news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 24-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (14-09-2025) (திருச்சிலுவையின் மாட்சியின் விழா) - எண் 21:4-9; பிலி 2:6-11; யோவா 3:13-17

திருப்பலி முன்னுரை

திருச்சிலுவையின் மாட்சியைப் பற்றிச் சிந்திக்கத்  திரு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்களின் நம்பிக்கை திருச்சிலுவையாகும். இந்தத் திருச்சிலுவையிலிருந்துதான் நமக்கு மாட்சியும் மகிமையும் கிடைக்கிறது. இந்தத் திருச்சிலுவையிலிருந்துதான் நாம் அன்பையும் அருளையும் இரக்கத்தையும் கருணையையும்  பெறுகிறோம். இந்தத் திருச்சிலுவைதான் மன்னிப்பின் மகத்துவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. ஒரு காலத்தில் சிலுவை அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்டது. கைதிகளுக்கும் கள்வர்களுக்கும் தண்டனையாய் கொடுக்கப்பட்டது. ஆனால், இயேசு என்று சிலுவையைச் சுமந்தாரோ, அன்றிலிருந்து அது வெற்றியின்  அடையாளமாய் மாறியது. சிலுவையே நமது வல் லமை, சிலுவையே நமது ஞானம், சிலுவையே நமது வாழ்வு. துன்பம், துயரம், வேதனை, சோதனை இவையில்லாமல் வாழ்க்கையே இல்லை. அனைத்து நிலைகளிலும் திருச்சிலுவையை உற்றுநோக்கும்போது நமது வாழ்விற்கு வழி கிடைக்கும். கிறித்தவர்களாகிய நமது வாழ்வின் வெற்றியே சிலுவைதான். இயேசுவின் திருச்சிலுவை மாட்சி விழாவைக் கொண்டாடும் நாம் மகத்துவமிக்க சிலுவையின்முன் மண்டியிட்டுச் செபிப்போம். திருச்சிலுவைக்குரிய மரியாதையைக் கொடுப்போம். சிலுவையைத் துன்பமாகப் பார்க்காமல் வெற்றியின் சின்னமாகப் பார்க்கவும்இயேசுவின் அன்பைச் சுவைத்து வாழவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் பாதுகாப்பையும் உடனிருப்பையும் உணராத இஸ்ரயேல் மக்களுக்காக மோசே பரிந்துபேசுகின்றார். ஆண்டவர் கூறியபடி ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தி, ஆண்டவரின் வார்த்தையின் மீது நம்பிக்கை வைக்க அழைக்கின்றார்; நம்பிக்கை வாழ்வில் தொய்வின்றி வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். இயேசுவின் பெயர் வல்லமையை, வலிமையை, வாழ்வைத் தரக்கூடியது. இயேசுவையே நமது தலைவராகக் கொண்டுள்ள நாம் எதற்கு முன்பாக, யாருக்கு முன்பாக மண்டியிடுகிறோம்? எவற்றை நோக்கிச் செபிக்கிறோம்? எதன் மீது, எவற்றின்மீது நம்பிக்கை வைத்துள்ளோம்? என்பதைச் சிந்திக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது பணியை நிறைவாகச் செய்வதற்குத் தேவையான மனப் பலத்தையும் உடல்நலனையும் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. சிலுவையினால் எமக்கு வாழ்வு கொடுத்த ஆண்டவரே! திருச்சிலுவையின் மாட்சி விழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை, சோதனைகளை உமது வல்லமையான சிலுவையின்மீது கொண்ட நம்பிக்கையால் முறியடித்து வாழ, தேவையான ஞானத்தை எமக்குத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்காக உயிரைக் கொடுத்து எம்மை மீட்ட ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் வாழ்வையும் வல்லமையையும் கொடுக்கக்கூடிய உமது வார்த்தையின்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், அவைகூறும் மதிப்பீடுகளின்படி வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. சிலுவையினால் எம்மை மீட்ட ஆண்டவரே! எம் குடும்பங்களில் தீராத நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைத் தந்து காத்து வழிநடத்தவும், அவர்களுக்கு உதவி செய்வதற்குத் தேவையான நல் மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.