news-details
சிறப்புக்கட்டுரை
தூய குழந்தை இயேசுவின் தெரேசா துறவு வாழ்வுக்கு முன்மாதிரி!

தங்கள் பணியில் இறைவாக்கினர்களாக வாழ்ந்து, தங்களுடைய தனித்துவமிக்க வாழ்க்கையாலும் அர்ப்பணமிக்க செயல்களாலும் கிறிஸ்துவுக்கு உண்மையான சான்றாகத் திகழ்வதும், தங்களது உடனிருப்பாலும் பணிகளாலும் உலகை விழித்தெழச் செய்தவர்களே துறவியர்என மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். இத்தகைய நோக்கத்தோடு  திரு அவையின் வரலாற்றில் காலச்சூழலுக்கேற்ப, இறைவனின் குரலுக்குப் பதில் கொடுத்துப் பணியாற்றிய பல பேராளுமைகளும் துறவு சபைகளும் அவ்வப்போது தோன்றி வளர்ந்தது நமக்குச் சான்றாகும். அத்தகைய ஒரு பின்னணியும் தாக்கமும் தெரேசாவின் வாழ்விலும் இருந்ததை அறியமுடிகிறது.

பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடியாட்சியை வீழ்த்தி, அடிமைத்தனங்களை அகற்றி, அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்று விடுதலை விழுமியங்களை உலகுக்குப் பறைசாற்றி, அதனடிப்படையில் ஒரு மாற்றுச்சமூகத்தை நிறுவுவதற்கான முயற்சியாக அமைந்ததுபிரெஞ்சுப் புரட்சியால் திரு அவை அதன் அதிகாரத்தை இழந்து நின்றதுபல துறவற சபைகளும் முடக்கப்பட்டிருந்தனதெரேசாவின் காலத்தில் திரு அவை பல்வேறு அழுத்தங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில், ஐரோப்பாவில் பகுத்தறிவுச் சிந்தனைகளும் நேர்மறைச் செயல்பாடுகளும் பொருளாதார வளர்ச்சியும் சமயத்தைப் பற்றிய விமர்சனங்களும் வளர்ந்து, அனைத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகும்போக்கு உருவானது. இத்தகைய சிந்தனையின் தாக்கம் தெரேசாவின் வாழ்விலும் பார்வையிலும் வெளிப்பட்டதை அவருடைய துறவு வாழ்வின் பயணத்தில் நம்மால் உணர முடிகிறது.

கடுமையான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதே புனிதம் எனக் கருதுபவர்களும், பொறுமையோடு இருப்பது இறைவனுக்கு ஏற்புடையது என நினைப்பவர்களும் அன்றும் இன்றும் உள்ளனர். ஆனால், தெரேசாவும் அவருடைய தந்தையும் அந்தச் சட்டங்கள், ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு எடுத்தத் தொடர் முயற்சிகளும், அதன்மூலம் பெற்ற வெற்றிகளும் நம்மை வியக்க வைக்கின்றன. இதன்மூலம் கண்மூடித்தனமாக ஒழுங்குகளைப் பின்பற்றுவதும், அவைகளுக்காக அடங்கிப் போவதும் ஆன்மிகமல்ல; மாறாக, இறை விருப்பத்தைத் தேர்ந்து தெளிவதே சிறந்தது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

உலகை உருமாற்றும் உன்னதமான பணியை ஆற்ற அழைக்கப்பட்டிருக்கும் துறவியர், இன்றைய காலகட்டத்தில் அப்பணியை ஆற்றுவதற்குச் சிறந்த அமைப்பு, வாழ்க்கைமுறை எது என்பதைத் தேர்ந்து தெளிந்து, அதற்குப் பயன் தராத அமைப்புகளையும் பாரம்பரியங்களையும் புறந்தள்ளி, சரியான இலட்சியங்களை அடைவதற்கான முயற்சிகளை இடைவிடாமல் முன்னெடுக்க நமக்குக் கற்றுத் தருகிறார் தெரேசா.

விவிலிய மையவாழ்வு

கார்மேல் சபையின் மரபுகளையும், தூயவர்களான அவிலா தெரேசா, சிலுவை யோவான் இவர்களது ஆன்மிகத்தையும், அடைபட்ட கார்மேலில் வாழத்துவங்கிய தெரேசா, திருவிவிலியம் பரவலாக்கப்படாத அக்காலத்திலும் இறைவார்த்தை மீது தீவிர ஆர்வம் கொண்டு இறைவேண்டல் சமயங்களிலும் தியானங்களிலும், ஆன்மிக வாசிப்பு வேளைகளிலும் இறைவார்த்தையை வாசித்து, சிந்தித்துத் தியானித்தார். அதன் விளைவாக, இயேசுவின் வாழ்வும் செயல்பாடுகளும் அவர் வாழ்ந்த சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ஏழையர், துன்புறுவோர், கரிசனைக்குரியோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு இயேசு காட்டிய அன்பு, பரிவு புதிய வெளிச்சங்களையும் விளக்கங்களையும் கொடுத்தன. அதன் மூலமாகப் பல்வேறு வடிவங்களில் சிதறிக்கிடந்த அவருடைய பார்வை கூர்மையாக்கப்பட்டு, தனது வாழ்வைச் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப் பெரிதும் துணைபுரிந்ததுஅதன் மூலமாக இறைவார்த்தையை மையப்படுத்திய புதிய பார்வையையும் புதிய வாழ்வையும் தான் பெற்று வாழ்ந்ததோடு, அதனை அன்பின் பாதையாக உலகிற்கும் வழங்கினார்; எனவேதான் தெரேசாவைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், ‘அன்பின் அறிவியல் நிபுணர்என்கிறார்.

கார்மேலில் தெரேசாவின் மாதிரி

சிறுமலர்என உலகமே செல்லமாகக் கொண்டாடும் குழந்தை இயேசுவின் தெரேசா இன்று நாம் வாழும் நவீன உலகத்தின் சவால்களுக்கு அர்த்தமுள்ள, பொருளுள்ள வாழ்வு வாழ இன்றைய துறவிகளுக்கு முன்மாதிரியாக மின்னித் துலங்குகிறார் என்பதை, கார்மேலில் அவர் வாழ்ந்த வாழ்வு நமக்குப் பறைசாற்றுகின்றது.

வெற்றி, புகழ், பெருமை, சாதனை, பணம் இவற்றின் சோதனைகள் இறையாட்சிப் பணியாளர்களை ஆக்கிரமிக்கும் சமகாலத்தில், அன்பு, எளிமை மற்றும் மாற்றத்திற்குப் பயன்படாத மரபுகளையும் அமைப்புகளையும் சட்டங்களையும் கடந்து செல்லும் தெரேசாவின் துணிவும் மனபலமும் நமக்கெல்லாம் இன்று உந்துசக்தியாகவே உள்ளது.

தான் வாழும் சூழலில் தன்னோடு துறவு இல்லத்தில் வாழும் தேவையிலிருக்கும் மனிதருக்கு அன்புப் பணியாற்றுவதையே தனது நம்பிக்கை வாழ்வாக ஆக்கிக்கொண்டார் தெரேசா.

குழுமத்தில் நோயாளர்களைப் பேணும் பணியினைப் பரிவோடும் கனிவோடும் செய்து, அவர்களோடு உரையாடுவதையும் உதவுவதையும் இன்முகத்தோடு விரும்பிச் செய்தார்

குழுமத்தில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் கசப்பான துன்பங்களையும் புரிந்துகொள்ளாமையையும் குறைசொற்களையும் குழும மகிழ்வுக்காகப் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு அவற்றை அர்ப்பணித்து, துறவு வாழ்வுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தூய குழந்தை இயேசுவின் தெரேசா.

குழும வாழ்வில் உறவுச் சிக்கல்களும் உணர்வுப் பிறழ்வுகளும் சகோதரத் தோழமையும் சுயநலமும் தனிநபர் ஆதிக்கமும் கோலோச்சும் இன்றைய சூழலில், தெரேசா அனைவரையும் அவரவர் இருக்கும் நிலையிலேயே ஏற்று அன்பு செய்து, துன்பம் கொடுத்தவர்களுக்கும் நன்மை செய்து வாழ்ந்த மனநிலை இன்றைய நமது வாழ்வுக்கு உந்துதல்ஏழைகள் மிகுந்து வாழும் நமது நாட்டுச் சூழலில் துறவு வாழ்வு இன்று பெரும்பாலும் அதற்கு எதிர் சாட்சியாகத் திகழ்கிறது. இந்நிலையில் தெரேசா எளிய வாழ்வும், நலிவுற்றவர்பால் பரிவும், தேவையில் இருப்போருக்கு உதவியும் புரிதலே உண்மையான துறவு எனத் தனது வாழ்வால் உரக்கக் கூறுகிறார்.

நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருந்தாலும், அவரது மனம் தொலைதூரத்தில் இருக்கும் மறைபரப்பு நாடுகளிலேயே நிலைகொண்டிருந்தது. உலக நடப்புகளையும் மறைபரப்புப் பணியாளர்களின் வாழ்வுமுறைகளையும் அறிந்துகொள்வதிலும், அவர்களுடைய தேவைகள், பணிகளின் போக்கு இவைகளைப் பற்றி அறிந்து, கடிதத்தொடர்பு மூலம் உற்சாகப்படுத்துவதும் இறைவேண்டல் செய்வதும் அவருடைய பணி ஆர்வத்தை வெளிப்படுத்தின.

மனிதநேயம் கொண்ட ஒரு சமூகத்தை வென்றெடுப்பதற்கு தெரேசாவின் மனம் எப்போதும் துடித்துக் கொண்டேயிருந்ததுஅதனைச் செயல்படுத்த தனது பார்வையை விசாலமாக்கி, உலக நாடுகளை உற்றுநோக்கி, தேவையிலிருப்போருக்காக இறைவேண்டல் மற்றும் தோழமை உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளால் துறவுக்குப் பொருள் கண்டார்.

மரபுகளையும் அமைப்புகளையும் சட்டங்களையும் கூர்ந்துநோக்கி காலத்தின் தேவைக்கேற்ப தனது துறவு வாழ்வால் புதிய பார்வையைக் கொடுத்துஅன்பு வாழ்வுக்கு நமக்கெல்லாம் முன்மாதிரியாக விளங்குகிறார் தெரேசா!