news-details
சிறப்புக்கட்டுரை
கல்லறை மனிதர்கள்! (வலையும் வாழ்வும் – 28)

அந்தத் தனியார் கல்லறைத் தோட்டத்தில் செங்கல் சூளையில் புதிதாக அறுத்து அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்களைப்போல வரிசையாகக் காணப்பட்டன கல்லறைகள். புதிதாக அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஒன்றில் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தது தந்தையை இழந்திருந்த அந்தக் குடும்பம்.

அடைமழைக்கிடையில் கேட்கும் பள்ளிவாசல் சத்தம்போல அந்த ஒப்பாரி அழுகைக்கு மத்தியில் எங்கிருந்தோ வந்த சிரிப்புச் சத்தம் அந்தக் குடும்பத்தினரை ஆத்திரமடையச் செய்தது. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அதன் சத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ‘எங்கிருந்து சிரிப்புச் சத்தம் வருகிறது?’ என்று கூர்ந்து கவனிக்கும்போது, அங்குக் கல்லறைத் தோட்டத்தின் மூலையில் சில குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

யார் இவர்கள்? இங்கு இவர்களுக்கு என்ன வேலை? ‘அங்க என்ன பண்ணுறீங்க? ஏன் இவ்வளவு சத்தம்? இரண்டு பேரும் இங்க வாங்கஎன்ற தன் தாயின் குரல் கேட்டு இரண்டு குழந்தைகளும் தாயிடம் ஓடிவந்தன.

அந்தக் கல்லறைத் தோட்டத்தில் குடும்பம் ஒன்று கல்லறைப் பராமரிப்புப் பணிகளுக்காகப் பல ஆண்டுகளாக அங்கேயே தங்கவைக்கப்பட்டிருந்தது. கல்லறைத் தோட்டத்தைச் சுத்தம் செய்வது, அந்நியர்கள் உள்ளே வராமல் பார்ப்பது போன்ற பணிகளைச் செய்து வந்தனர்.

அங்கு வாழ்ந்து வந்த ரவி மற்றும் கலா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். பெரியவள் ரூபா, இளையவன் ரூபன். அங்கு ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு அடக்கங்கள் நடக்கின்றன. அழுகைகளும் கண்ணீரும் அங்கு அன்றாடக்காட்சிகள். யாருடைய துயரமும் இந்தக் குடும்பத்தை எப்போதும் துக்கப்படுத்தியதே இல்லை. யாருடைய கண்ணீரும் இவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்ததில்லை. அங்கு யாருக்கும் இறப்பு பற்றிய அச்சம் இல்லை. இரவு நேரத்தில் ஆவி குறித்த பயமும் இல்லை.

இப்படியே நாள்கள் பல ஓடின. ஒன்றுமே விளையாத அந்தக் கல்லறைத் தோட்டத்தில் வாழ்க்கையை விளைவித்துக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

ஐயோ! யாராவது வாங்களேன்...’ ரவி மற்றும் கலாவின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கல்லறைக் காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே வந்து பார்த்தனர். இளைய மகன் ரூபன் இறந்துகிடந்தான். இறப்புக்கான காரணம் தெரியவில்லை. ‘சாயங்காலம் ஐந்து மணிவரை எம் புள்ள நல்லாதான் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டிருந்திச்சு. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான்என்று ரவி விவரம் கேட்க வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, ‘என் பிள்ள எனக்கு வேணும்என்று சொல்லி, தலையிலும் நெஞ்சிலும் பலமுறை கைகளால் அடித்துக்கொண்டு தரையில் விழுந்தாள் கலா.

இறப்புக்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. சிலர்ஆவி ஏதாவது அடிச்சிருக்கும்என்றார்கள். வேறுசிலர்அந்தக் குடும்பத்துல ஒரு சாவு விழாதானு இருந்தேன்; இப்போதாவது அந்தக் குடும்பத்திற்குச் சாவின் வலி புரியட்டும்என்றார் ஒருவர்.

இத்தனை ஆண்டுகள் அந்தக் கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்திருந்தாலும் ரூபனின் உடலை அந்தக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய அந்தஉறவுமுறையார்கல்லறைத் தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

ரூபனின் மறைவிற்குப் பிறகும் வேறு வழியில்லாமல் ரவி-கலா குடும்பம் அந்தக் கல்லறைத் தோட்டத்தில்தான் வசித்து வந்தது. இப்போதெல்லாம் அங்கு யார் இறந்து கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டாலும், அவர்களின் கண்களில் ஒரு சிறு துளி கண்ணீரேனும் வராமல் இருந்த தில்லை. அந்தக் கண்ணீருக்கான காரணம் கடைசிவரை யாருக்கும் புரியவேயில்லை.

புரியாத புதிர்கள் இணைய உலகில் பல உள்ளன. ‘இணைய உலகின் அரசன்என்று அழைக்கக் கூடியகூகுள்தேடுபொறியை (Google Search Engine) ஓர் ஆண்டில் மட்டும் ஐந்து டிரில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையே கூகுள் தேடுபொறியின் மதிப்பைக் கூட்டுவதோடு, இணைய உலகின் ஆட்சிப்பீடத்தில் தொடர்ந்து நீடிக்கச்செய்கிறது. கூகுள் தேடுபொறியின் முதல் பக்கத்தில் எந்தெந்த இணையதளங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றனவோ அந்தந்த இணையதளங்கள் பிரபலமடைகின்றன. இதனால் கூகுளின் தயவிற்காய் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போடுவதோடு நில்லாமல், முதல் பக்க வரிசையில் தங்களின் இணையதளங்களைக் கொண்டு வருவதற்குடிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) நிறுவனங்களுக்குப் பணத்தை வாரி வழங்குகின்றன. ஆனால், இத்தகைய அணுகு முறைகளுக்கெல்லாம் கூகுள் அண்மையில் அறிமுகம் செய்தசெயற்கை நுண்ணறிவு முறை (AI Mode) உலை வைத்துவிட்டது என்றே கூறவேண்டும். ‘Pew Research Centerஎன்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தேடும் முறை 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு வரை இணையதளப் பயனர்களை இழந்திருக்கின்றன என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொருவரும் கல்விக்காக, மருத்துவத்திற்காக, தரவுகளுக்காக, பொழுதுபோக்கிற்காக, இன்னும் பல்வேறு தேவைகளுக்காக இணைய தளங்களின் உரலியை அதாவது இணையதள முகவரியைச் (URL – Unique Resource Locatorசொடுக்கி (click) பயன்படுத்துகின்றனர். ஆனால், இப்போதெல்லாம் பலரும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களையே தேடுதலுக்குப் பயன்படுத்துவதால் சொடுக்கிப் பயன்படுத்தும் முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்றே சொல்லலாம்.

செயற்கை நுண்ணறிவுதேடல் பொறிஇணையத்திலிருக்கின்ற பலருடைய பல்வேறுபட்ட தரவுகளைத் தேடி தன் பாணியில் தருகிறது. ஆனால், எந்த இணையப் பக்கங்களிலிருந்து அல்லது யாருடைய கருத்தை நமக்குத் தருகிறது என்பதை அது பல நேரங்களில் குறிப்பிடுவதில்லை. இதனால், கருத்துருவாக்கத்திற்குச் சொந்தக்காரர்களும், அந்தக் கருத்தைப் பதிவு செய்த இணையதளப் பக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்ற சூழல் உருவாகுகின்றது. இத்தகைய நிலை இணைய உலகில் பெரும் விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

கூகுள் நிறுவனம் இந்த ஆய்வின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்திருக்கிறது. உண்மை எதுவாக இருந்தாலும், தற்போதைய இணையச் சூழலைக் கூர்ந்துநோக்கும்போது பெரும்பாலான இணையதளங்கள் இருளுக்குத் தள்ளப்படுவது உறுதி. இணையதளங்களின் அழிவிற்குக் காரணம், நாம் தவறான லிங்கைக் கிளிக் செய்து விட்டோம் என்பதால் அல்ல; மாறாக, .. யின் வளர்ச்சியினால் கிளிக் செய்வதையே நிறுத்தி விட்டோம் என்பதாலேயே!