ஒடிசா மாநிலத்தில் கிறித்துவச் சமூகத்தினர் மீதான தொடர்ச்சியான வன்முறைக்கு எதிராக ஆயர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். ரூர்கேலா உள்பட பல நகரங்களில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கத்தோலிக்க, புரோட்டஸ்டண்ட் மற்றும் பிற சபைகளின் தேவாலயங்கள் என 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்தனர். ரூர்கேலா ஆயர் கிஷோர்குமார் குஜூர், “ஒன்றுபட்ட கிறித்தவர் மன்றத்தின் (United Christian Forum) தகவலின்படி, இந்தியாவில் தினமும் சராசரியாக இரண்டு கிறித்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காகவே தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்நிலை மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது” என்றார்.