news-details
சிறப்புக்கட்டுரை
ஒரு100000 அப்பு... ஒரு100000 (கண்டனையோ, கேட்டனையோ! - 37)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ground-breaking encycli cal’ - ‘Laudato si’ திருமடல் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவுபெறுவதைக் கொண்டாடும் வகையில், நான் தற்போது முதன்மை ஆசிரியராகப் பணிபுரியும் ‘Radio Veritas Asia’ என்கிற ஆசியக் கத்தோலிக்க டிஜிட்டல் தளம், ஒரு மாபெரும் குறும்படப் போட்டியை அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசரத்தை ஆசிய மக்கள் எல்லாரும், குறிப்பாக, ஆசிய இளைஞர்கள் உணரவேண்டும் என்பதே இப்போட்டியின் நோக்கம்.

பருவநிலை ஏற்கெனவே டாஸ்மாக்கின்அன்பான வாடிக்கையாளர் பெருமக்கள்போல தடுமாறுவதைப் பார்க்கிறோம். டிசம்பரில் வெயில் கொளுத்துகிறது. பையன்கள்கிறிஸ்மஸ் தாத்தா டிரஸ் போடமாட்டேன்என்று தகராறு செய்கிறார்கள். மே மாதத்தில் வெள்ளம் வந்து, விவசாயிகளின் திட்டங்களைக் கலைத்துப் போடுகிறது. நான் முன்பு இருந்த பங்கில் ஒரு பாட்டி, “இந்த வானத்துக்குப் புத்தி கெட்டுப்போச்சு. அவ்வளவுதான் நான் சொல்வேன்என்பார். ஒரு காலத்தில் வெறும் கணிப்பாக இருந்த சூழ்நிலைப் பேராபத்துகள் இன்று ஏறக்குறைய நம் வீட்டு வாசற்படிக்கே வந்துவிட்டன.

Time is ticking! நான்கூட நினைத்திருக்கிறேன்எப்படியும் இதுபோல பெரிய விஷயங்கள் நடப்பதற்கு முன், நம் காலம் முடிந்துவிடும்என்று. அதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது தோன்றுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “We’re the first generation to feel the impact of climate change, and the last generation that can do something about it...” என்று கூறியது மிகப்பெரிய உண்மை! பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை நேரடியாக உணர்கிற முதல் தலைமுறை நாம். அதே சமயம், அது குறித்து ஏதாவது முயற்சி எடுத்து, சரிசெய்யக்கூடிய கடைசி தலைமுறையும் நாம்தான். Now or never! நாம் ஏதும் செய்யவில்லை என்றால், உலகைக் காப்பாற்ற மற்றொரு தலைமுறை இங்கே இருக்காது. ‘Point of no return’ என்று கூறுவார்கள். அதை நோக்கி உலகம் விரைந்து சென்று கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழலைக் குறித்துத் தொடர்ந்து பேசி, எழுதி, அதன் மேல் உலக மக்களின் கவனத்தைக் குவித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். கடைசிவரை  அவருடைய ஆட்சிக்காலத்தின் முதன்மை அக்கறைகளின் ஒன்றாகச் சுற்றுச்சூழல் இருந்தது.

2015-ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘Laudato si’ ஒரு முக்கியச் சுற்றுச்சூழல் ஆவணம். இந்த அளவிற்கு உலகின்மீது தாக்கம் செலுத்திய அண்மைக்காலத் திருமடல் வேறு எதுவும் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். திருமடல்கள் பொதுவாகக் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களுக்கு எழுதப்படும். ஆனால், Laudato si’ பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரை நோக்கியும் உரையாடல் நிகழ்த்தியது. பூமியை ‘Our Common Home’ - அதாவது, நம் எல்லாருக்கும் ஆன பொதுவீடு என்று அழைத்து, அதன் நலத்தின்மீது அக்கறை கொண்ட எல்லாரையும் பிரான்சிஸ் வண்டியில் ஏற்றினார். ஆய்வாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் இம்மடலைக் குறித்து விவாதித்தார்கள். 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பிரான்சிஸின் மடல் மேற்கோள் காட்டப்பட்டது. பிரதமர்கள், அதிபர்கள், .நா. நிறுவன அதிகாரிகள் இம்மடலின் வார்த்தைகளைத் தங்கள் உரைகளில் குறிப்பிட்டார்கள். துயருறும் கிரகத்திற்காக எழுப்பப்பட்ட ஓர் அறத்தின் குரலாக ‘Laudato si’  ஒலித்தது.

திரு அவை வரலாற்றிலேயே ஒரு திருமடல் இயக்கமாக உருவெடுத்த அதிசயம் இம்மடலில்தான் நிகழ்ந்தது. இன்று உலகம் முழுவதும் தன்னார்வலர்களையும் செயல்பாட்டாளர்களையும் கொண்டு கிளை விரித்துள்ள Laudato si Movement பிரான்சிஸின் கனவுகளைத் திட்டங்களாகவும், சாத்தியமான செயல்பாடுகளாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

‘Laudato si’ மடலின் பத்தாம் ஆண்டு விழா, உலகளாவியத் திரு அவையில் பல வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் அறிவுறுத்தல்படி ‘Radio Veritas Asia’ நிறுவனம் சார்பாக பல திட்டங்களை இந்த வருடம் முன்னெடுத்துள்ளோம். அதில் ஒன்று இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட குறும்படப் போட்டி!

போட்டி குறித்த விவரங்கள் பின்வருமாறு:

தலைப்பு: ‘ஆசியக் கண்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு - நம் பொது வீடு பூமியைக் காப்பாற்ற ‘Laudato si’ கற்பிக்கும் பாடங்களை எப்படிச் செயலாக்குவது?’

யார் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்?

யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சமயம், நாடு, வயது போன்ற எந்தத் தடையும் இல்லை. தனிப்பட்ட நபர்கள், அமைப்புகள் இரண்டிற்கும் அனுமதி உண்டு. மாணவர்கள், சமூகத் தொடர்பு பணிக்குழுக்கள், பங்குகள், மறைமாவட்டங்கள், கன்னியர் இல்லங்கள், துறவற சபைகள், பக்த அமைப்புகள், இயக்கங்கள், பயிற்சி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள்... சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ஒரு காமிராவும் சுற்றுச்சூழல் குறித்த ஒரு கதையும் உள்ள எவரும் இதில் பங்கேற்கலாம். உங்கள் குறும்படம் ஆசியக் கண்ட சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

ஆங்கிலத்தில் அனுப்பினால் உத்தமம். பிற மொழிகளுக்கும் அனுமதி உண்டு. உரையாடல் மற்றும் விவரிப்பிற்கு, ஆங்கில subtitle-கள் கொடுக்க வேண்டும்.

நீளம்: 3 இலிருந்து 5 நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். இது தீவிரமாக அமுல்படுத்தப்படும். (முழுநீள வண்ணக் காவியங்களை அனுப்ப வேண்டாம்).

ஒரு நபர், ஓர் அமைப்பு, ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.

படைப்பு எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10 நவம்பர், இரவு மணி 11.59 (பிலிப்பைன்ஸ் நேரம்). இந்தியாவைவிட, பிலிப்பைன்ஸ் இரண்டரை மணி நேரம் முன்னதாகச் செல்லும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Google Form வழியாகப் போட்டியில் பங்கேற்பைப் பதிவு செய்யவும், படைப்புகளை அனுப்ப...... https://forms.gle/sLkjEKJjkbdwQkZK9 என்ற இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள்.

போட்டி பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விதிகளைத் தெரிந்துகொள்ள https://www.rvasia.org/laudato-si-film-making-contest என்ற கொழுவியை அணுகவும்.

இதில் நான் முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது பரிசுத் தொகையை!

முதல் பரிசு: USD 1000 அமெரிக்க டாலர்கள். (இந்திய ரூபாயில் இதன் இன்றைய மதிப்பு ரூ. 88,143/- ஏறக்குறைய ஒரு இலட்சம்). ஒரு இலட்சம் அப்பு... ஒரு இலட்சம்!

இரண்டாவது பரிசு: USD 800 அமெரிக்க டாலர்கள்.

மூன்றாவது பரிசு: USD 500 அமெரிக்க டாலர்கள்.

இது தவிர பத்து சிறப்புப் படைப்புகளுக்கு USD 100 அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பத்து ஆறுதல் பரிசுகள் (மீதம் எல்லாருக்கும் வெறும் ஆறுதல் மட்டும் தரப்படும்).

ஆசியக் கண்ட வரலாற்றிலேயே ஒரு குறும்படப் போட்டிக்கு இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று சில நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிறைய பேர் இப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு அவசரம் ஆசிய இளைஞர்கள் நடுவில் ஒரு பேசு பொருளாக, அக்கறையாக மாறவேண்டும் என்பதே ‘Radio Veritas Asia’நிறுவனத்தின் ஆசை.

விருப்பமும் திறமையும் உள்ளநம் வாழ்வுவாசகர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மற்றவர்களுக்கும் இது குறித்த செய்தியைப் பகிருங்கள்.