திருப்பலி முன்னுரை
மனிதர்களைப்
பயன்படுத்தி செல்வத்தைச் சம்பாதிக்கும் நிலைமை மாறி, செல்வத்தைப் பயன்படுத்தி மனிதர்களைச் சம்பாதித்து மனித மாண்போடு வாழ ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் பாதுகாப்போடும் மகிழ்ச்சியோடும் பயணம் செய்வதற்குத் திரு அவை அவ்வப்போது சில எச்சரிக்கைகளைத் தருகிறது. அவற்றில் ஒன்றுதான் செல்வத்தின் மட்டில் நாம் விழிப்பாயிருப்பதற்கான எச்சரிக்கை. நாம் வாழும் உலகமானது செல்வத்தின்மீதும் பணத்தின்மீதும் அதிகம் நம்பிக்கை வைக்கும் உலகம். ‘பணம் பத்தும் செய்யும்’,
‘பணத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை’ என்ற கருத்துகளைப் பரப்பி, பணக்குவிப்பில் மக்களை ஈடுபடச் செய்யும் உலகம். பணத்தை வைத்து மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும் மாய உலகம். பணத்திற்குக்
கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுகளுக்குக் கொடுப்பதில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு
“செல்வத்தைக் கொண்டு உங்கள் நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்” என்கிறார்.
இயேசுவின் சீடர்களாகிய நாம் அனைவரும் பொருளைவிட மனிதமே மேலானது என்று வாழ்வோம். பணத்திற்காக உறவுகளை இழக்காமல் பணத்தை இழந்தாவது மனிதம் காப்போம். கொண்டு
செல்ல ஒன்றுமில்லை. அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளை இம்மண்ணில் விதைத்துச் செல்வோம். சுயநலம் மிகுந்திருக்கும் இவ்வுலகில் ஏழைகளை நினைவுகூர்ந்து நீதியுடன் நடந்துகொள்வதே நமது கடமை. எனவே, மனிதத்தின் புனிதம் உணர்ந்து அனைவரையும் மதித்து வாழவும், உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இன்றைய
முதல் வாசகத்தில், ஆமோஸ் இறைவாக்கினர் வறியவர்களை வஞ்சித்த, எளியவர்களை ஏமாற்றிய பணக்காரர்களைக் கடுமையாகச் சாடுகிறார். ஏழை எளியவர்களை நசுக்கி, பணத்தைச் சம்பாதிக்கும் செயலை இறைவன் ஒருபோதும் விரும்பமாட்டார் எனக் கூறி நீதியின் உண்மையின் பாதுகாவலராக வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இருப்பதில்
நிறைவுகண்டு, இல்லாதவர்களோடு தோழமை கொண்டு, உடன் வாழும் அனைவருக்கும் அமைதியைக் கொடுத்து, ஆண்டவர் கொடுத்த இந்த வாழ்வுக்காக நன்றி கூறி அமைதியோடு வாழவும், இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்த வாழ்வு வாழவும், இறைவேண்டலில் நிலைக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எமது திரு அவையை வழிநடத்தும் அனைவரும் உமது வார்த்தையின்படி வாழவும், அழைத்தவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணிசெய்யவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின்
இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் மக்களை ஒன்றிணைப்பவர்களாகவும், அனைத்து மக்களுக்கும் வாழ்வு கொடுக்கும் சட்டங்களைக் கொண்டுவரவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஞானத்தின்
ஊற்றான ஆண்டவரே! நாங்கள் அனைவரும் நீர் கொடுத்த இந்த வாழ்வுக்காய் நன்றி கூறி, உடன்வாழும் அனைவரோடும் நல் உறவுடன் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எம்மோடு
வாழும் ஆண்டவரே! எம் குழந்தைகள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் நாளும் வளரவும், கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றி காணவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.