news-details
ஆன்மிகம்
கல்வாரியில் அன்னை மரியைக் காண்போம்! (புனித வியாகுல அன்னைத் திருவிழா - செப்டம்பர் 15)

 கல்வாரியில்

பொன்னான மேனி

புண்ணாக நொந்து

பூவாகத் துடிக்கும்

ஓர் உள்ளம் காண்போம்;

அம்மாஎன்றழைக்க

ஒரு குழந்தையில்லாமல்

மான்போன்ற கண்களில் கண்ணீர் பெருகி

கன்னத்தில் ஆறாக

ஓடக் கண்டோம்!”

இறைவனுக்கு இணையாகி, வானிற்கு நீராகி, பேரன்பிற்கு இலக்கணமாகத் திகழும் அன்னை மரியாவின் வேதனையிலும் வீரத்தைக் காட்டிய நாள்தான் செப்டம்பர் 15. இந்நாளில் தான் நமது திரு அவை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் புனித வியாகுல அன்னை திருவிழா. வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு பரந்த கருணை, அன்பை மட்டும் அள்ளிக் கொடுக்கும் பரிவு... இவைதான் ஒரு தாயின் உள்ளம். அத்தகைய தாயாம் அன்னை மரியாவின் வியாகுலத்தை, வீரத்தைக் கொண்டாடும் நாள்தான் இந்நாள்.

இந்நாளில் தம்மையே வெறுமையாக்கி, அடிமை போன்று சிலுவைச் சாவை ஏற்ற கிறிஸ்துவைப் பின்பற்றி, தன்னையே பல்வேறு துன்பங்களுக்குள் உட்படுத்திக் கொண்டு இறைத்திருவுளத்திற்கேற்ப வாழ்ந்து காட்டிய நம் தாய் அன்னை மரியாவைப் போல் வாழ நாம் இன்று அழைக்கப்படுகிறோம்.

அன்னையின் வியாகுலத்திற்குக் காரணங்கள்

மீட்கும் திருவுளத்திற்குத் தன்னைக் கையளித்தது.

மீட்பராகிய இயேசுவுடன் கொண்டிருந்த இணைபிரியா உறவு,

மக்களாகிய நம் மேல் கொண்டிருந்த நாம் மீட்படைய வேண்டும் என்ற தாய்மை உணர்வு.

நம் தாய் மரியா பட்ட துன்பங்கள்ஏழு

உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்என்று சிமியோன் உரைத்த இறைவாக்கால் (லூக் 2:25-35) எதிர்காலத்தைப் பற்றிய அச்ச நிலை.

இரவிலேயே எகிப்திற்குப் புறப்பட்டு போ (மத் 2:13-15) என்ற வார்த்தையைக் கேட்டு, எங்கே போவோம்? எப்படித் தங்குவோம்? என்ற அகதிகளின் மன நிலை.

குழந்தையைக் காணாது தேடுதலில் (லூக் 2:41-50) மகனைத் தொலைத்துவிட்ட தாயின் பதறும் நிலை.

கல்வாரிப் பாதையில் மகனைச் சந்தித்தபோது (லூக் 23:27-31) கண்ணீரால் மகனுக்குத் துணிவூட்டும் தாயின் எல்லையற்ற பரிவின் நிலை.

சிலுவையடியில் நிற்கும்போது (யோவா 19:25-30) துன்பத்திலும் துவளாமல், துணிவோடு நிற்கும் வீரத்தாயின் நிலை.

மரித்த மகனை மடியில் சுமக்கையில் (லூக் 23: 50-54) வாழ்வே இருண்ட கையறுநிலை.

கல்லறையில் அடக்கம் செய்கையில் (யோவா 19:38-42) தனிமையில் தவித்த வெறுமை நிலை.

அன்னை சந்தித்த ஒவ்வொரு வியாகுலத்திலும் தன்னை ஒரு நிலையில் நிறுத்தி, பாடுகளையும் துன்பங்களையும் துணிவுடன் தாங்கும் உறுதியைத் தெளிவாக நமக்குக் கற்றுத் தருகின்றார். இத்தகைய துன்பங்களின் ஊடான வாழ்க்கைப் பயணமே அன்னைக்கு விண்ணேற்பைப் பெற்றுத் தந்தது. நாமும் நம் வாழ்க்கையில் நமக்கு வரும் பல்வேறு துன்பங்களைப் பொறுமையோடு சகித்து வாழும்போது, நமக்கும் விண்ணேற்பு நிச்சயம் உண்டு. அன்னை தன் பாடுகள் அனைத்தையும் நமக்கு மீட்பாக மாற்றிக்கொடுத்ததுபோல, நாமும் பிறர்நலத்திற்காகச் சுய நலம் மறந்து நமது அன்பை, நமது சேவையை, உதவியை, இரக்கத்தை, நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பிறருக்காகக் கொடுத்து வாழ்வோம்.

உன்னைக்கொடு; உலகை வெல்வாய்! உன்னை இழ; எல்லார் உள்ளத்திலும் வாழ்வாய்என்ற கூற்றுக்கேற்ப வாழ்ந்து சிறந்த புனித அன்னை தெரசா, பிறர்நலம் போற்றி வாழ்ந்து தன் இறப்பின்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டாக்டர் அப்துல் கலாம் போன்று தன்னலம் கருதாது வாழ்ந்து நாமும் பிறர்நலம் போற்றி வாழ்வோம். இந்நாளில் இறையாசிரும், அன்னையின் அருள்வளமும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்த அன்னையிடம் வேண்டுவோம்.