news-details
கவிதை
பொறுத்தார் இவ்வுலகை ஆள்கின்றார்!

தனை அகழும் நிலம் பொறுத்திட

தணியாத் தாகம் தீர நீர் உறைவையாகிறது!

தன்னைக் கூர்மையாக்கிடவே பென்சில்

தன்னிகரா ஓவியம் கருவாகிறது!

 

தன்னை அழித்து மெழுகுதிரி

தரணியில் தீபமாய் விழுகின்றது!

தன் சுவாசம் அடக்கிய கக்கூன்

தன்னிகராப் பல வண்ணப் பூச்சி ஆகிறது!

 

மடியாத விதை விருட்சம் ஆவதில்லை

மன்னியாத இதயம் மகிழ்வதில்லை

பண்படா நிலம் பலன் தருவதில்லை

பண்ணில்லாப் பாடல்  இனிமை இல்லை!

 

வெட்டியபோது இளநீர் சுவைத்தது

தோலுரித்த போது பழம் சுவைத்தது

உலர்ந்தபோது பூ உதிர்ந்து காய் தோன்றியது

வேனிற் முடிந்தபோது கார் வந்தது!

 

திரிபுகையும் போது நறுமணம் கமழ்ந்தது

தன் வாழ்வினைப் பிறர் பொருட்டு இழந்தபோது

இவ்வுலகில் வரலாறு படைத்து

மறுவாழ்விலும் இவ்வுலகை ஆள்கின்றனர்! 

பொறுத்தார்

இவ்வுலகை ஆள்கின்றார்!