திரு அவையில் சரிபாதியினர் பெண்கள். திருவழிபாடுகளில் அதிகம் பங்கெடுப்போரும், குடும்பத்தில் நம்பிக்கையின் முதல் தூதுவர்களும் அவர்களே. திரு அவையின் நீண்ட வரலாற்றில் எண்ணற்றப் பெண்கள் மறைத்தூதர்களாகவும் இறையியலாளராகவும் பணியாற்றியுள்ளனர்; புனிதர்களாகவும் இறையிணைவு அருள்வாழ்வினராகவும் திகழ்ந்துள்ளனர். இன்று திரு அவை நிறுவனங்களிலும், மறைமாவட்ட மற்றும் உரோமைத் தலைமைச் செயலகங்களிலும் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் உளர். பங்குத் தளங்களிலும் அன்பியங்களிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுபவர்களும் அவர்களே. அனைத்திற்கும் மேலாக, முன்னணிக்கு வந்து முகம் காட்டாமலும், அதிகம் கண்கொள்ளப்படாமலும், பணித்தளங்களில் பெரும்பான்மையான அடிப்படைப் பணிகளை ஆற்றுபவர்களும் அவர்களே.
“இருப்பினும், திரு அவையின் வாழ்வுசார்ந்த பல்வேறு துறைகளில் தங்கள் அருங்கொடைகளும் அழைப்பும் இடமும் ஏற்கப்படுவதில் பெண்கள் இன்னும் பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.
இது அனைவராலும் பகிரப்படவேண்டிய திரு அவையின் பணியை அவர்கள் ஆற்றுவதற்கு இடையூறாக உள்ளது”
(இஅ 60). இதனால் மாமன்றம் திரு அவையில் அனைத்துத் துறைகளிலும் பெண்களுடைய முழுமையான பங்களிப்பை வளர்க்கும் வகையில் புதிய சில பார்வைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
மாண்பிலும் பணிப்பொறுப்பிலும்
சமமானவர்கள்
கடவுள்
பெண்ணை ஆணுடன் இணைத்தும், ஆணுக்கு இணையாகவும் தமது உருவிலும் சாயலிலும் படைத்தார். இயேசுவும் இறையாட்சி பற்றிப் பெண்களுடன் உரையாடுகிறார்; தம் சீடர்கள் குழுமத்தில் அவர்களையும் இணைத்துக்கொள்கிறார். அவரது நலமளிக்கும் ஆற்றலையும் விடுதலையையும் அவர் மதித்து ஏற்றுக்கொண்டதையும் அனுபவித்த சில பெண்கள் கலிலேயாவிலிருந்து எருசலேம்வரை அவருடன் இணைந்து பயணித்தனர் (லூக் 8:1-3). மகதலா மரியா எனும் பெண்ணையே அவர் தமது உயிர்ப்புச்செய்தியின் முதல் அறிவிப்பாளராக அனுப்பிவைத்தார்.
மேலும்,
திருமுழுக்கின் வழியாக இறைமக்கள் சமூகத்தில் உறுப்பினர்களாக இணையும் பெண்கள், கிறிஸ்துவில் ஆண்களுக்கு இணையான மாண்பாலும், தூய ஆவியார் பொழியும் பல்வேறு அருங்கொடைகளாலும் அணிசெய்யப்படுகின்றனர். இதனால் “நாம் அனைவரும் கிறிஸ்துவின் அன்பிலும், போட்டியற்ற உறவின் ஒன்றிப்பிலும், திரு அவையின் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் செயலாக்கம் பெறும் கூட்டுப்பொறுப்பிலும் வாழ இணைந்து அழைக்கப்பட்டுள்ளோம்” (முஅ
9டி).
ஆண்களுக்கும்
பெண்களுக்கும் இடையிலான இத்தகைய அருமையான உறவுப் பரிமாற்றத்தை மாமன்றக் கூடுகையில் பங்கெடுத்தோர் அனுபவித்தனர். அருள்பணி மற்றும் அருளடையாளக் கண்ணோக்குடன் பெண்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களுடன் இணைந்து பயணிக்கவும் திரு அவை இன்னும் அதிகத் திட்டவட்டமான ஈடுபாடு காட்டவேண்டும் எனவும் அவர்கள் எடுத்துரைக்கின்றனர் (முஅ 9ந).
ஏனெனில்,
பெண்கள் பல்வேறு தளங்களில் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், அருள்வாழ்வு அனுபவங்களையும் பகிர விரும்புகின்றனர். பாலியல் வன்முறை, பொருளாதாரச் சமத்துவமின்மை, பொருள்களாக நடத்தப்படும் போக்கு என்பன நிலவும் சமூகங்களில் பெண்கள் நீதிக்காகக் குரலெழுப்புகின்றனர். இச்சூழமைவுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் திரு அவையின் அருள்பணிசார் பயணித்தலும், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் இணைந்து செல்லவேண்டும்.
திரு
அவையில் பெண்களின் இடம், பணி, அவர்களுக்குத் திரு அவை ஆற்றவேண்டிய பணிகள் என்பவற்றிற்கு மாதிரி காட்டுபவர் இறைமகன் இயேசுவின் அன்னையாகவும், சிறந்த நம்பிக்கையாளராகவும் திகழ்ந்த நாசரேத்தூர் மரியா. கடவுளின் குரலைக் கேட்பதற்கும், தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குத் திறந்த உள்ளத்துடன் இருப்பதற்கும் அவர் அனைவருக்கும் சிறந்த மாதிரி காட்டுகிறார். குழந்தைப் பேறு, பாலூட்டி வளர்த்தல் என்பனவற்றின் மகிழ்ச்சியையும் ஏழ்மை, அகதியாதல், மகனின் கொடிய கொலை என்பனவற்றின் துயரத்தையும் தன் மகனின் உயிர்ப்பு, பெந்தகோஸ்து என்பனவற்றின் மாட்சியையும் அனுபவித்தறிந்தவர் அவர்.
அருள்பணியாளர்கள்
மற்றும் ஆயர்களின் பணிகள் பற்றிப் பெண்கள் பலர் ஆழ்ந்த நன்றி தெரிவிக்கின்றனர். அதேவேளையில், அருள்பணியாளர் ஆதிக்கம், ஆணாதிக்கம், அதிகார அத்துமீறல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் என்பனவற்றால் திரு அவையில் தாங்கள் புண்படுவதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இவை தொடர்ந்து திரு அவையின் முகத்தைக் கறைபடுத்துவதுடன், அதன் ஒன்றிப்புறவையும் சிதைக்கின்றன. மேலும்,
திரு அவையில் ஆண் - பெண் உறவுகளில் மாண்பும் நீதியும் மறுக்கப்படும்போது, உலகின் பார்வையில் நமது நம்பிக்கை அறிக்கை நம்பகத்தன்மையை இழக்கிறது. நீதியையும் நலப்படுத்தலையும் ஒப்புரவையும் கோருகின்ற இச்சூழமைவில் உள்ளங்கள், உறவுகள் மற்றும் அமைப்புகளிலும் மாற்றங்கள் அவசியமாகின்றன.
செயல்படுத்தச்
சில
பரிந்துரைகள்
1. திரு
அவையின் வாழ்வு மற்றும் திருத்தூதுப் பணி சார்ந்த அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஏற்று மதிக்கப்படவேண்டும், அவர்களது தலைமையும் வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனும் கோரிக்கை உலகெங்கும் உள்ள திரு அவைகளிலிருந்து எழுந்துள்ளன. பெண்களிடம் காணப்படும் திறமைகளையும் அருங்கொடைகளையும் அருள்பணிசார்ந்த தேவைகளுக்கு ஏற்ப இன்னும் அதிகமாகப் பயன்படுத்தும் வகையில் பல்வேறு பொறுப்புகளையும் திருப்பணிகளையும் அவர்களுக்கு வழங்குவது பற்றி அதிகம் சிந்திக்கவேண்டும்; தேவைப்படின் புதிய பணிகளையும் ஏற்படுத்தலாம்.
2. பெண்கள்
திருத்தொண்டர் பணி ஆற்றுவது தொடக்கத் திரு அவையில் நடைமுறையில் இருந்தது. அது இன்றைய காலத்தின் அறிகுறிகளுக்குச் சரியான பதிலிறுப்பாகவும் அமையக்கூடியது. மேலும், அது திரு அவைக்குப் புதிய ஆற்றலும் உயிரோட்டமும் தரக்கூடியது. இக்காரணங்களால் இன்று பெண்களுக்குத் திருத்தொண்டர் பணியைத் தருவது எனும் கருத்திற்குப் பரவலான ஆதரவு இருந்தது. இருப்பினும், அது மரபுக்கு முரணானது எனும் காரணமும் அதற்கு எதிராகக் கூறப்பட்டது. இறுதியாக, அது பற்றி இன்னும் ஆழமான திருவிவிலிய, வரலாற்று, இறையியல் ஆய்வுகள் தேவை என முடிவெடுக்கப்பட்டது.
3. தலத்திரு
அவைச் சூழமைவுகளில் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்குச் செவிமடுத்து, அவர்களுடன் பயணித்து உதவிட அத்திரு அவைகளை மாமன்றம் ஊக்குவிக்கிறது.
4. முடிவெடுக்கும்
அருள்பணிசார் நடவடிக்கைகளிலும் திருப்பணிகளிலும் அதிகாரம் உள்ள பொறுப்புகளுடன் பெண்கள் பங்கேற்பது உறுதி செய்யப்படவேண்டும். உரோமைத் தலைமைச் செயலகப் பொறுப்புகளில் பெண்கள் பலரைத் திருத்தந்தை நியமித்துள்ளதுபோல, மறைமாவட்டங்களிலும் பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் இடம்பெற வேண்டும். இதற்கு வழிசெய்யும் வகையில் திரு அவைச் சட்டத்திலும் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
5. திரு
அவையில் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாகப் பெண் துறவியருக்கு, வேலை ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்படுவதும் குறைந்த ஊதியம் தரப்படுவதும் சரிசெய்யப்படவேண்டும்.
6. உருவாக்கப்
பயிற்சித் திட்டங்களிலும் இறையியல் கல்வியிலும் பங்கேற்கப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். திரு அவை சட்டமுறை நடவடிக்கைகளில் நடுவர்களாகச் செயல்பட உரிய உருவாக்கம் பெண்களுக்கும் தரப்படவேண்டும்.
7. திருவழிபாட்டிலும்,
திரு அவை ஆவணங்களிலும் இருபால் பொதுமொழியைப் பயன்படுத்துவதுடன், பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்தும் சொற்களும் உருவகங்களும் நிகழ்வுரைகளும் அதிகம் இடம்பெற வேண்டும். (தொடரும்)