news-details
சிறப்புக்கட்டுரை
அன்றாட வாழ்வில் அன்பின் வெளிப்பாடுகள்

அன்பு என்பது

ஆன்மாவின் மணியோசை!

அதை இசைத்தால் எழுவது அன்பின் வெளிப்பாடு!’

அன்பே எனது அழைப்புஎன்று உணர்ந்தவளாய், தனது 15-வது வயதில் இறைவனின் கரம் பற்றிப்பிடிக்கத் தன்னையே தியாகமாக்கியவள் சிறுமலர் குழந்தை தெரேசா என்ற சின்ன ராணி!

கிறிஸ்துவே என் அன்பு, அவரே என் நிறைவாழ்வு, அன்புக்காக இறப்பதே என் நம்பிக்கை, இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல், அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்குஎன்று பார்போற்றும் குழந்தை தெரேசாவின்அன்றாட வாழ்வில் அன்பின் வெளிப்பாடுகள்எங்ஙனம் அமைந்திருக்கின்றன என்பது பற்றிய ஒரு பார்வை...

குழந்தை தெரேசா தன்னுடைய ஆன்மிக வழியைஅன்பின் வழிஎன்று தனது நூல்களில் சித்தரிக்கின்றார். தனது அழைத்தலின் திறவுகோலே அன்புதான். திரு அவை இதய அன்பினால் பற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த அன்புத் தீ அணைந்து விடக்கூடாது; அதற்காக நான் செபிக்க வேண்டுமென்று நற்கருணை முன் முழந்தாளிடவும் அவள் தயங்கவில்லை. அன்பின் வெளிப்பாடாகவே தன் செயல்கள் ஒவ்வொன்றையும் குழந்தை தெரேசா பார்த்தாள். அன்பு என்ற உணர்வு அனைத்து அழைத்தல்களையும் தாங்கி நிற்கின்றது. தெரேசா அன்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித அன்பு குறைவுள்ளது, முடிவுடையது, நிரந்தரமற்றது; ஆனால், நம் கடவுள் நம்மிடம் காட்டுகின்ற அன்பானது முடிவில்லாததாகும்; இதனை ஆழம் பார்க்கவோ, எல்லை காணவோ, அளந்து பார்க்கவோ நம்மால் இயலாதுஎன்கிறார்.

குழந்தை தெரேசாவின் மனம் மாசற்ற, கள்ளங்கபடமின்றி அனைவரிடமும் வேற்றுமை பாராட்டாமல் அனைவரையும் அன்பு செய்யும் இதயமாக அமைந்திருந்தது. தன் அன்னை தனது சிறுவயதிலேயே விண்ணகம் நோக்கிச் சென்றபோது தன் அன்னையிடம் காட்டிய அன்பை இயேசுவின் தாய் அன்னை மரியாவிடம் வெளிப்படுத்தினாள். அனுதினமும் மாதாவின் சுரூபத்தின் முன் தன் தோட்டத்து மலர்களால் அலங்கரித்தாள். தனது மூத்த சகோதரி பவுலினைத் தனது அன்னையாக இருக்க வேண்டும் எனக் கேட்டு, சிறு சிறு செயல்களால் அவர்களை மகிழ்விப்பதில் ஆர்வம் காட்டினாள்.

நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழையமாட்டீர்கள்; குழந்தையைப் போல் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன் (மத் 18:3-4) என்ற இறைவார்த்தை குழந்தை தெரேசாவின் வாழ்விற்கு விதை போன்று அமைந்தது. தனது வாழ்வில் அன்பின் வெளிப்பாடாகக் குடும்ப வாழ்விலும் தன் தந்தையோடும் உறவுகளோடும் சகோதரிகளிடமும் குழந்தை உள்ளம் கொண்டு நடைபயின்றாள். அத னையே தான் வாழ்ந்த கார்மேல் துறவற குழுமத்திலும் கடைப்பிடித்தாள்.

தன்னோடு வாழ்ந்த துறவற சகோதரிகளை மகிழ்விக்க கவிதைகள் பல எழுதினாள். சிறு சிறு துணுக்குகளையும் நகைச்சுவைகளையும் கூறி அனைவரையும் மகிழ்வித்தாள். முதிர்வயதுடைய துறவிகளுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களை மகிழ்வித்தாள். அனைத்தையும் அன்பர் இயேசுவிடம் தான் செய்கின்ற புண்ணிய மலர்களுக்கேற்ப ஆன்மாக்களைத் தரவேண்டும் என்று விண்ணப்பித்தாள்.

ஒருமுறை நாளிதழில் வந்த குற்றவாளி பிரான்சீன் என்ற மனிதன் மனம் மாறுவதற்காகத் தியாகத்துடன் செப மலர்களை அர்ப்பணித்தாள். அது மட்டுமில்லாமல், கடவுளிடம் அவன் மனம் மாறியதற்குரிய அடையாளம் தரவேண்டுமென்று மன்றாடினாள். பிரான்சீன் தனது தண்டனையைப் பெறும் முன், தன் பாவத்திற்கு ஒப்புரவு பெற்று குருவானவர் கரங்களிலிருந்த சிலுவையை முத்தம் செய்தான் என்ற செய்தி கேட்டு குழந்தை தெரேசா ஆனந்தமடைந்து, இயேசுவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நன்றி கூறினாள். இது இயேசுவின்மீதும் பிறர்மீதும் அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

புனிதர்கள் தங்கள் வாழ்வில் கடவுள்மீது அன்பு செலுத்துவதைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கருதினர். அந்த அன்பானது, இருளில் மிளிர்கின்ற ஒளி இருளை அகற்றி, தன் கதிர்களால் பிறர் கண்கள் காண வழிவகுப்பதுபோல, கடவுள் மீது வைத்துள்ள அன்பு பிறர்வாழ்விலும் செயல்பட வைத்தது. ‘ஆண்டவர் இயேசுவின் அன்பு என்னை உந்திக் கொண்டேயிருக்கிறதுஎன்று அடிக்கடி தன் இதயத்தில் கூறிக்கொள்வாள். துறவு நாள்களில் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது பிற சகோதரிகள் துணி சுத்தம் செய்யும் தண்ணீர் தன் முகத்தில் படுகின்றபோதும் மனங்குமுறாமல் அவர்களுக்கு உதவி செய்து அனைவரின் அன்பையும் பெற்றாள்.

நன்மை இருக்கும் இடத்தில் தீமையும் அலைமோதும்என்பதற்கேற்ப குழந்தை தெரேசா எப்போதும் தன்னைக் குறை கூறிக்கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரியைக் கண்டபோதெல்லாம் மனதினுள் ஒருவித பயஉணர்வு தோன்றுவதை இயேசுவிடம் கூறி, ‘அன்பிற்குப் பதில் அன்பேஎன்ற நுணுக்கமான கருத்தை அந்தச் சகோதரியிடம் தனது அன்புச் செயல் வழியாக எண்பித்து, அவர்களது அன்பையும் பெற்றாள். இயேசுவிடம் கொண்டிருந்த ஆழமான பக்தி, நோயாளிகளிடத்தில் அவர் காட்டிய பரிவு, கருணை போன்ற நற்பண்புகளில் சிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்தாள்.

அன்பு என்பது ஓர் அற்புதமான உணர்வு. இது ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளச் செய்கிறது. குழந்தை தெரேசா கடவுள்மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும், ஏழை எளியவர், நோயாளிகள், பாவிகள்மீது அன்பும் கருணையும் காட்டினார். அவரது வாழ்வில் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்தார். 9 ஆண்டுகள் துறவு வாழ்வு வாழ்ந்தார். மொத்தம் 24 ஆண்டுகள் உலகத்தில் வாழ்ந்தார். இன்று உலகம் போற்றும் புனிதையாக, மறைவல்லுநராக, மறைபோதக நாடுகளின் பாதுகாவலியாக விளங்குகின்றாள். அவரது அன்பின் செயல்பாடுகள்சிறு வழி என் இயேசுவின் அன்பின் வழிஎன்ற நோக்கில் விண்ணிலிருந்து மலர்களாகிய வரங்களை நம்மில் பொழிந்துகொண்டிருக்கிறாள்.

நம் அன்றாட வாழ்விலும் பிறரிடம் அன்போடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் உதவி செய்வதிலும் பிறர் துன்பங்களில் பங்கேற்பதிலும், பிறரைப் பாராட்டி மகிழ்வித்து இறைச் செயல்களைப் பிறருக்குச் செய்து, அன்பின் வழியில் வாழ்ந்திட நடைபோடுவோம்.