news-details
ஆன்மிகம்
யூபிலி 2025 பாவத் தண்டனைக் குறைப்பு அல்லது நீக்குச் சலுகை

எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற மையச் சிந்தனையோடு கிறிஸ்து பிறப்பின் 2025-ஆம் ஆண்டிற்கான யூபிலி கத்தோலிக்கத் திரு அவையில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன் சிறப்பு நிகழ்வுகளுள் ஒன்று பாவத் தண்டனைக் குறைப்பு அல்லது நீக்குச் சலுகையைப் (Indulgence) பெறுவதாகும். இதுபேறுபயன்என்றும் அழைக்கப்படுகிறது. இச்சலுகையின் தோற்றம், உள்ளடக்கம் மற்றும் சர்ச்சைகள், அதைப் பெறுவதற்கான நிபந்தனைகள், இக்காலச்சூழலுக்கு அதன் பொருந் துமைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.

தோற்றமும் பரவலும்

பாவத்தண்டனை நீக்குச் சலுகை பாவக் கழுவாய் அருளடையாளம் (Scraments of penence) மற்றும் இறுதித் தூய்மையுறு நிலை (purgatory) பற்றிய இரண்டு கத்தோலிக்க மறைப்படிப்பினைகளிலிருந்து உருவானதாகத் தெரிகிறது. அப்படிப்பினைகளைச் சுருக்கமாக இவ்வாறு கூறலாம்: பாவப்பழி (guilt of sin) பாவக் கழுவாய் அருளடையாளத்தில் வழங்கப்படும் மன்னிப்பினால் முழுமையாக நீக்கப்படாமல் ஓர் இம்மைசார் தண்டனை (temporaral punishment) எஞ்சியிருக்கிறது; அத்தண்டனையை ஒருவர் அனுபவிக்கும் நிலை அல்லது முறை இறுதித் தூய்மையுறு நிலையாகும். அத்தண்டனைக் காலத்தை ஒருவர் தனக்காகவோ அல்லது இறந்தோருக்காகவோ சில பரிகாரச் செயல்பாடுகளின் வழியாகக் கிறிஸ்து மற்றும் தூயவர்களுடைய நற்பேறுபலன்களின் உதவியால், குறைக்கவோ முற்றிலுமாக நீக்கவோ முடியும். பாவங்களுக்குரிய இம்மைத் தண்டனையிலிருந்து பகுதியாகவோ முழுமையாகவோ விடுவிப்பதைப் பொறுத்து, பாவத்தண்டனைக் குறைப்பு பகுதி அளவானது (Partial) அல்லது முழுமையானது (Plenary) எனப்படும்.

11, 12 ஆகிய நூற்றாண்டுகளில் இறுதித் தூய்மையுறு நிலை பற்றிய நம்பிக்கை அதிகமாகப் பரவியபொழுது, பாவத்தண்டனை நீக்குச் சலுகையைப் பெறுவதும் தீவிரமடைந்தது. இச்சலுகை பற்றிய மறைப்படிப்பினைகள் முதன்முதலாக 1343-இல் திருத்தந்தை 6-ஆம் கிளமெண்ட் அவர்களால் தொகுக்கப்பட்டன. மார்ட்டின் லூதர் காலத்தில் (1483 - 1546) உரோமை புனித பேதுரு பசிலிக்காவின் கட்டுமானப் பணிக்கு, திருத்தந்தை சார்பாக நிதி திரட்டுவதற்குப் பாவத்தண்டனை நீக்குச் சலுகைச் சான்றிதழ்கள் பணத்திற்கு விற்கப்பட்டன. அப்பொழுதிலிருந்து பாவ மன்னிப்பைப் பணத்திற்கு விற்கலாம் வாங்கலாம் என்ற வழக்கம் நடைமுறையானது.

16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜொஹன் டெட்சல் (Jojann Tetze) என்ற தொமினிக் துறவு அவை அருள்பணியாளர் பாவத்தண்டனை நீக்குச் சலுகையைத் தீவிர மாக ஆதரித்து விளம்பரப்படுத்தினார். அவரது இக்கூற்று தீவிரமாகப் பரப்பப்பட்டு எங்கும் மேற்கோளிடப்பட்டது: ‘பணப் பெட்டியில் (ஆலய உண்டியல்) விழும் ஒரு நாணயத்தின் ஓசை எழுந்ததும் இறுதித் தூய்மையுறு நிலையில் துன்புறும் ஓர் ஆன்மா (விண்ணகம் செல்வதற்காக) துள்ளி எழும்.’

இறைவனின் இரக்கத்தால் பெறப்படும் பாவ மன்னிப்பைப் பணத்திற்கு வாங்க முடியும் என்ற போக்கு மார்ட்டின் லூதரால் கண்டிக்கப்பட்டது. திரு அவையைச் சீர்திருத்த அவர் வெளியிட்ட 95 ஆய்வுரைகளுள் பாவ மன்னிப்பு நீக்குச் சலுகையும் ஒன்றானது. சீர்திருத்த இயக்கத்திற்கு எதிர்வினையாற்றிய திரிதெந்தின் பொதுச் சங்கம் (1945-1563) பாவத்தண்டனை நீக்குச் சலுகையை வியாபாரமாகக் கருதாமல், இறைஇரக்கத்தின் வெளிப்பாடாகப் பார்க்க வேண்டுமென்றும், அதைப் பெறுவதற்கு உண்மையான மனமாற்றமும், நற்செயல்கள் புரிவதும் அவசியம் என்றும் வலியுறுத்தியது.

இன்றைய நடைமுறை

1967-இல் திருத்தந்தை புனித 6-ஆம் பவுல் பாவத்தண்டனைக் குறைப்பு ) நீக்குச் சலுகையின் புதிய புரிதலைப் பற்றிய மறைப்படிப்பினையை வெளியிட்டார். அதனைத் தழுவி 1999-இல் திருத்தந்தைசார் பாவக் கழுவாய் பேராயம் பாவத் தண்டனைக் குறைப்பு, ) நீக்குச் சலுகையின் விரிவான விதிமுறைகளை (Manual of Indulgences) வழங்கியது. இவ்விதிமுறைகளே கத்தோலிக்கத் திரு அவையில் நடைமுறையில் உள்ளன.

2025 - யூபிலி ஆண்டில் இச்சலுகையைப் பெறுவதற்காகத் திருத்தந்தை பிரான்சிசின் ஆணையோலை (எதிர்நோக்கு ஏமாற்றம் தருவதில்லை, 9 மே, 2024), திருத்தந்தைசார் பாவக் கழுவாய் பேராயத்தின் குறிப்பாணை (13 மே, 2024), இந்திய ஆயர்கள் பேரவையின் (இலத்தீன்) சுற்றுமடல் (17, செப்டம்பர் 2024) ஆகிய ஆவணங்களில் அடங்கியுள்ள பொதுவான நிபந்தனைகளாவன:

மறைமாவட்ட ஆயரால் அறிவிக்கப்பட்டுள்ள ஆலயம் அல்லது திருத்தலத்திற்குத் தனியாகவோ குழுவாகவோ செல்லவேண்டும்.

பாவ அறிக்கை அருளடையாளத்தைப் பெற்று அருள்நிலையில் இருக்கவேண்டும்.

திருப்பலியில் பங்கேற்று நற்கருணை அருந்தவேண்டும்.

திருத்தந்தையின் கருத்துகளுக்காகச் செபிக்க வேண்டும்.

இவற்றுடன் செபம், தவம், தர்மம் உள்ளிட்ட பல செயல்பாடுகளையும் மறைமாவட்ட ஆயர்கள் தங்கள் சுற்றுமடல்களில் சேர்த்துள்ளனர்.

சர்ச்சைகள்

இச்சலுகையைப் பற்றி நிலவும் சில முக்கியச் சர்ச்சைகளாவன:

1. இச்சலுகைக்குத் திருவிவிலியத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.

2. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் எந்த ஆவணத்திலும் இச்சலுகையைப் பற்றிய படிப்பினை இல்லை.

3. கீழை மரபுறுதித் திரு அவைகளின் மறைப் படிப்பினைகளிலும் இச்சலுகையைப் பற்றிய படிப்பினை இல்லை.

4. சீர்திருத்த மற்றும் பிற கிறித்தவ அவைகள் இச்சலுகையை ஏற்பதில்லை.

5. 1983-ஆம் ஆண்டின் இலத்தின் கத்தோலிக்கத் திரு அவைச் சட்டத்தொகுப்பில் இச்சலுகையைப் பற்றி ஆறு சட்டங்கள் (சச 992 997) இடம்பெற்றிருக்க, அதற்கு இணையாக 1990-இல் பிரகடனப்படுத்தப்பட்ட கீழைக் கத்தோலிக்கத் திரு அவைச் சட்டத் தொகுப்பில் ஒரு சட்டம்கூட இல்லை.

6. பாவ அறிக்கை (auricular confession) அருளடையாளத்தின் பயன்பாடு மங்கிவரும் நிலையில், அதை இச்சலுகையைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனையாக வைத்திருத்தல். மேலும், இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமென்று யூபிலி ஆலயங்களில் அறிவிக்கும்பொழுது, அது திரு அவைச் சட்டம் 916-க்கு முரணானது என்பதை அறியாதிருத்தல் (சட்டம் 916-இன்படி கனமான ஒரு காரணமிருந்து மற்றும் பாவ அறிக்கையிடும் வாய்ப்பு இல்லாதிருக்கும் சூழ்நிலையில் ஒருவர் கூடிய விரைவில் பாவ அறிக்கை செய்யும் எண்ணத்தை உள்ளடக்கிய நிறைவான மனத்துயரை வெளியிட்டுத் திருப்பலியில் பங்கேற்று ஆண்டவரின் உடலைப் பெறலாம்).

7. இறுதித் தூய்மையுறு நிலை பற்றிய கத்தோலிக்கப் படிப்பினைக்கு எதிராகப் பல கேள்விகளும் விவாதங்களும் வைக்கப்படும் நிலையில், அதனுடன் இச்சலுகையைத் தொடர்புபடுத்தியிருத்தல்.

8. சிலுவை அடையாளம் வரைதல், செபமாலை சொல்லுதல், சிலுவைப்பாதை செய்தல், திருவிவிலியத்தை வாசித்தல் போன்ற வழக்கமான பக்தி முயற்சிகளையும் இச்சலுகையை முழுமையாகவோ பகுதியாகவோ பெறுவதற்கான வழிமுறைகளாகக் கோர்த்து வைத்திருத்தல்.

இன்றைய பொருந்துமை

பாவத்தண்டனைக் குறைப்பு அல்லது நீக்குச் சலுகை இக்காலச் சூழலில் ஈடுபாடுள்ள நம்பிக்கை வாழ்க்கை முறையை வலுப்படுத்துகிறதா? என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுப்பப்படுகிறது. குறிப்பாக, லேவியர் புத்தகம் 25-ஆம் அதிகாரத்தில் யூபிலி ஆண்டின் நிகழ்வுகளாகக் கூறப்பட்டுள்ள அடிமைகளுக்கு விடுதலை, சொத்துகள் மீட்பு மற்றும் பூமிநலன், லூக்கா நற்செய்தி 4-ஆம் அதிகாரத்தில் இயேசு அறிவித்துள்ள அருள்தரும் ஆண்டிற்கான அறிக்கையின் விழுமியங்கள், மத்தேயு நற்செய்தியின் 25-ஆம் அதிகாரத்தில் பொதுத் தீர்வையின் பொழுது நிலைவாழ்வைப் பெறுவதற்காகச் செய்திருக்க வேண்டிய அறச்செயல்கள் ஆகியவற்றின் பின்புலத்திலும், மேற்கூறப்பட்டுள்ள சர்ச்சைகளின் தாக்கத்தாலும், இச்சலுகை திரு அவையின் இன்றைய வாழ்வுக்கும் பணிக்கும் உகந்த பொருந்துமையைக் கொண்டிருக்கிறது என்று கூறுவது கடினம். எனவே, இச்சலுகையைப் பற்றிய மரபுசார்ந்த படிப்பினையையும் இன்றைய திரு அவைக்கு அதன் பொருந்துமையையும் மறு ஆய்வு செய்வது அவசியமெனக் கருதப்படுகிறது.