்கள், தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் சோர்வடைந்தனர். நம்பிக்கையை இழந்த மக்கள் இறுதியில் கடவுளின் வாக்குறுதியையும் மறந்து, வளமான நாட்டை நோக்கி வழிநடத்துகின்றவர் நம் கடவுள் என்பதை நம்பும் வலிமையையும் இழக்கின்றனர்.

கடவுளை நம்பாத மக்கள் பாம்பினால் கடிபட்டது தற்செயலான நிகழ்வு அல்ல; திருவிவிலியத்தில் தொடக்க நூலில் குறிப்பிடப்படும் முதல் பாம்பு ஆதாம்-ஏவாள் இதயத்தில் அவநம்பிக்கையை விதைத்தது. கடவுள் நல்லவரல்லர் என்றும், அவர்களின் மகிழ்ச்சி, சுதந்திரத்தைக் கண்டு பொறாமைப்படுபவர் கடவுள் என்றும் தீய நஞ்சைக் கக்கியது. பாலைவனத்தில் இப்பாம்புகொள்ளிவாய்ப் பாம்பாகதோன்றுகிறது. அதாவது, மீண்டும் மக்களின் செயலால் பாவம் திரும்புகின்றது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பாமல், அவர்களுக்கு வாழ்வளித்த கடவுள் மேல் குற்றம் சுமத்துகின்றார்கள். குழப்பம் விளைவிக்கின்றார்கள். இதனால் தங்களது மரணத்தைச் சந்தித்து நம்பிக்கையற்றவர்களின் முடிவு இதுதான் என்பதை வெளிப்படுத்துகின்றார்கள். ஆக, இன்றைய வாசகத்தின் முதல் பகுதி, நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில், இறைவன்  மீதும் ஒவ்வொரு மனிதர்மீதும் ஏற்பட்ட அவநம்பிக்கையின் தருணங்களை ஆய்வு செய்துபார்க்க அழைக்கின்றது. எத்தனை முறை நம்முடைய மனச் சோர்வு, தோல்வி, விரக்திநிலை, பொறுமையற்ற தன்மை போன்றவற்றால் நமது உள்ளத்தைப் பாலைநிலமாக்கி இருக்கின்றோம்? நம் இதயங்களில் தங்கியிருக்கும் தோல்விகள் மற்றும் சோர்வுகள் இறைவனை நோக்கிப் பார்க்கும் வலிமையை இழக்கின்ற சூழல்களை உருவாக்குகின்றன. இத்தகைய சூழலில் நமது நம்பிக்கையின் அடையாளமாக இருப்பது சிலுவையே என்பதை உணர்கிறோம்.

இரண்டாவதாக, திருச்சிலுவை என்பது நம் வாழ்வின் அடையாளம் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதி நமக்கு உணர்த்துகிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மோசேவிடம் திரும்பி வரும்போது, மோசே ஆண்டவரிடம் மக்களுக்காக மன்றாடுகின்றார். கடவுள் கூறியபடியே மோசே, வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து, அதை ஒரு கம்பத்தில் பொருத்த, அதைப் பார்த்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தனர். நச்சுப்பாம்புகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற மோசேவுக்கு வழிசொல்லும் இறைவன் அப்பாம்புகளை அழிக்கவில்லை. கடவுளின் இச்செயல் மனித வாழ்வில் ஏற்படும் துன்பம், பாவம், அவநம்பிக்கை போன்றவற்றைக் கையாள வழிகாட்டுகின்றது.

கம்பத்தில் பொருத்தப்பட்ட வெண்கலப் பாம்பை நோக்கியோர் அனைவரும் வாழ்வு பெற்றது போன்று, சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை நோக்கிப் பார்த்து, அவர் காட்டும் வழியில் நடப்போர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். இக்கருத்தை இன்றைய நற்செய்தி முன்னுணர்த்துகிறது. “பாலை நிலத்தில் மோசேவால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல, மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கைகொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர் (யோவா 3:14-15).

இன்றைய இரண்டாம் வாசகத்தில், அன்பிற்காக அனைத்தையும் துறந்து, தம்மையே தாழ்த்தி, தம் நிலையை விட்டுக் கீழிறங்கி வந்து, சிலுவைச் சாவுவரை கீழ்ப்படிபவராக இருந்த இயேசுவை, இறைவன் மேலுலகிற்கு உயர்த்தினார் எனப் பவுல் குறிப் பிடுகிறார். எனவே, நமக்காகச் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு, மரணத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் பாம்பின் விசத்தன்மையை அகற்றி, சாவிலிருந்து புதிய வாழ்வுக்கு உயர்த்துகிறார். எனவே, நாம் அவரைப் பார்க்கும் போது பாவம், துன்பம் அனைத்தையும் அதன் ஆற்றலையும் அழித்துவிடுகின்றார் என்பதே இவ்விழா உணர்த்தும் உண்மை

மூன்றாவதாக, திருச்சிலுவை என்பது நன்மைகளின் ஊற்று. நம்முடைய கிறித்தவ வாழ்விற்கான எல்லா நன்மைகளையும் திருச்சிலுவையிடமிருந்து பெறுகின்றோம். திருச்சிலுவையே நமது மீட்பின் பாதை, மறுவாழ்வு மற்றும் உயிர்ப்புக்கான பாதை. சிலுவையில் தொங்கும் இயேசுவிடமிருந்து வெறுப்பை அல்ல, அன்பை, வேறுபாட்டை அல்ல, இரக்கத்தை, பகைமையை அல்ல, மன்னிப்பைக் கற்றுக்கொள்கின்றோம். அவரின் நீட்டிய கரங்கள், இறைவனின் மென்மையான அரவணைப்பை வெளிப்படுத்துகின்றன. அவ்வன்பினை நாமும் மற்றவரிடத்தில் வெளிப்படுத்தவே அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

நான்காவதாக, திருச்சிலுவை என்பது கடவுளின் அளப்பரிய அன்பே. இதுவே கிறித்தவத்தின் வழி. இது பதவி, ஆற்றல், தகுதி போன்றவற்றினால் வருவதல்ல. தம் மக்களுக்காகத் தம் உயிரையே கொடுத்த இயேசுவின் மீட்பின் வழி. தம் உடன் சகோதர-சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படாது, தாழ்ச்சி, உலகளாவிய அன்பு கொண்ட தன்னிகரற்ற வழி. “திருச்சிலுவை ஓர் அலங்காரப் பொருள் அல்ல; இது நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளமும் அல்ல; மாறாக, இது நம் பாவங்களைத் தம்மீது சுமந்த, தம்மையே தாழ்த்திய இறைவனின் பேருண்மைஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (மறையுரை, ஏப். 8, 2014).

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் துளையுண்ட காயங்களிலிருந்து நாம் பிறப்பெடுத்துள்ளோம். எனவே, அன்பால் தீமையை வெல்வோம். இந்நாளில் நம்பிக்கையோடு சிலுவையை நோக்குவோம். சிலுவையை ஓர் அடையாளமாக நம் வீடுகளிலோ, கழுத்திலோ, வாகனத்திலோ மாட்டிவைத்தால் மட்டும் போதாது. அந்தச் சிலுவையையும், அதில் அறையப்பட்டவரின் அன்பையும் ஆழமாக உணர்வோம். அன்பும் அமைதியும் கொண்டு, மகிழ்வான சான்று தரும் புதிய வாழ்வு வாழ்வோம். திருச்சிலுவை என்பது கடவுளின் அளப்பரிய அன்பு!