ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனித்த கிளை; அது தன் பிள்ளைகளை அதிகமாகப் பெற்றெடுக்கும். அவ்வாறான நூற்றுக்கணக்கான அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குடையின் கீழ் கிளை துணை அமைப்பாகச் செயல்படும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ‘முஸ்லிம் இராஷ்ட்ரிய மன்ஞ்’ என்ற அமைப்பை உருவாக்கி இஸ்லாமியரையும் விடவில்லை. தன் அடிப்படை அமைப்புகளுக்குக் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே தரும். விசுவ இந்து பரிசத் என்ற அமைப்பு கோவில்களை மட்டுமே கவனித்துக் கொள்கிற அருமையான வேலை. இரத யாத்திரை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு வரை வி.எச்.பி. வழி ஆர்.எஸ்.எஸ். தன் கைவன்மையைக் காட்டியது. கடந்த மாதங்களில் வி.எச்.பி. அமைப்பு ‘அவுரங்சீப் கல்லறை’ என்ற பெயரில் மகாராஷ்டிரா மாநிலத்தையே கலவர பூமியாக்கியது.
வி.எச்.பி. அமைப்பு
இராம ஜென்ம பூமி பிரச்சினை
முடிந்தவுடன் கிருஷ்ண
ஜென்ம பூமி பிரச்சினையைக்
கையில் எடுத்தது. வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஹாஜி இத்கா மசூதி, பதானிலுள்ள ஷம்சி ஜனா மசூதிகளில் வி.எச்.பி.
அமைப்பு பிரச்சினை செய்கிறது. வி.எச்.பி.
அமைப்பு இதுகுறித்த முன்னெடுப்புகளுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற உயர் மத்திய அரசு அதிகாரிகளை அழைத்து ஓர் ஆலோசனைக் கூட்டமும் நடத்தியது.
வி.எச்.பி. அமைப்பு தன் எதிர்காலச் செயல்திட்டம் குறித்த ஒரு பெரும் அறிக்கையைத் தயாரித்து, ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் ஒப்புதல் வாங்கிவிட்டது. அவ்வறிக்கை இந்தியா முழுவதும் உள்ள இந்து கோவில்கள் புதிதாக உருவாக்கப்பட்டு சுதந்திரமான தன்னாட்சி கொண்ட ஒரு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்; அவ்வாரியம் ஆலயங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை நடத்திக் கொள்ளலாம், ஆகமக் கல்வியைப் போதிக்கலாம்,
வேதகல்வி என்ற பெயரில் வேதங்கள், இதிகாசங்கள், சோதிடம், வாஸ்து, ஆயுர் வேதம் கற்றுத்தரலாம். உச்சபட்சமாகச் சமஸ்கிருதம் ‘மொழி கற்பித்தல்’ என்ற
வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இலட்சம்-கோடிகளிலுள்ள கோவில் சொத்துகளை உயர்சாதி பூசாரிகள் கொள்ளையடிக்கச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இவ்வாறு வழங்கப்படும்.
வி.எச்.பி. அமைப்பு ‘சன ஜாக்குருதி சமிதி’ என்ற
ஒரு துணை அமைப்பை உலகெங்கும் தன் செயல் துணையாக வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்து முன்னணி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பு கோவில் கலவர வேலைகளைச் செய்கிறது. மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டு காணொளிக் காட்சியில் அவர்கள் தங்களை இப்படியே அடையாளப்படுத்தினர். தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சியும், அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் போன்றோரும் இக்குழுவைச் சார்ந்தவர்கள்தாம். சாந்தோம் பேராலயத்தில் நுழைந்து அர்ஜூன் சம்பத் சத்தமிட்டது இன்றும் காமெடியாகப் பேசப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் கருத்துருவாக்கப் பணியைச் செய்ய வலதுசாரிகளுடன் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ், அர்ஜூன் முர்த்தி, இரவீந்திரன் துரைசாமி போன்றோரைக் களம் இறக்கியுள்ளது. ‘தினமலர்’ பத்திரிகையும் ஆர்.எஸ். எஸ். அமைப்பின் செயல்திட்டங்களை மக்களிடம் பூசி மெழுகிக் கொண்டு செல்கிறது.
தமிழ்நாட்டில்
1925-இல் நீதிக்கட்சி ஆட்சியில் கோவில் கொள்ளைகளைத் தடுக்க தமிழ்நாடு கோவில் வருமானங்கள் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாகச் செலவிட ‘இந்து சமய அறநிலையத் துறை’ உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நான்கு இலட்சம் ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, பயனுள்ள காரியங்களான பள்ளிகள், கல்லூரிகள், வருவாய் இல்லாத கோவில்களுக்கு நிதி பகிர்வு செய்ததால் அடிப்படைக் காரியங்கள் நடக்கின்றன.
கோவில்
சொத்தைக் கொள்ளை அடிப்பாரும் இல்லை, நகை திருடுபவர்களும் இல்லை. உபயோகப்படுத்தாத நகைகள் உருக்கப்பட்டு அந்தப் பெருந்தொகைகள்
வங்கி வைப்பு நிதியாகி வருவாய் பெருகுகிறது. இவ்வாறான தமிழ்நாடு இந்து கோவில்களை என்ன செய்வது? தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையை என்ன செய்வது? மதுரையில் ‘ஆன்மிக மாநாடு’ என்ற பெயரில் நடந்த மாநாட்டுத் தீர்மானங்கள் தமிழ்நாட்டில் ஆர்.எஸ். எஸ். செயல்திட்டத்தைப் பொதுவெளியில் வெளிச்சம் போடுகிறது.
மாநாடு
தீர்மானம் 1-இன்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். தீர்மானம் 2 - திருப்பரங்குன்றம் குமரனுக்கே சொந்தம்; தீர்மானம் 3 - தமிழ்நாடு கோவில்களிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும். இவ்வாறாக, அவாள் மடியிலிருந்து பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.
இவர்கள்
சனாதனத் தர்மப்படி அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராகப் பணிபுரிவதை எதிர்ப்பவர்கள்; தமிழில் அர்ச்சனை வழிபாட்டு முறையை எதிர்ப்பவர்கள்; தமிழ்க் கடவுள் பெயரில் மாநாடு நடத்தி, தமிழ் பக்தர்களுக்கு எள்முனையளவும் முருகன் மாநாட்டில் அசைக்கவில்லை. இவர்கள் சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரையும் வைகுண்டரையும் ‘சனாதனவாதிகள்’ எனப்
பொய் உரைத்தவர்கள். திருவள்ளுவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர்
சிலைகளுக்குக் காவித் துண்டு, காவிச்சாயம் பூசி மக்களிடம் அவமானம் அடைந்தவர்கள். அவர்களுக்கு உள்ளூர் முகமூடி தேவைப்படுகிறது. அதனால் அ.தி.மு.க.வைத் துணைக்கு
அழைத்து வருகிறார்கள்.
‘திராவிடத்தை வீழ்த்த வேல் கொண்டு வா’ என்ற மாநாட்டுச் சுவரொட்டிகளைப் படிக்கத் தெரியாமல் முருகன் மாநாட்டிற்கு உள்ளே சென்ற நான்கு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் வசமாக
மாட்டிக் கொண்டார்கள். உள்ளூர் செய்தியாளர்கள் தென் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் முருகன் மாநாட்டிற்கு
ஆள்பிடித்துக் கொடுத்தார்கள் எனப் பின்னணியை வெளியே போட்டு
உடைத்தார்கள். முருகன் மாநாட்டில் ‘மதமாற்றத் தடுப்பு’ என்ற பெயரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அ.தி.மு.க. இன்றுவரை மதமாற்றம்
குறித்து, அந்த உறுதிமொழி குறித்து வாய்திறக்க மறுக்கிறது. ‘மதமாற்றத் தடைச்சட்டம்’ என்ற
பெயரால் செல்வி ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க. ஆட்சி இழந்த
வரலாறு மறந்திருக்கலாம். அ.தி.மு.க.விற்கு உள்ள
மென்மையான இந்து மதப்போக்கு வெளிவந்தது. 2025, ஜூன் 23 அன்று பேளூர் ஆதீன விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் கலந்துகொண்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்
வேலுமணி செய்தியாளர்களின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் ‘ஜகா’ வாங்கினார்.
02.12.2022-இல் ஐந்து மசூதிகள் குறித்து வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வழிபாட்டுத்தலங்களில் 1947-ஆம் ஆண்டின் நிலையே தொடரவேண்டும். அதன் அடிப்படையில் மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள் ஒன்று மற்றும் மூன்று அடிப்படை இல்லாதவை, வெற்றி கொள்ளாதவை என்பதே கற்றறிந்தோரின் இறுதி முடிவாகும். தமிழ்நாட்டில் ஏன் பா.ச.க.
அல்லது அவர்களின் அடிமைகள் ஆட்சி வரக் கூடாது? என்பதற்கு ஒரே பதில், இந்து சமய அறநிலையத் துறையைக் கலைப்பது ஓர் ஆதிக்கச் சாதியின் சனாதனத்திற்கு உள்பட்ட வருணாசிரம தர்மத்திற்குக் கோவில்கள் வழி மீண்டும் புத்துயிர் அளிப்பதாகும்.
காவி
அரசியல் தமிழ்நாட்டில் கண்டறியப்படும்.
தமிழ்நாடு மக்கள் என்றும் மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். சமத்துவம், சகோதரத்துவம் பேணுபவர்கள். தமிழர்கள் தங்கள் வாக்குகள்
வழி தம் இன ஒற்றுமையை உலகறியச்
செய்வார்கள்.