ஓசோன் என்பது ஒரு கிரேக்கச் சொல். இதற்கு ‘நாற்றம் கொண்டது’ என்பது பொருள். ஓசோன் படலத்தை பிரான்சு நாட்டைச் சார்ந்த இயற்பியலாளர்கள் சார்லஸ் ஃபாப்ரி மற்றும் ஹென்றி புயிசன் என்பவர்கள் 1913-ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். ஓசோனை அளவிடப் பயன்படுத்தும் கருவியின் பெயர் ‘ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர்’(Spectro photometer). இதைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து வானியல் ஆய்வாளர் டோப்சன் என்பவராவார்.
ஓசோன்
படலம் படை மண்டலத்தில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 15-35 கி.மீ. தூரத்தில்
பூமியை இளம் நீலநிற குடைபோல் அல்லது ஒரு வலைபோல் சூழ்ந்து நின்று காப்பாற்றுகிறது. எனவேதான், ஐ.நா. சபை
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் நாளை அகில உலக ஓசோன் படல நாளாகக் கொண்டாடுகிறது.
ஓசோன்
படலம் வளிமண்டலத்திலுள்ள படை மண்டலத்தில் (Stratosphere) உருவாகிறது.
படை மண்டலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 10-50 கி.மீ. தூரத்திலுள்ளது.
ஓசோன் மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் (O3)
சேர்ந்த கலவை ஆகும். இது கதிரவனின் ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களைத் (UV) தடுத்து
நிறுத்தி, பூமியில் உள்ள உயிரினங்கள் நோயின்றி வாழத் துணைபுரிகிறது.
ஓசோன் ஓட்டை
என்றால்
என்ன?
உண்மையில்
ஓசோன் படலத்தில் ஓட்டையோ அல்லது துளையோ ஏற்படுவது இல்லை. ஓசோன் படலத்தின் தடிமன் குறைந்து மெலிந்து போவதைத்தான் ‘ஓசோன் ஓட்டை’ என்று அழைக்கிறார்கள். குளோரோ ஃப்ளோரோ கார்பன் (CFC) வளிமண்டலத்திலுள்ள
படை மண்டலத்தைச் சென்றடைகிறது. இது அங்கேயுள்ள புற ஊதாக்கதிர்களால் தாக்கப்படுகிறது. இதனால் மிக அதிகமாகக் குளோரின் வாயுவும், வேறு ஒரு சில வாயுக்களும் உற்பத்தியாகின்றன. இந்தக் குளோரின் வாயு ஓசோன் படலத்தைத் தாக்குவதால், ஓசோன் படலம் தனது இயல்பான தடிமனை இழந்து மெலிந்துவிடுகிறது. இதனைத்தான் ஓசோன் ஓட்டை அல்லது துளை (Ozone depletion)
என்கிறோம். இவ்வாறு மெலிந்து போவதால் ஓசோன் படலத்தால் புற ஊதாக்கதிர்களை முழுமையாகத் தடுக்கவோ அல்லது உறிஞ்சவோ முடிவதில்லை. புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைந்து உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் பல தீமைகளை விளைவிக்கின்றன.
இதில் ஒரு விந்தை என்னவென்றால், குளோரோ ஃப்ளோரோ கார்பனை மரங்களும் தாவரங்களும் சுவாசிப்பதில்லை; மாறாக, மனிதர்கள் சுவாசிக்கின்றார்கள்; விலங்குகளும் சுவாசிக்கின்றன. மேலும், இந்த வாயு தோலில் உள்ள துளைகள் வழியாகவும் உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் நரம்பு மண்டலப் பாதிப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.
புற ஊதாக்கதிர்களால்
ஏற்படும்
தீமைகள்
தோல்
புற்றுநோய், தோல் வறட்சி, தோல் சுருக்கம், வியர்க்குரு ஏற்படுதல், கண்பார்வை மங்குதல், கண் எரிச்சல், கண்ணில் புரை ஏறுதல், கண்ணில் நீர் வறட்சி போன்றவை ஏற்படுகின்றன. புற ஊதாக்கதிர்களின் தாக்குதலால் கடல்வாழ் உயிரினங்கள், கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. பூமியில் வாழும் விலங்குகள், மரங்கள், செடி-கொடிகள் அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது. இத்தனை தீமைகளையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஓசோனில் ஏற்படும் பாதிப்பைச் சரிசெய்ய வேண்டும்.
மாண்ட்ரீல் ஒப்பந்தம்
குளிர்சாதனப்பெட்டிகள்,
குளிரூட்டிகள், ஆழ் உறைப்பெட்டிகள், ஹேர் ஸ்பிரே கேன்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளிலிருந்து வெளியாகும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் என்ற வாயுதான் ஓசோன் படலத்தை வலுவிழக்கச் செய்கின்றன என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். ஆகவே, ஓசோன் படலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்களை நீக்குவதற்கான அனைத்துலக உடன்படிக்கை 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் ஆஸ்திரேலியாவிலுள்ள மாண்ட்ரீல் நகரில் ஏற்படுத்தப்பட்டது. எனவேதான், செப்டம்பர் 16-ஆம் நாள் அனைத்துலக ஓசோன் படல நாளாக நினைவுகூரப்படுகிறது. இந்த உடன்படிக்கையால் குளோரோ ஃப்ளோரோ கார்பன் உற்பத்தி 15 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பம் கொண்ட குளர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. எனினும், ஏற்கெனவே ஓசோன் படலத்தில் தங்கியிருக்கும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் முற்றிலும் அகற்றப்பட 2066-ஆம் ஆண்டுவரை ஆகலாம். ஆதலால், புதிய விடியல் வரும்வரை காத்திருப் போம்! இனிமேலும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் உற்பத்தி ஆகாமலிருக்க விழித்திருப்போம்!