news-details
சிறுகதை
பனிமய மாதா திருவிழா (காவல் அன்னை (9) - தொடர் கதை)

வாங்க வாங்க... எல்லாரும் வாங்கஎன்று அன்போடு வரவேற்றார் ஆல்பர்ட்.

பரவாயில்லே தம்பி, எங்க வீட்டை நல்லா சுத்தம் பண்ணி வெச்சிருக்கீங்கஎன்றாள் அருளம்மா.

மாமா, நீங்க செய்த உதவி பெரிசு! வீடு ஆளில்லாமல் மோசமாய்க் கிடந்திருக்கும். நீங்களும் அத்தையும் இந்த வீட்டை ஒழுங்குபடுத்தி, நாங்க வந்து தங்குவதற்கு ஏற்றதாய் சரிபண்ணிட்டீங்கஎன்றாள் அமலி.

ரொம்ப தேங்க்ஸ் மாமா, அத்தைஎன்றார் சேவியர். ஆல்பர்ட்டின் மகளும் மகனும் மிகவும் பணிவோடு தோஸ்திரம் சொல்லிக்கொண்டனர்.

அக்கா, நீங்க இருக்கிற நாளிலே எங்க வீட்லே தான் நீங்க சாப்பிடணும்என்றார் ஆல்பர்ட்.

எதுக்குத் தம்பி கஷ்டம். ஏதாவது சாப்பிட சமைச்சுக்கிறோம்என்று சிரித்தாள் அருளம்மா.

நாங்க என்ன நாத்தனாரே, உங்களுக்கு வேண்டாதவங்களா? அதெல்லாம் சொல்லப்படாது. வேளா வேளக்கி எங்க வீட்லேதான் நீங்க சாப்பிடணும்என்றாள் ஆல்பர்ட் மனைவி விக்டோரியா.

சேவியருக்கு மட்டும் சாப்பாட்டை இங்கே கொண்டு வந்து தாரோம். நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்லே வந்து சாப்பிட்டுக்கங்கஎன்றார் ஆல்பர்ட்.

சரி தம்பி, உங்க ஆசையை நான் கெடுக்க விரும்பலை. சேவியருக்கு மட்டும் இங்க கொண்டு வந்து வச்சுருங்க, நாங்க ரெண்டு பேரும் உங்க வீட்ல சாப்பிட்டு இருக்கோம். சரிதானே நாத்தனாரே...” என்றாள் அருளம்மா

நாளைக்குப் பனிமய மாதா தங்கத்தேர் சுத்தி வரும், எல்லாரும் கோவிலுக்குப் போவோம், பூசைப் பார்ப்போம். இதுதானே நம்முடைய கடமைஎன்றார் ஆல்பர்ட்

பனிமய மாதானா சேவியருக்கு உசுரு! சின்னப் பிள்ளையிலிருந்து பீடச்சிறுவனாக இருந்தார்லேஎன்றாள் அருளம்மா.

ரொம்ப சரியா சொன்னீங்க அக்கா! அதோட இன்னைக்குச் சாயந்தரம் நம்ப தெருவிலே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க. அந்தப் பெண்ணை நீங்க வந்து ஓர் எட்டு பார்த்துவிட்டால் நல்லதுஎன்றார் ஆல்பர்ட்.

உங்க விருப்பப்படி போவோம்என்றார் அருளம்மா.

ஏன்மா, நம்ம வந்திருக்கிறது பனிமய மாதாவோட தேர்த் திருவிழாவுக்குத்தானே? இப்ப போய் பெண்ணைப் பார்க்கிறோம். அது என்ன, எனக்குச் சரியா படலைஎன்றார் டாக்டர் சேவியர்.

இதனால என்ன இருக்கு டாக்டர்! நான் உங்களைப் பத்திச் சொல்லி வச்சிருக்கேன். எல்லா விவரத்தையும் கேட்டவங்க, ரொம்ப எதிர்பார்த்து காத்து இருக்காங்க. இப்பப் பாக்குறது தப்பில்ல, பிடிச்சா சொல்லுங்க... முடிப்போம். இல்லனா விட்ரலாம்என்றாள் மாமா.

பெண் என்ன படிச்சிருக்குத் தம்பி?” என்றாள் அருளம்மா.

எம்.எஸ்.சி., பி.எட். படிச்சிட்டு நம்ம செயிண்ட் மேரிஸ் காலேஜ்ல வேலை செய்யுது, உங்க குடும்பத்தைப் பத்தி அவங்களுக்கு நல்லாவே தெரியும் அக்காஎன்றான் ஆல்பர்ட்

நான் வரலை அம்மா, தங்கச்சியைப் பார்க்கச் சொல்லுங்கஎன்றார் டாக்டர் சேவியர்.

தங்கத் தேர தரிசித்த பிறகு பெண்ணைப் பார்க்கலாம்ல? இதுல என்ன இருக்குஎன்றாள் தாய்.

சரிம்மா... உங்க விருப்பப்படி பார்ப்போம்... சரி தானே!” என்றார் அமைதியாய் சேவியர்.

மறுநாள்  மாதா கோவில் திருப்பலியைக் கண்ட பிறகு, அவர்கள் தங்கத்தேர் வலம் வந்ததைத் தரிசித்தார்கள். பிறகு ஆல்பர்ட் சென்னை வீட்டில் போய் பேராசிரியரான பெண்ணைப் பார்த்தார்கள். பெண்ணின் பெயர் சந்திரமேரி. அவள் அழகாக இருந்தாள். அருளம்மாவுக்கும் அமலிக்கும் பிடித்துப் போய்விட்டது.

சென்னைக்குப்போன பிறகு நாங்கள் தம்பிக்கு விவரத்தைத் தெரிவிக்கிறோம்என்றாள் அருளம்மா!        

(தொடரும்)