காசாவில் வாழும் பாலஸ்தீனிய மக்கள்மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் மனிதாபிமானமற்றப் போர் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கிறது. ‘ஹமாஸ்’ அமைப்பின் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அழித்து ஒழிக்கவும், அவர்கள் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் நாட்டினரை மீட்டெடுக்கவும் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்ட இஸ்ரேல் அரசின் இராணுவ நடவடிக்கைகள், தற்போது காசாவில் வாழும் பாலஸ்தீனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி, முழுமையாக அழித்தொழிக்கும் ‘இன அழிப்புப் போராக’ மாறியுள்ளது.
இதுவரை
60,000 பாலஸ்தீனியர்களுக்கு
மேலாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 18,000 பேர் குழந்தைகள். காசா மக்கள்தொகையில் சுமார் 10% மக்கள் ஊனமாக்கப்பட்டிருக்கின்றனர்.
இருபது இலட்சம் மக்கள் அவர்களது வாழ்விடங்களிலிருந்து
விரட்டப்பட்டு சாலையோரங்களிலும் திறந்த வெளிகளிலும் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்கள் முழுமையாகச் சிதைக்கப்பட்டு, பயிர்களே விளையாத கந்தகப் பூமியாக மாற்றப்பட்டு வருகின்றன.
யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுகின்ற உணவு, மருந்துகள் போன்ற நிவாரணப் பொருள்களை எடுத்துச்செல்ல சர்வதேச நாடுகளையும் தொண்டு நிறுவனங்களையும் இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்காத காரணத்தால், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் முதியவர்களும் நோயாளிகளும் பசியாலும் பட்டினியாலும் இறந்து வருகின்றனர். சர்வதேச உதவி மையங்களில் உணவு வாங்க
வரும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்று கூறி இதுவரை ஆயிரம் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றுள்ளது இஸ்ரேல் இராணுவம்.
இஸ்ரேல்
இராணுவத்தின் அடாவடி நடவடிக்கைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் சர்வதேச ஊடகவியலாளர்களையும் உதவி செய்வதற்காக வந்துள்ள தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த தன்னார்வலர்களையும்கூட இஸ்ரேல் இராணுவம் சுட்டுத்தள்ளுகிறது.
இத்தனை
அநியாய அக்கிரமங்களுக்கும் பகிரங்கமாக உதவி செய்பவர் ‘உலகச் சமாதானத்தின் காவலராக’ தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த ஆண்டு உலகச் சமாதானத்திற்கான நோபல் பரிசை வாங்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த மரணக் கச்சேரிக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் பணக்கார ஐரோப்பிய வல்லரசுகள். இந்த அபஸ்வரக் கச்சேரியைக் காசு கொடுத்து அமைதியாகக் கேட்டு இரசிக்கும் இரசிகர்களாகப் பணக்கார அரபு நாடுகள் மாறிப்போனது மற்றுமொரு கொடுமை. பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரத்தினை முதன்முதலில் வழங்கிய இந்தியா போன்ற நாடுகளும், அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய இரஷ்யா-சீனா போன்ற நாடுகளும் இன்று அவர்களுடைய உள்நாட்டுப் பாதுகாப்பு, அவர்களுடைய எல்லைகளிலிருக்கும் பதற்றங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக டிரம்ப் எனும் ‘அநியாயமான பேராசைக்காரர்’ சர்வதேச
நாடுகளின்மீது தொடுத்திருக்கும் அநியாய வரிவிதிப்புப் போர் போன்ற பிரச்சினைகளால் பாலஸ்தீனியர்களுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க முடியவில்லை.
இதுபோன்ற
தருணங்களில் நியாயம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பாதுகாப்புக் கவுன்சிலும் அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால் செயலிழந்து நிற்கின்றன.
பாலஸ்தீனம்
முழுவதும் மரண பயம். குடியிருப்புகளில் எல்லாம் பிணவாடை. முன்னறிவிப்பின்றிப் பறந்துவரும் ‘ட்ரோன்கள்’
வீசும் அமிலக் குண்டுகளால் அடையாளமே தெரியாமல் சிதைந்து போகும் குழந்தைகளை அடையாளம் காண அவர்களது உடல்களில் குழந்தைகளின் பெயர்களைப் பச்சை குத்தி வைக்கும் தாய்மார்கள். அடையாளம் தெரிந்து அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத் தங்கள் கைகளில் தங்களது பெயர்களைப் பச்சை குத்திக்கொள்ளும் இளைஞர்கள். பெண்கள் தங்கள் பெயர் பொறித்த வளையல்களை அணிந்து கொள்கின்றனர்.
மருத்துவமனைகளில்
மின்சாரம் இல்லை. மொபைல் போன்களின் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் அவலம். மயக்க மருந்துகளின் தட்டுப்பாட்டால் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆண்களுக்கு இரண்டு வேலைகள்: ஒன்று, இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்குகளைச் செய்வது; இரண்டு, மற்ற நேரங்களில் உதவி மையங்களில் வழங்கப்படும் உணவுக்காகக் காத்திருப்பது. பெண்களுக்கு இரண்டு வேலைகள்: இறந்துபோன தங்கள் பிள்ளைகளை, உறவினர்களைக் கட்டிப்பிடித்து அழுவது; மற்ற நேரங்களில் உதவி விமானங்கள் வந்து கீழே வீசும் உணவுத் தானியங்களை மண்தரைகளிலிருந்து பொறுக்குவது. இவ்வளவு கொடுமைகளையும் உலகம் முழுமையும் பார்த்தும் அறிந்தும் எதுவுமே தெரியாததுபோல இருப்பதை இஸ்ரேல், சர்வதேச நாடுகள் தனக்குத் தெரிவிக்கும் ஆதரவாகப் பார்க்கின்றது.
அமெரிக்காவின்
ஆயுத உதவிகளும், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளும் இஸ்ரேலின் மீது பாயாத அளவுக்கு அமெரிக்கா தருகின்ற பாதுகாப்பும், ஐரோப்பிய நாடுகளின் வணிகத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இல்லாமல் இஸ்ரேல் ஒரு மணிநேரம்கூட போர்க்களத்தில் நிற்க முடியாது. தெற்கு ஆசியப் பகுதியில் செயல்படும் ஒரே சனநாயக நாடு என்ற முறையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பின்னணியில் கடைந்தெடுக்கப்பட்ட சுயநலமும், கலப்படமில்லாத வணிக ஆதாயமும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. முக்கியமாக, எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க இஸ்ரேல் என்ற ‘ரௌடி நாடு’ அவர்கள் கைவசம் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றன. நாகரிகம் மிக்க, சனநாயக உணர்வுள்ள, மனிதநேயம் மிக்க நாடுகள் என்று எப்போதும் தங்களைப்பற்றிப் பெருமை பேசிக்கொள்ளும் இவர்கள் தங்களால் நேரில் செய்யமுடியாத அயோக்கியத்தனங்களை இஸ்ரேல் மூலமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
இத்தகைய அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கான வசதிகளையும் தொழில்நுட்பங்களையும் இஸ்ரேல் உருவாக்கி வைத்துள்ளது இவர்களுக்குப் பெரும் வசதியாக உள்ளது. இதற்கான நிதி உதவி உள்பட அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் இஸ்ரேலுக்குச் செய்து வருகின்றன.
இன்று
காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புப் போரின்
மூலம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றனர் என்பது குறித்து, பாலஸ்தீனத்திற்கான ஐ.நா. சிறப்புப்
பிரதிநிதியான பிரான்செஸ்கா ஆல்பனீஸ் அம்மையார் விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். போரின் மூலமாகப் பயனடைந்த பன்னாட்டுப் பெரும் நிறுவனங்களின் பட்டியலையும் அதில் இணைத்திருந்தார். இந்நிறுவனங்கள் தங்களது புதிய தொழில்நுட்பங்களையும் ஆயுதக் கண்டுபிடிப்புகளையும் சோதனை செய்து பார்க்கும் ஆய்வுக்களமாக காசாவை மாற்றியிருந்ததை விளக்கியிருந்தார்.
ஆல்பனீஸ்
பட்டியலிட்டிருந்த நிறுவனங்களில் அமேசான், மைக்ரோசாப்ட் உள்பட பெரும்பாலானவை அமெரிக்க நிறுவனங்களாகும். மற்றவை ஐரோப்பிய நிறுவனங்கள். இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஆல்பனீஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர்மீது ‘யூதர்களின் விரோதி’ என்றும், ‘பயங்கரவாதத்தின் ஆதரவாளர்’
என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்மீது பல தடைகளை விதித்து,
அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முடக்கி வைத்துள்ளன.
சர்வதேசச்
சட்டங்களுக்கு விரோதமாகவும், ஐ.நா. சபையின்
தீர்மானங்களுக்கு எதிராகவும் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் இஸ்ரேல் குறித்த இந்திய நிலைப்பாட்டில் தெளிவு இல்லை. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இப்போதுதான் தெளிவு பிறந்துள்ளது. ஆனால், இந்தியா அரை நூற்றாண்டுக்கு முன்னரே செய்துகாட்டியது.
வாஜ்பாய்
பிரதமரானதும், அத்வானி இஸ்ரேல் சென்றார். அது முதற்கொண்டு இஸ்ரேலோடு இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது. மோடி ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேலிடம் ஆயுதங்கள் வாங்குவதும், உளவு வேலைக்கான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவதும் என்று நெருக்கம் பல மடங்குகள் அதிகமாயிற்று.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பைப்போல நமது பிரதமரின் நெருங்கிய நண்பர். இதனால் கடந்த அக்டோபர் 26 அன்று ஐ.நா. பொது
அவையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்தபோது, 120 நாடுகள் தீர்மானத்தினை ஆதரித்த வேளையில், இந்தியா, ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்துகொண்டு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் நவம்பர் 21 அன்று நடந்த ‘பிரிக்ஸ்’
நாடுகள் கூட்டத்தில் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என்று சீன அதிபர் முன்மொழிந்த தீர்மானத்தினை இந்தியா வழிமொழிய மறுத்துவிட்டது. ஆனால், நமது வெளியுறவுத்துறை அமைச்சர் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்குத் தனது எதிர்ப்பினை மட்டும் பதிவு செய்தார். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக மோடி எத்தனை நாள் நடிப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
போர்
நிறுத்தத்திற்கும், பிணையக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஹமாஸ் அமைப்பினர் தயார் என்று அறிவித்த பின்னரும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தயாராக இல்லை. அவரது பதவியைக் காப்பாற்றவும், தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கும் இந்த யுத்தம் அவருக்கு அவசியம் தேவை. போர் நின்றுவிட்டால் உடனடியாக அங்கே தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்நாட்டில் கடுமையான மக்கள் எதிர்ப்பை மீறி அவரால் வெற்றிபெற இயலாது. அவர் மீதுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை, யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்தவுடன் விசாரணை தொடரும். தண்டனை நிச்சயம் என்று சொல்கிறார்கள். எனவே, யுத்தத்தின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்த நெதன்யாகு முயற்சிக்கிறார்.
பத்து
இலட்சம் மக்கள் வாழும் காசா நகரையும், காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் நாட்டின் பகுதி என்று அறிவிக்கும் தீர்மானத்தை அவரது அமைச்சரவை சில நாள்களுக்கு முன் நிறைவேற்றியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மக்களை அங்கே குடியமர்த்தும் பணியையும் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளைக் கட்டத் தொடங்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக 60,000 இராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
“பாலஸ்தீனம், இஸ்ரேல் என்று இரு நாடுகளே இல்லை; இனி இஸ்ரேல் மட்டும்தான்” என்று
இஸ்ரேல் நிதி அமைச்சர் கொக்கரிக்கின்றார். காசா நகரின் நகர்மன்றத் தலைவர் முஸ்தபா குவாசத், “இது பேரழிவு; ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் கருதி நகரை விட்டுப் பீதியுடன் ஓடுகின்றனர். தங்க இடமின்றித் தரிசு நிலங்களில் மேற்கூரைகூட இல்லாமல் தங்கியுள்ளனர். உலக நாடுகளே, இக்கொடுமையைத் தடுத்து நிறுத்துங்களேன்!” என்று கதறுகின்றார்.
அரபு
நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் வெறும் கண்டனங்களோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக மௌனம் காக்கிறார்கள். டிரம்ப் உலகச் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காகக் காத்திருக்கின்றார். நெதன்யாகு, ‘அப்பரிசு பெற தகுதியான ஒரே நபர் டிரம்ப் மட்டும்தான்’ என
வழிமொழிகிறார். டிரம்புக்கு நோபல் பரிசினை வழங்காவிடில் நோபல் பரிசு தலைமைச் செயலகத்தை டிரம்பும், நெதன்யாகுவும் சேர்ந்து குண்டுகள் போட்டு அழித்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.
‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்!’ என்று அடிக்கடி சொல்கிறார்களே... அந்தத் தர்மம் எப்போது வெல்லும்? பாலஸ்தீனக் குழந்தைகளின் மரண ஓலம் எப்போது நிற்கும்?