வழியையும் - வலியையும் ஒருசேர உணர்த்தும் ஓர் ஒப்பற்ற ஆன்மா, சிறுமலர் (little flower) - தூய குழந்தையை இயேசுவின் தெரேசா. ஆயிரம் வழிகள் கண்முன் தோன்றலாம்; அவற்றுள் தேர்ந்து தெளிந்து இறைவழியை அறிவதும், அவ் வழியில் பொதிந்திருக்கும் வலிகளை உணர்வதும், தெய்வீக அன்பின் வெளிப்பாடு என்பதை நிறைவாக உணர்ந்தவர், வாழ்ந்தவர், நமக்கு உணர்த்துபவர் அவர்.
அன்பு
அழகானது; இன்னும் சற்று ஆழமாகச் சிந்திக்கின்றபோது அன்பு மட்டும்தான் பேரழகானது! “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1யோவா
4:8); அந்த அன்பு அழகாய் இருக்கிறது; இறை ஆதவனிடமிருந்து ஒளிபெற்றுச் சுடர்விடும் விண்மீன்கள் யாவும் அழகு கொண்டவையே. மானிடர் யாம் அனைவரும் அவர் சாயலில் படைக்கப்பட்டவர் அன்றோ! (தொநூ 1:26-27). ஆகவே, அன்பு உலகில் எங்கும் விரவிக்கிடக்கிறது; உலகம் அழகில் நிறைந்திருக்கிறது.
இந்த
அன்பு, நமது வாழ்வில் இரண்டறக் கலந் திருக்கிறது என்பதை உணர்ந்த ஆதித் தமிழ்க்குடி, தமிழர் வாழ்வியலை ‘அகம்’,
‘புறம்’ என்று
இரு தளங்களாக வரையறைத்திருக்கிறது. இந்த இரண்டிற்குமே அன்பே அடித்தளம் என எடுத்துரைக்கிறது நம் இலக்கியங்கள்.
அன்பு சமூகத்தில் ஆழப்படும்போதும், எங்கும் ஆளப்படும்போதும் உறவுகள் ஊன்றப்படுகின்றன. உறவுச் சமூகம் தழைக்க, அந்த அன்பு ஒவ்வொரு நாளும் பொலிவு பெறவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரிய வேண்டாமா?
அகத்தின்
அழகை முகத்தில் காணும் ஒரே கணம், ஒரு தாய் தன் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறது. குழந்தையின் முகமும் தாயின் முகமும் அன்பின் உச்சத்தில் அழகு கொண்டிருக்கும்; அங்கே உண்மையான அன்பின் வடிவங்கள் பிறப்பெடுக்கும்.
அத்தகைய
அன்பை இறையுறவில் கண்டவர் சிறுமலர். இயேசுவின் தூய முகத்தைத் தன் தியான வழிமுறையாய்க் கொண்டு தெய்வீக அன்பைத் தன்வயப்படுத்தியவர்; இறையன்பில் இரண்டறக் கலந்தவர்.
அவருடைய
‘இயேசுவின் திருமுகத் தியானம்’ ஆழமான பொருள் கொண்டது; நிறைவான அருள் கொண்டது. “ஓ இயேசுவே, உமது
தூய திருமுகத்தை வணங்குகிறேன்; அன்று இறைமையின் இனிமையும் அழகும் கொண்ட உம் திருமுகம் இன்று துயரங்களின் அடையாளமாய் கோரமுகமாய்க் காட்சி தருகிறதே! உருக்குலைந்த உமது இந்த முகத்தில் அளவிட முடியாத உம் அன்பைக் காண்கிறேன். உம்மை அன்பு செய்யத் தீர்மானித்ததுடன், பலரும் உம் திருமுகத்தை அன்பு செய்ய வழிகாட்ட விழைகிறேன். உம் கண்களிலிருந்து வடியும் எண்ணிலாக் கண்ணீர்த்துளிகள் விலைமதிப்பில்லாப் பவளமணிகளாகத் தெரிகின்றன. நான் அவற்றை அள்ளிச் சேர்க்க விரும்புகிறேன். பாவத்தில் வீழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை விலை கொடுத்து மீட்பதற்காக, அதைப் பயன்படுத்த விழைகிறேன். என் இதயத்தின் ஆழத்தில் உம் திருமுகத்தைப் பொறித்து வைக்க ஆசைப்படுகிறேன். உமது தெய்வீகத் திருமுகம் என்னை அன்பில் பற்றியெரியச் செய்வதாக. அதுவே வான்வீட்டில் உம்முடைய திருமுகத்தைத் தொடர்ந்து நான் தியானிக்க என்னைத் தகுதி உள்ளவளாக்குவதாக!” என்று செபிக்கிறார். இங்கே ‘அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்’ என்பது
வெள்ளிடைமலையாகிறது.
அன்பைத்
(கடவுளைத்) தன்வயப்படுத்தும் அவரின் தேடல், அவருடைய 15 வயதிலேயே தொடங்குகிறது. பிரான்ஸ் நாட்டின் அலன்சோன் என்ற ஊரில் தொடங்கிய அவருடைய தேடல் பயணம், 16-வது வயதில் கார்மேல் மடம் கண்டு, அருள்வழி கண்டு, இறை மொழி கொண்டு, இயேசுவின் திருமுகம் கண்டு பூரித்துநின்றது. குழந்தை உள்ளம், ஆழ்ந்த தாழ்ச்சி, பலிப்பொருளாகத் தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் மனநிலை, இறையன்பு, இறைநம்பிக்கை... என வளர்நிலை கண்ட
அவருடைய துறவு வாழ்வு, இறை வழியில் சிலுவையின் கொடிய வலி கண்டாலும், மிகுந்த பொறுமையோடும் மகிழ்வோடும் மனவலிமையோடும் அவர் வாழ்ந்து வந்தது துறவு நிலையின் உன்னத அடையாளம்.
கார்மேல்
மடத்தில் சிலுவைகள் நிறைந்த அவருடைய வாழ்வு, ஒரு மறைச்சாட்சியின் வாழ்வுக்கு ஒப்பானதாகவே இருந்தது. “கார்மேல் சபையில் தான் சேர்ந்தது ஆன்மாக்களை மீட்கவும் குருக்களுக்காக மன்றாடுவதற்காகவுமே” என்று
கூறிய அவர், தனது
24-வது வயதில் விண்ணகப் பிறப்படைந்தாலும் அவருடைய ‘ஓர் ஆன்மாவின் சரிதை’
(The story
of a soul) தரும் ‘எளிய வழியானது’
(The little
way) அவரது வாழ்வு கடவுளுக்கு ஏற்ற உன்னதப் பலியாகவும், திரு அவையில் பாவிகளை மனமாற்ற ஆன்மாக்களைச் செதுக்கும் ஒப்பற்ற உளியாகவும் அறியப்படுகிறது. இயேசுவின் எளிய மலராக அறியப்பட்ட அவரோ... ஆண்டவரின் அழகு மலர்த் தோட்டம். ஆகவேதான், “நான் விண்ணகம் சென்று பூமியில் உள்ள யாவர்மீதும் ரோஜா மலர்களை மாரிப் பொழிவேன்”
என்றார்.
கார்மேல்
மடத்தில் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய அவரது துறவு வாழ்க்கை இன்று மறைப்பணியாளர்களின் பாதுகாவலராகவும், திரு அவையின் மறைவல்லுநர்களில் ஒருவராகவும் திரு அவை அவரை உயர்த்தியிருக்கிறது.
சிறிய
மலராக, சின்ன இராணியாக, இயேசுவின் செல்ல மகளாக விண்ணகத்தில் அவரருகில் அமர்ந்திருக்கும் குழந்தை இயேசுவின் தெரேசா புனித நிலை அடைந்த நூற்றாண்டு விழாவைப் பொருளுள்ள வகையில் கொண்டாட கார்மேல் துறவற சபைகள் ஒன்றிணைந்து வெளிக்கொணரும் இச்சிறப்பிதழ், குழந்தை இயேசுவின் தெரேசா இன்னும் அதிகமாக அறியப்படவும், அவருடைய எளிய வழியைப் பின்பற்றி இயேசுவைப் பலர் அடையவும் பேருதவியாக அமையும் என நம்புகிறேன். இம்முயற்சியில்
எம்மோடு தோள் கொடுத்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் சிறப்பாக, யாவரையும் ஒருங்கிணைத்து இச்சிறப்பிதழ் சிறப்பாக வெளிவர பெரும் முயற்சி மேற்கொண்ட அருள்பணி. சேவியர் OCD அவர்களுக்கும்
‘நம் வாழ்வு’ தனது நன்றியை உரித்தாக்குகிறது.
அனைவருக்கும்
நூற்றாண்டு
விழா
நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்