மரியா - பேரருள் களஞ்சியம்! அவர் அருள் மிகப்பெற்றவர் (லூக் 1:28); அருளின் ஊற்று; வளங்களின் வாய்க்கால். அலைகள் மோதும் உலகின், ஆழிப்பெருங் கடலில் ஆதவனைச் சுமந்து வந்த ஓவியமான ஓடம் அவர்!
யோசேப்பைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட தேன்தமிழ்க் காவியம் தேம்பாவணியில், தன் துணையை அறிந்த போது யோசேப்பு...
‘பாருலகு அளித்துக் காக்கப்
பரமனை
உயிர்க்கும் தாயே!
பேருலகு
உவப்பக் கன்னி
பெயர்கிலள்
பெறுவாள் ஆகில்,
ஈருலகு
இறைஞ்சும் அன்னாள்
என்
மணத் துணைவி ஆமோ!’ (7:72)
என்று
மகிழ்ந்து ஏற்றுக்கொண்டதாய் வீரமாமுனிவர் வடிக்கிறார். முன்பொருநாள் உள்ளம் கலங்கிய கணவரை, இன்று உற்றுநோக்கினால் அவர் மனத்துயர் நீங்கும் என அறிந்த அன்னையின்
உதடுகளில்...
‘உருகிய துணைவனை உருகி நோக்கினள்;
பெருகிய
துயர்செயும் பிணிகள் ஏதையா?
மருகிய
அடிமையா வளைவது எது - என
அருகு
இயைந்து அன்புற அறைந்து இறைஞ்சினாள்!’ (7:83)
என்றே
வீரமாமுனிவர் தீட்டுகிறார். அத்தகைய சிறப்பு மிக்க நம் அன்னை மரியா, நமது வாழ்வின் நம்பிக்கை விளக்காக, இயேசுவை அடையும் இனிய வழியாக நம்முடன் பயணிக்கிறார்.
“இறைவன் கண்களில் விலையேறப்பெற்றவராய்...” (எசா 43:4) விளங்கிய அன்னையைத் தூய்மை, தாய்மை, மேன்மை என்னும் அணிகலன்களால் இறைவன் அழகு செய்தார். அன்னையைத் தனக்கு ஏற்ற இனிய இல்லிடமாய் அமைத்து, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாய், மாசில்லாக் கன்னிகையாய், மகிமையின் வாசலாய், திரு அவையின் தாயாய், திருத்தூதர்களின் அரசியாய், புதுமைகள் புரியும் புண்ணியக் கரமாய், பரிந்து பேசும் அட்சயப் பாத்திரமாய், அண்டி வந்தோரின் அடைக்கலமாய் இறைவன் நமக்குத் தந்திருக்கிறார்.
அவ்வாறே,
‘உலகம் மூன்றினும் உவமை நீக்கிய
இலயை
மூன்றினும் இழிவு இல் கன்னியாய்,
அலகு
இல் மூன்றினுள் நடுவ மைந்தனை
நிலவு
மூன்றினும் நிறப்ப ஈன்றனள்’
என்கிறது
மற்றோர் இலக்கியப் படைப்பு. அதாவது, இமயம், பூமி, பாதாளம் எனும் மூன்று உலகங்களிலும் ஒப்புமை இல்லாதவர் மரியா என்றும், பாவம், குற்றம், களங்கு எனும் மூன்று களங்கங்களும் இல்லாத தூய கன்னியாய் வாழ்ந்தவர் என்றும், மூன்று பிறப்புகளுக்கும் மேலான இறை மைந்தனை, இயேசுவைத் தன் கருவறையில் தாங்கி, விண்ணவர், தூயவர், மானிடர் எனும் மூன்று நிலைகளுக்கும் ஒளிதரும் நிலவாகப் பிறந்தார் என்றும் பெருமைப்பட எடுத்துரைக்கிறது.
தான்
உற்றுநோக்குபவருக்குக்
குறைதீர்க்கவும், தன்னை உற்றுநோக்குபவருக்கு நிறைவளிக்கவும் அன்னை வீற்றிருக்கும் குறிப்பிடத்தக்க
திருத்தலங்களில் ஒன்று கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னைத் திருத்தலம்!
இந்நாளில்
திருவுடை அணிந்து, திருச்செபமாலை எடுத்து,
அன்னைக்குப் புகழ் மாலை தொடுக்கும் திருத்தலப் பயணிகளாய், அவர் அருள்வரம் பெறும் அன்புப் பிள்ளைகளாய், அவர் பாதம் கூடுவோம்! அவர் புகழைப் பாடுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்