news-details
சிறப்புக்கட்டுரை
படைப்பைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது கடமை! (செப்டம்பர் 21 இயற்கை ஞாயிறு)

இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் படைத்த இறைவன் அதனைப் பேணிப்பராமரிக்கவே மனிதர்களாகிய நம்மையும் படைத்தார். இயற்கையை நாம் செழிக்கவைத்தால், இயற்கை நம்மைச் செழிக்க வைக்கும். மாறாக, இயற்கையை நாம் அழிக்க நினைத்தால், இயற்கை நம்மை அழித்துவிடும். இவ் வையகம் அறிந்த உண்மை இது. கடவுள் படைத்த இப்பூமி அழகும் அன்பும் அருளும் நிறைந்தது. மரங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், கடல், விலங்குகள், பறவைகள் என அனைத்தும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதுமே நம் அனைவரின் கடமை.

நாம் வாழும் பூமி நம் பொது இல்லம்என்பது திருத்தந்தை பிரான்சிஸின் அமுத வார்த்தைகள். இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் புரட்சியாலும் நாம் நம் பொதுவான இல்லமான பூமியை அளவுக்கு அதிகமாக அழித்து வருகின்றோம். காடுகள் கட்டுப்பாடின்றி அழிக்கப்படுகின்றன. நதிகளும் நீர்நிலைகளும் மாசுபடுகின்றன. பல்லுயிரிகள் விரைவாக அழிந்து வருகின்றன. இதனால் காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், வறட்சி, வெப்பம் போன்ற பல இடர்களை நாம் இன்று சந்திக்கின்றோம்.

இயற்கையை நாம் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் நாளைப் படைப்பின் மீதுள்ள அக்கறைக்கான செப நாளாகத் திரு அவை கொண்டாடி மகிழ்கின்றது. திரு அவையும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான அழைப்பை நமக்குத் தருகிறது. படைப்பைப் பாதுகாப்பது என்பது நீதியின் ஒரு பகுதியும், நம் மனிதாபிமான கடமையுமாகும். திருத்தந்தை லியோ இதற்கான திருப்பலி மன்றாட்டு, வாசகங்களை அங்கீகரித்து அண்மையில் ஆணை வழங்கியுள்ளார். எல்லா இடங்களிலும் இதைப் பயன்படுத்தத் திருவழிபாடு அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் நம்மைப் பணிக்கிறது. இது ஜூன் 8, 2025 தூய ஆவியார் பெருவிழா அன்று வெளியிடப்பட்டது.

கடந்த ஜூலை 9 அன்று படைப்பைப் பாதுகாத்தலுக்கான முதல் திருப்பலியைத் திருத்தந்தை லியோ உரோமைக்கு அருகிலுள்ள காஸ்தல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்தில் நிறைவேற்றினார். அவர் தனது மறையுரையில், இயேசுவே திரு அவையின் படைப்பாளர் மற்றும் தலைவர் என்பதையும், படைப்பைப் பராமரிப்பதும் அமைதியை மேம்படுத்துவதும் ஒரு பகிரப்பட்ட பணி என்பதையும் நமக்கு நினைவூட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுச் சூழல் பற்றியக் கரிசனையும் ஆன்மிகமும் அடங்கியஇறைவா உமக்கே புகழ்(Laudato si) என்னும் திருத்தூது மடலின் பத்தாம் ஆண்டிலே படைப்பைப் பாதுகாத்தலுக்கான திருப்பலியை அங்கீகரித் திருப்பது இப்பூமியைப் பேணுகின்ற நம் பணிகளுக்குத் திரு அவை கொடுக்கின்ற முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

இறுதியாக, படைப்புடன் இணக்கமாக வாழ்வதையும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளைச் சரி செய்வதற்கான ஒரு வழியாக நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நம் தமிழ்நாடு ஆயர் பேரவை ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் ஞாயிறன்று படைப்பைப் பாதுகாத்தல் திருப்பலியைக் (இயற்கை ஞாயிறைக்) கொண்டாட அழைப்புவிடுக்கின்றது. எனவே, இந்த ஆண்டு செப்டம்பர் 21 அன்று இயற்கை ஞாயிறை நாம் சிறப்பிக்கின்றோம்.

பூமியைப் பாதிக்கும் மனிதர்களின் பேராசை, சுரண்டல், மாசுபாடு ஆகியவை களையப்பட வேண்டும். இயற்கையின் அழுகை கடவுளின் அழுகை என்பதை உணர்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க இயற்கையைப் போற்றி வணங்கி, பாதுகாத்து, பராமரித்து வாழ்வோம்.