news-details
ஆன்மிகம்
திரு அவை எனும் கருவறை (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 23)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு  அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச்செல்வன்: “தந்தையே, கடந்த இரு முறை நாம் கூடியபொழுது திருமுழுக்கு தரும் உறவுகள் குறித்துச் சிந்தித்தோம். உறவுகள் குறித்து நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நான் வாசித்த ஒரு கதை என் நினைவிற்கு வந்தது. காடு ஒன்றில் முள்ளம்பன்றிகள் கூட்டமாக வசித்து வந்தன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குளிர் அதிகமாக இருந்ததன் காரணமாக, முள்ளம்பன்றிகள் ஒவ்வொன்றாக இறக்க ஆரம்பித்தன. எனவே, அந்தக் கூட்டத்தின் தலைவன் அனைத்து முள்ளம்பன்றிகளையும் அழைத்து, ‘கடுமையான குளிரை எதிர்கொண்டு நாம் உயிர்வாழ வேண்டுமெனில், இரவு நேரத்தில் நாம் மிக நெருக்கமாகக் கூடிவந்து நம் உடலில் வெப்பம் குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்என்று ஆலோசனை கூறியது. தலைவனின் ஆலோசனையை ஏற்று முள்ளம்பன்றிகள் இரவு நேரத்தில் மிகவும் நெருக்கமாகக் கூடிவந்தன. உடனே முள்கள் ஒன்றினை மற்றொன்று  காயப்படுத்த, அதைப் பொறுக்க முடியாத சில முள்ளம்பன்றிகள் தனியே விலகிச் சென்றன. அவை குளிரால் சாகநேரிட்டது. இதைப் பார்த்த அக்கூட்டத்தின் தலைவன் இவ்வாறு மீண்டும் பேசினான்: ‘நண்பர்களே! நமக்கு முன்னால் இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, நெருங்கி வருவதால் ஏற்படும் ஒருசில சங்கடங்களைப் பெரிதுபடுத்தாமல் உயிர்வாழ்வது; மற்றொன்று, சங்கடங்களைத் தவிர்ப்பதாக எண்ணிக்கொண்டு வாழ்வை இழப்பது.’

என்னைப் பொறுத்தவரை, உறவைப் பொறுத்த அளவில் நமக்கு முன்னாலும் இரண்டு வழிகள்தான் உள்ளன: ) அன்பின் பொருட்டு சங்கடங்களை ஏற்று வாழ்வை நிறைவாக வாழ்வது; ) சுகபோக வாழ்விற்காக அன்பைத் தவிர்த்து வாழ்வை வெறுமையாக வாழ்வது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில், எந்த வகையான உறவை எடுத்துக்கொண்டாலும், அதில் சிக்கல்களும் போராட்டங்களும் உள்ளன. இத்தகைய சிக்கல்களையும் போராட்டங்களையும் பெரிதுபடுத்தாமல், ஏற்றுக்கொண்டு வாழக்கூடிய மனப்பக்குவத்தை நம்மில் உருவாக்கிக்கொள்வது அவசியம்.  ‘உறவுகள் இருந்தாலும் பிரச்சினை, இல்லாவிட்டாலும் பிரச்சினைஎன்பதுதான் மானிட வாழ்வு.”

அருள்பணி:நீங்கள் கூறுவதைப் பார்த்தால் உறவிலேயே பிரச்சினை இருக்கிறது என்பதுபோல இருக்கிறது. அது உண்மையல்ல! உறவில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம் அணுகுமுறையால் வருபவை. உறவு வாழ்வில் சரியான அணுகுமுறை கொண்ட மனிதர்கள் உறவைக் கொண்டாடுகின்றனர். சரியான அணுகுமுறை கொள்ளாத மனிதர்கள் திண்டாடுகிறார்கள்.”

மார்த்தா:கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா, தந்தையே?”

அருள்பணி:ஒவ்வொரு உறவிலும் உரிமைகளும் உண்டு, கடமைகளும் உண்டு. நம் உறவுகளின் மட்டிலான கடமைகளை நாம் சரியாகச் செய்யாததாலும், அக்கடமைகளைச் செய்தாலும், அவற்றைச் சரியான மனநிலையோடு செய்யாததாலும், உறவுகள் இன்று பிரச்சினைக்குரியவையாக மாறிவருகின்றன. நம் உறவுக் கடமைகளைச் சரியான மனநிலையோடு செய்தோமென்றால், உறவுகள் தரும் உரிமைகளை நிறைவாக நம்மால் அனுபவிக்க முடியும். ஆனால், பலரது பிரச்சினை என்னவென்றால், உறவுகள் தரும் உரிமைகளையும் மகிழ்வையும் அனுபவிக்க விரும்புகின்றனர். ஆனால், உறவுக்குரிய கடமைகளைச் சரிவர செய்ய விரும்புவதில்லை. அப்படியே செய்தாலும், அவற்றைச் சரியான மனநிலையோடு செய்வதில்லை.”

கிறிஸ்டினா: தந்தையே! திருமுழுக்கு அருளடையாளம் வழங்கக்கூடிய ஒரு மாபெரும் கொடைகடவுளின் பிள்ளைஎன்கின்ற கொடை! அது குறித்து உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.”

அருள்பணி: திருமுழுக்கு அருளடையாளம் வழியாக நாம் ஒவ்வொருமே கடவுளின் மகனாக, மகளாக மாற்றப்படுகிறோம். இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றபோதுஎன் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மத் 3: 17) என்று தந்தையாகிய கடவுள் கூறிய வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்ப்பது அவசியம். திருமுழுக்குப் பெறும் ஒவ்வொரு மனிதரும் கடவுளது சொந்தப் பிள்ளையாகத் தத்து எடுக்கப்படுகின்றனர். திருமுழுக்கு நிகழ்வை நாம்இரண்டாம் பிறப்புஎன்றுகூடக் கூறலாம். அதாவது, முதல் பிறப்பில் நம் பெற்றோர்களுக்கு நாம் பிறந்தோம்; திருமுழுக்கில் நாம் கடவுளின் பிள்ளைகளாக மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.”

அன்புச் செல்வன்:தந்தையே, புனித மாக்ஸி மிலியன் கோல்பே (St. Maximilian Kolbe) ‘திருமுழுக்கு என்கின்ற நீராட்டால் ஒவ்வொரு குழந்தையும் மறுவுரு பெறுகிறதுஎன்றார்.”

அருள்பணி: அதேபோல புனித வின்சென்ட் பெரர் (St. Vincent Ferrer) ‘திருமுழுக்கு நிகழ்வின்போது திரு அவை என்ற கருவறையில் ஆதாமின் பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகளாக உருமாற்றம் பெறுகின்றனர். இதைத் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மனத்தில் நிறுத்துவது அவசியம்என்கின்றார்.”

அகஸ்டின்:நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறோம் என்பதன் பொருள் என்ன தந்தையே?”

அருள்பணி:ஏனைய உறவுகளுக்கு இருப்பது போலவே இந்த உறவுக்கும் உரிமைகளும் உண்டு; கடமைகளும் உண்டு. இரண்டு உரிமைகள், இரண்டு கடமைகளைப் பற்றி நாம் பார்க்கலாம். முதலில் உரிமைகளைப் பற்றிப் பார்க்கலாம். முதலாவதாக, நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற முறையில் எந்நாளும் நம் சார்பாகச் செயல்படும் கடவுளை (h)ம் தந்தையாகப் பெற்றுக் கொள்கிறோம். கிறித்தவர்களாகிய நாம் எந்தக் காலத் திலும், ‘எனக்கென்று யாரும் இல்லை; நான் தனியாகத் துன்பப்படுகின்றேன்என்று கூறவே கூடாது. நம் தந்தையாகிய கடவுள் நம் கூடவே இருந்து நம் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலை நமக்குத் தருகின்றார்.”

மார்த்தா:தந்தையே! புலனத்தில் (Whats app) நான் வாசித்த செய்தி ஒன்றை நினைத்துப் பார்க்கின்றேன்: ‘உங்கள் வாழ்வில் பிரச்சினைகள் வருகின்றபோது கடவுளை நோக்கி, ‘கடவுளே, எனக்குப் பெரிய பிரச்சினை இருக்கின்றதுஎன்று கூறாதீர்கள்; மாறாக, பிரச்சினையைப் பார்த்துஎன்னோடு பெரிய கடவுள் இருக்கிறார்என்று கூறுங்கள். நானும் இவ்வாறு ஒருசில முறை கூறியிருக்கிறேன். பிரச்சினையின் கனாகனம் பல மடங்கு குறைந்திருப்பதை உணர்ந்தும் இருக்கின்றேன்.”

கிறிஸ்டினா:அடுத்த உரிமை என்ன தந்தையே!”

அருள்பணி:தந்தையின் தன்மை கள் மகனுக்கு வந்தடைகின்றன என்கிறது உளவியல். தந்தையின் சொத்துகள் மகனுக்கு வந்தடைகின்றன என்கிறது சமூகவியல். எனவே, கடவுள் தம்மிடம் உள்ள அத்தனை தன்மைகளையும் கொடைகளையும் நமக்கு வாரி வழங்குகின்றார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட மானிட வாழ்வை நலமாகவும் வளமாகவும் நிறைவாகவும் நாம் வாழும் பொருட்டு கடவுள் தம் கொடைகள் யாவற்றையும் நமக்குத் தருகிறார். ஊதாரி மைந்தன் உவமையில் தந்தை தன் மூத்த மகனைப் பார்த்து, ‘மகனே, என்னுடையதெல்லாம் உன்னுடையதே (லூக் 15: 31) என்று கூறியது நினைவுகூரத்தக்கது. கடவுளது அருள் வளங்களும் ஆற்றல்களும் நமக்குத் திறந்த பெட்டகமாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் கொடுக்கப்பட்ட அருள்வளங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்துவதில்லை. நாம் கடவுளின் மகன், மகள் என்கின்ற உண்மையை உணராததன் காரணமாகவும், மகன் தன்மைக்கு ஏற்ப வாழாததன் காரணமாகவும், கடவுள் வழங்கக்கூடிய  கொடைகளை நமதாக்க மறந்து விடுகிறோம் அல்லது மறுத்து விடுகின்றோம்.”

அகஸ்டின்:கடவுளுக்கும், நமக்கும் இடையேயான தந்தை-மகன் உறவில் நமக்குள்ள கடமைகள் எவையெவை தந்தையே!”

அருள்பணி:முதலாவதாக, நாம் கடவுளின் மகனாக, மகளாக இருக்கின்றோம் என்ற உண்மையை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம். நம்மில் பலருக்கு நினைவு மறதி நோய் (amnesia) உண்டு. ‘நம் உண்மை இயல்பு என்ன?’, ‘நாம் யாரிடமிருந்து வந்திருக்கின்றோம்?’, ‘கடவுளுக்கும் நமக்கும் இடையேயான உறவு என்ன?’ என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகின்றோம்.

இரண்டாவதாக, மகனுக்கு, மகளுக்குரிய மனப்பக்குவங்களை நமக்குள் வளர்த்துக்கொள்v வது. ஊதாரி மைந்தன் உவமையில், தன்னுடையது எல்லாம் தன் மகனுக்கும் சொந்தமானது என்று தந்தை நினைத்திருந்தாலும், மூத்த மகனுக்கு அத்தகைய மனப்பக்குவம், அதாவது மகனுக்கு உரிய மனப்பக்குவம் இல்லை. தன்னைஅடிமை (லூக் 15:29) போன்றுதான் நினைத்திருந்தான். எனவேதான், ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட எடுத்து தன் நண்பர்களுடன் விருந்து கொண்டாடத் தயங்கியிருந்தான்

இதற்கு நேர்மாறாக மகனுக்குரிய தன்மையை முழுமையாக உணர்ந்து இருந்தவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. தம் குருத்துவச் செபத்தில்என்னுடையதெல்லாம் உம்முடையதே! உம்முடையதும் என்னுடையதே (யோவா 17:10) என்கின்றார். தந்தையின் செல்வங்களைத் தமதாக்கி, வாழ்வை முழுமையாகவும் நிறைவாகவும் வாழ்ந்தார்.”

(தொடரும்)