இயேசு தாம் உருவாக்கிய இறையாட்சிப் பணிக்காகச் சீடர்களை, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், இயேசுவின் சீடர்கள் பெரும்பாலும் தாம் சீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுள் பலரும் “இயேசு அரசராக ஆட்சி செலுத்துவார். அவ்வாட்சியில் தாமும் பங்கு பெறுவோம்” (மாற் 10:35-45; மத் 20:20-28) என்றே கருதினர். “மானிட மகன் பலவாறு துன்பப்படவும், உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும்...” (மாற் 8:31; மத் 16:21; லூக் 9:22) வேண்டும் என இயேசு கூறியபோது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். எனவேதான், இயேசு தம் சீடர்களுக்கு மட்டுமல்ல, தம்மைப் பின்பற்றிய மக்கள் கூட்டத்திற்கும் சீடத்துவ அழைப்பின் தன்மையைப் பற்றித்தெளிவாய் விளக்குகிறார்.
சீடத்துவம்
என்பது ‘ஒரு விலைமதிப்பற்ற தியாகம்’ என்பது இன்றைய வழிபாட்டின் மையப்பொருளாக அமைகிறது. இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியமான பண்புகளைச் சீடத்துவ வாழ்வின் இலக்கணங்களாக முன்வைக்கின்றார் இயேசு: 1) உறவுகளையும் உயிரையும் மேலாகக் கருதுபவர்கள் (லூக் 14:26); 2) தம் சிலுவையைச் சுமக்கத் தயங்குபவர்கள் (14:27); 3) தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாதவர்கள் (14:33) ஆகியோரைத் தம் சீடத்துவ வாழ்விற்குத் தகுதியற்றவர்களாக எடுத்துக்காட்டுகின்றார். இந்த மூன்று தலைப்புகளின் கீழ் நமது சிந்தனைகளைச் சற்று விரிவாக்குவோம்.
முதலாவதாக,
இயேசு தமது சீடராக இருக்க விரும்புவோர் தம் உறவுகளை இழக்கவேண்டும் (லூக் 14:26) என்கிறார். பத்துக்கட்டளைகளில் நான்காவது கட்டளை, “உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட”
(விப 20:12) என்கிறது. இயேசுவின் போதனையின் மையமும் “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா
13:34) என்பதுதான். அப்படி இருக்க, உறவுகளை எப்படித் துறப்பது? இங்கே இயேசுவின் கூற்றை எப்படிப் புரிந்துகொள்வது? இயேசு தம்மிடம் வரும் சீடர் அனைவரும் தம் உறவுகளைத் துறந்துவிடவேண்டும் அல்லது வெறுத்து ஒதுக்கிவிட்டுத் தம்மைப் பின்பற்றவேண்டும் என்று கேட்கவில்லை; மாறாக, இவர்கள் அனைத்திற்கும் மேலான இடத்தைத் தமக்கும் தம் பணிக்கும் தரவேண்டும் என்றே கேட்கிறார். கிறித்தவச் சீடத்துவ வாழ்விற்குக் குடும்ப உறவுகள் தடையாக இருக்கக்கூடாது என்பதே இயேசுவின் கரிசனை (லூக் 9:59, 61; 1அர 19:20). அழைக்கும் குரல் கேட்டவுடனே பின்தொடர்வதே முழுமையான சீடத்துவம் (மத் 4:22; 9:9).
இரண்டாவதாக,
தமது சீடராக இருக்க விரும்புவோர் சிலுவையைச் சுமக்க வேண்டியிருக்கும் (லூக் 14:27) என்கிறார். அதாவது, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (லூக்
9:23) என்கிறார். மேலும், “தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர்; என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்” (மத்
10:39) என்றும் “மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை”
(மத் 8:20; லூக் 9:58) என்றும் கூறி, தம் வாழ்வைத் தொடர்ந்தவரைப் பின்பற்றிய சீடருக்குச் சிலுவைதான் சீடத்துவத்தின் அடையாளம் என உணர்த்துகிறார். எனவே, சீடர்கள்
சிலுவையைச் சுமக்க, துன்பங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். இலட்சியச் சிலுவைகளைச் சுமக்க மனமில்லாதவர்கள் துறவு வாழ்வில் தூரமிக்கவர்கள். சுமக்கத் தெரிந்தவர்கள் வரலாற்றில் வாழ்கிறார்கள்.
மூன்றாவதாக,
இயேசு தமது சீடராக இருக்க விரும்புவோர் தங்கள் உடைமைகளை எல்லாம் இழக்க வேண்டும் (லூக் 14:33); தங்கள் உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் (மாற் 10:21). இயேசுவின் சீடர் என்பவர் தன்னையே முழுவதுமாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறவர். தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கடவுளுக்குக் கொடுப்பவர். எனவே, உலகச் செல்வத்தின் மீதான பற்றை விட்டுவிட்டு, இறைவனை இறுகப் பற்றிக்கொள்வதுதான் சீடத்துவம்.
இத்துணை
கடினமான சீடத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுப்போர் அதன் தன்மையை நன்கு உணர்ந்திருக்கவேண்டும்; சீடராக முடிவு செய்யு முன் தீவிரமாய்ச் சிந்திக்கவேண்டும்; மேற்குறிப்பிட்ட இழப்புகளை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் தம்மிடம் உண்டா என்று சோதிக்கவேண்டும். இவ்வுண்மையை உணர்த்தத்தான் இயேசு கோபுரம் கட்டுதல், போருக்குச் செல்லுதல் என்னும் இரண்டு சிறு உவமைகளை எடுத்துரைக்கிறார். கோபுரம் கட்ட விரும்பும் ஒருவர் அதனைக் கட்டி முடிக்கத் தம்மிடம் பொருள் வசதி இருக்கிறதா? என்றும், போரிடப் போகும் அரசர் தம்மை எதிர்த்து வரும் வலிமை பொருந்திய அரசரை வெல்ல தம்மிடம் படைபலம் உண்டா? என்றும் சிந்தித்துத் தெளிந்த முடிவு செய்வதுபோல், இயேசுவைப் பின்பற்ற முன்வரும் சீடரும் இத்தனை இழப்புகளைத் தாங்கி இயேசுவைப் பின்பற்ற தம்மால் முடியுமா? எனத் தீவிரமாகச் சிந்தித்து இயேசுவைப் பின்பற்ற முன்வர வேண்டும் எனச் சீடத்துவத்தின் தன்மையை அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.
இன்றைய
சூழலில் இயேசுவின் சீடராக வாழ்தல் என்பது மிகவும் கடினமானதே. இன்று இயேசுவின் சீடராக வாழ்வதைவிட நம்பிக்கையாளராக, இயேசுவை மனத்தளவில் நம்புவோராக வாழ்வது மிக எளிது. இயேசுவை நம்பி வாழ்வதை ஒரு சமய வாழ்வு வடிவில் புரிந்துகொண்டதால் சமயச் சடங்குகள், வழிபாடுகள், கோட்பாடுகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கடைப்பிடித்தால் போதும் என நினைக்கின்றோம். இதுவல்ல சீடத்துவம்.
ஓர் அடிமையான ஒனேசிமுவைத் தன்னுடைய இதயத்துக்கு நெருக்கமான சகோதரராக ஏற்றுக்கொண்ட பவுல் (பில 12), சீடத்துவ வாழ்வுக்கு மிகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. மன்னிப்பதும் தீமை செய்தோரை அன்புடன் ஏற்பதுமே சீடத்துவம் என்பதைப் பவுல் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக நமக்குக் கற்பிக்கின்றார்.
இன்றைய
முதல் வாசகமும் கடவுள் அருளிய ஞானத்தாலும், அவர் அனுப்பிய தூய ஆவியாலும் கடவுளின் திட்டத்தை அறிவதும், அவரது திருவுளத்தை நிறைவேற்றுவதுமே நிலையான சீடத்துவம் என்கிறது. இறையாட்சிக்கான பயணத்தில் பயனற்ற (சாஞா 9:14), ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிற, கவலை தோய்ந்த மனத்திற்குச் சுமையாய் அமைகிற (9:15) சாதி, இனம், பணம், பதவி, அதிகாரம், அகங்காரம், புகழ், மமதை, வீண் பெருமை ஆகிய சாத்தானுக்கே உரிய சிறுமைகளைச் சுமந்தலையாமல், கடவுள் அருளும் தூய ஆவி என்னும் ஞானத்தால் (9:17) கடவுளின் திட்டங்களை அறிந்து, அவற்றிற்கேற்ப வாழ்வதே (9:18) நிலையான சீடத்துவம்.
நிறைவாக,
இயேசு காட்டிய, அவர் வாழ்ந்த சீடத்துவம் என்பது ஏழையரின் உள்ளத்தோராய் முழுமையாய் பகிர்தலும், இரக்கமுடையோராய் வாழ்தலும், எல்லாச் சூழலிலும் அன்புநெறியில் செயல்படுதலும், பகைவரை மன்னித்து அவர்களுக்காக வேண்டுவதும் ஆகும். மேலும், உண்மைக்காகவும் நீதிக்காகவும் எல்லாச் சூழல்களிலும் குரல் எழுப்பிப் போராடுவதும் உண்மையை நிலைநாட்டுவதும் கனிவு, பரிவு, பொறுமை, நன்னயம், நம்பிக்கை ஆகிய அறநெறிப் பண்புகளை வாழ்வாக்குவதும் இயேசுவின் சீடரின் இன்றியமையாத செயல்பாடுகளாகும்.
நாம்
கிறித்தவச் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதைவிட கிறிஸ்துவின் சீடராக, அவர் காட்டிய நெறியில் வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். மக்களைக் கிறித்தவர்களாக மாற்றவேண்டும் என்பதல்ல நம் பணி; மாறாக, இயேசுவின் பாதையில் சீடராகப் பயணிக்க உதவுவதும் அவரது போதனையை வாழ்வாக்க வழிகாட்டுவதுமே நமது கடமை.
இறுதியாக,
ஓர் எண்ணம்... இயேசுவின் சீடர்கள் என்று இன்று நாம் பகிர்ந்த சிந்தனைகள் குருக்கள், துறவறத்தாருக்கு மட்டும் என்று நாம் எண்ணிவிட முடியாது. இயேசு கலிலேயாவில் பணிகளை முடித்தபின், எருசலேம் நோக்கிய தமது பயணத்தில் (லூக் 9:51) அவரது வல்ல செயல்களைக் கண்டு தம்மைப் பின்தொடர்ந்த ‘பெருந்திரளான மக்களை’
(14:25) நோக்கிச் சீடத்துவத்தின் தன்மையை விவரித்துக் கூறுகிறார். எனவே, அவரோடு செல்லவும் அவரின் இறையாட்சியைக் கட்டி எழுப்பவும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.
எனவே,
‘என் சீடராய் இரு’
(14:26,27,33) எனும் குரல் கேட்கும் ஒவ்வொருவரும் துணிவோடும் தெளிவோடும் பணிவோடும் அவரைப் பின்தொடர முற்படவேண்டும். இவ்வழைப்பின் உயிர்நாடியாக, தன்னலம் மறந்து, சிலுவையைச் சுமந்து, இயேசுவைப் பின்தொடர்வது என்பது சவால் நிறைந்ததே. இருப்பினும், திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவது போல, “இயேசுவோடு பின்செல்லுதலே நம் மகிழ்வு”
(மறையுரை, மார்ச் 6, 2014), தியாகங்களுக்குத் தயாராக இல்லாத உள்ளங்களால் சீடத்துவம் தரும் மகிழ்வை நிறைவாகப் பெற இயலுமோ? சீடத்துவம் ஒரு விலைமதிப்பற்ற தியாகம்!