வடக்கு அயர்லாந்தில் போர் நிறுத்தத்தின் 31-வது ஆண்டு நினைவு விழா அண்மையில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க மேனாள் செனட்டர் ஜார்ஜ் ஜே. மிட்செல் ஆற்றிய உரை இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டது. அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வின் கூற்றான, “எதிர்கொள்ளும் அனைத்தையும் மாற்ற முடியாது; மேலும், அதை எதிர்கொள்ளும்வரை எதையும் மாற்ற முடியாது!” என்ற மேற்கோளுடன், “நாம் தொடர்ந்து செழிக்க வேண்டுமென்றால், எதிர்காலத்தைப் பற்றிய ஆழமான மற்றும் சரியான சிந்தனை ஏற்பட வேண்டும். நாம் எங்குச் செல்கிறோம்? எப்படி அங்குச் செல்வோம்? என்பதைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்; நன்றாகச் செய்தால், விளைவுகள் உலகை ஒளிரச் செய்யும். மோசமாகச் செய்தால், மீண்டும் இருள் சூழ்ந்துவிடும்” என்று செனட்டர் ஜார்ஜ் ஜே. மிட்செல் கூறியது சுட்டிக்காட்டப்பட்டது.