news-details
கவிதை
இன்று தூய தெரேசா நமக்குக் கற்பிக்கும் அன்பின் மொழி!

சிறு மலரே! சின்னஞ்சிறு மலரே!

எளிய தியாகம் அன்பான சிரிப்பு!

பிறருக்குச் செய்யும் உதவிகளே

இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும்

என மொழிந்த தூய கன்னிகையே!

 

எளியவையாயினும் அவை இறைவனுக்கு

ஏற்றவையே எனக் கண்டவரே!

மிஷனரிகள், பூமாலை நெய்யும் தொழிலாளர்கள்,

நோயாளிகளின்

காவல் இளவரசியே! அன்பின் பாதையில் நடந்து

ஆருயிர் வாழ்வினை ஆண்டவருக்கு அர்ப்பணித்து

சின்னஞ்சிறு சேவைகளால் உலகையே மகிழ்வித்த

உத்தமத் தாயே!

 

துன்பம் நிறைந்த உலகில் ஒரு கருணைக் கடலாகத்

திகழ்ந்த ரோஜா மலரே!

மற்றவரை நேசித்துத் தன்னை மறந்து

சேவைகள் பல புரிந்து சாதனை படைத்தாய்!

 

புனித பூவே! பரிசுத்த நறுமணமே

சிறுபிள்ளை சிரிப்பில் சிகரம் தொட்ட தாயே!

மலர் மழை பொழியும் உன் பிரார்த்தனை - அதில்

மனிதரின் கடின உள்ளமும் மாறிடுமே!

 

கொடிய நோய் கண்டபோதும்

இறைவன் மேல்

உமக்கு இருந்த

பாசப்பிணைப்பு

தீர்ந்துபோய் விடவில்லையே!

 

ஆன்மாக்களை மீட்டெடுத்த

எங்கள் அற்புதமே!

உலகிற்கு எல்லாம் உன்னதத் தாயாம்

அன்னை மரியாவின் ஆசிதனைப் பெற்று

பூரணக் குணமடைந்தவரே!

 

இன்று எங்களுக்கு

இறைவனிடம் பரிந்துபேசி

இம்மையில் நாங்கள் நலமாய் வாழ

வரமளியும்  எங்களின் தூய தெரேசாவே!

 

மன்றாடும் எங்களுக்காக மனமிரங்கி

வேண்டிக்கொள்ளும்

எங்கள் ரோஜா மலரே !