news-details
ஆன்மிகம்
கருணை உன் வடிவல்லவா!

இறைவனால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகத்தான் அன்னையரைப் படைத்தார்என்பது சீனப் பழமொழி. அன்னையர்களின் தன்னலமற்ற அன்பு, பராமரிப்பு, தியாகம் ஆகியவற்றை உணர்த்தவே இவ்வாறு சொல்வதாகப் புரிந்து, இச்சொற்றொடரின் பின்புலம் அறியும் எவரும் தாயன்பைக் கட்டாயம் கொண்டாடுவர்.

இறைவனைத் தந்தையாகவே புரிந்து போதித்த கிறித்தவமும் இன்று அன்னையாகவும் தந்தையாக வும் கடவுளை ஏற்று, ‘இறைத்தந்தாய் (தந்தை + தாய்) என்று கொண்டாடுகின்றது. நாம் இந்த உலகத்திற்கு வரவும் வாழவும் நம் தந்தை மற்றும் தாயிடம் பொறுப்பினைக் கடவுள் பகிர்ந்து தந்திருக்கிறார். ஈரைந்து மாதங்கள் தாய் குழந்தையைக் கருவில் சுமப்பார்; தந்தை அவரையும் சேர்த்து உயிருள்ளவரை இருவரையும் மனத்தில் சுமப்பார் என்பதுதான் உண்மை. இந்த மாதம் நாம் இறையன்னையின் புகழ்பாட வாய்ப்புப் பெற்ற மாதம். ஆதலால், நம் அன்னையைப் பற்றியும், அன்னையாக நம்மைப் பற்றியும் சிறிது உளவியல் சார்ந்து சிந்திப்போம்.

ஒரு மனிதனின் உடல், உள்ள, ஆன்மிக நலனுக்கு யார் பொறுப்பு என்று பார்ப்பதற்குப் பதிலாக, இயற்கையாக இறைவன் எப்படி அதற்கு வகை செய்திருக்கிறார் என்று கேட்பது நலம் பயக்கும். பெற்றோரை ஆதாரமாகவும், சமூகம் முழுமையையும் அடித்தளமாகவும் வைத்துப் பின்னப்பட்ட தேவைகளின் தொடக்கம், குழந்தை கருவுருவாவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பிக்கின்றது என்று அறிந்தபோது ஆச்சர்யம் அடையாமல் இருக்க முடியவில்லை.

பொதுவாக, 280 நாள்கள் அல்லது ஏறக்குறைய 40 வாரங்கள் நாம் நமது தாயின் கருவறையில் குடி கொள்கிறோம். முழுமையாக 9 முதல் 10 மாதங்களாகவும் அல்லது சில காரணங்களினால் மாறும் இந்த நாள்கள் மிக மிக முக்கியமான அடித்தள நாள்களாக அமைகின்றன. ஆம், உயிர் உருவாக 9 மாதங்களுக்கு முன்பாகப் பெற்றோரின் வழியாக ஏற்படும் உளவியல் தாக்கம் இந்த நாள்களில் இன்னும் வலிமையானதாகின்றது. மூளை முழு வளர்ச்சியடைய காலம் எடுத்துக்கொண்டாலும், அது தன் தாயின் வயிற்றிலிருந்தவாறே தன்னைச்சுற்றி நடப்பவற்றைக் கவனிக்கின்றது.

ஆக, அவை நல்லவைகளாக இருந்தால் பின்னாள்களில் நேர்மறையான தாக்கத்தினையும், தீயவையாக இருந்தால் எதிர்மறையான தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. கரு அனைத்தையும் துரிதமாகக் கற்கும் திறன் படைத்தது என்று உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நாள்களில் தன்னைச்சுற்றி நடக்கும் அனைத்தையும் கரு கூர்ந்து கவனிக்கின்றது. எனவே, தாயின் நாள்களில் தாயின் மகிழ்ச்சி கருவின் இன்றியமையாத அடிப்படைத் தேவைகளில் ஒன்று.

அடுத்து, மிகவும் முக்கியமானது நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொள்ளுதல். தான் கருவுற்றிருப்பதை அறியும் தாயும், அவர் வழியாக அவ்வுயிரினைப் பற்றி அறியும் அவரது தந்தையும், அவர்கள் வழியாக அச்செய்தியினை அறிந்துகொள்ளும் குடும்பமும் சமூகமும் அந்தக் குழந்தையின் வரவை மகிழ்வோடு ஏற்கவேண்டும். இதில் ஏற்படும் பிழை பின்னாள்களில் (சமூக வெறுப்பு சுயவெறுப்பாக மாறி) தற்கொலை எண்ணமாகக்கூட வாய்ப்புள்ளது.

அடுத்தது நிர்ப்பந்தக் கோளாறு. பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறிய தாமாக ஆசைப்படுதலாகும். கரு உருவாகும்போதே இது நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை அறிந்தவர்களும் கூட இதில் பிழை செய்கிறார்கள். தன்னைத் தன் பாலினமாகப் பாவிக்காமல், இவர்கள் பிறந்த பின் குணத்தாலும் செயல்களாலும் மாறிய ஒரு வாழ்க்கையைப் பிரதிபலித்து, பெரும்பாலும் சமூக நகைப்பிற்கு உள்ளாகிறார்கள். சுயவெறுப்பு, வெறுமையுணர்வு, சமூகவிரோத நடத்தை, கைவிடப்பட்ட எண்ணம் போன்றவற்றின் விதைகள் இந்தக் காலத்தில்தான் உருவாகின்றன. தாயும் அவர் சார்ந்த சமூகமும் கொண்டுள்ள நல்ல நேர்மறையான நம்பிக்கைகளும், தாய்க்கும் அதன் கருவுக்கும் கொடுக்கப்படும் நல்ல அன்பும் செபங்களும் குழந்தையின் எதிர்கால உளவியல் வாழ்க்கைக்கு நல்ல தூண்டல்களாகும்.

குழந்தை பிறந்த முதல் ஒன்பது மாதங்களை உளவியலாளர்கள் தாயோடு உடல் சார்ந்த பிணைப்பு நாள்களாகக் கணிக்கிறார்கள். ‘மனோ பகுப்பாய்வுக் கோட்பாட்டின் தந்தைஎன்றழைக்கப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு இந்நாள்களைசிம்பயாடிக் யூனியன்அதாவதுசகவாழ்வு நாள்கள்என்கிறார். அதாவது, குழந்தை தன் தாயிலிருந்து வேறுபட்டவர் என்பதை இன்னும் உணரவில்லை; தாய் தன் உடலின் ஓர் உறுப்பு என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நாள்களில்தான் தாயின் உடனிருப்பு ஒரு குழந்தைக்குத் தேவை.

பொதுவாகவே, தாய் தன் குழந்தையின் கண்களைக் கூர்ந்து பார்ப்பது மிகவும் சிறப்பானது. காரணம், குழந்தைகள் உணர்வுகளைக் கற்கும் பாடசாலை அதுதான். தாயின் கண்கள்தான் குழந்தை உலக மனிதர்களைப் படிக்கும் புத்தகம். குழந்தையின் கண்களும் தாயின் கண்களும் பார்க்கும்போது இருவரின் இதயமும் ஆக்சிடோசின் என்ற சுரப்பி மூலம் இணைகின்றன. குழந்தை தன் தாயின் பிரமிப்பினை உணரவேண்டியது அவசியம். இந்த ஆக்சிடோசின் செய்யும் வேலை என்ன தெரியுமா? எத்தனை பெண்கள் இருந்தாலும், ‘என் தாய்தான் அழகானவள்என்ற உணர்வைக் குழந்தைக்கும், எத்தனை குழந்தைகளிலும்என் குழந்தைதான் அழகானதுஎன்ற எண்ணத்தைத் தாய்க்கும் தருகின்றது.

இப்படித் தாயின் உடனிருப்பில் குழந்தை வளர வாய்ப்பின்றி குழந்தைப்பருவத் தேவைகள் மறுக்கப்பட்டதென்றால், தாயின்றி அழுத அனுபவங்கள் பின்னாள்களில் அவர்களை யாரையும் நம்ப விடுவதில்லை. தகுந்த நேரங்களில் தாயின் கண்களைக் காணாததால், மற்றவர்களின் உணர்வுகளை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. தேவையில்லாமல் கோபமடைவதும் சண்டையிடுவதும் இவர்களின் பொதுவான குணங்களாகின்றன. குற்றச் செயல் புரிவதும், ‘எனக்கென்று யாருமில்லைஎன்று உணர்வதும் இவர்களின் பிரதானமாகிறது.

உடல் சார்ந்த உடனிருப்பு ஒன்பது மாதமென்றாலும், உணர்வு சார்ந்த உடனிருப்பு முதல் ஏழு ஆண்டுகள் என்றும் சில உளவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஏழு ஆண்டுகளில் தன் தாய் பார்த்து உறங்கவேண்டும், எழுந்தவுடன் தன் தாய் வேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். அழுதாலும் சிரித்தாலும் அவர்கள் அறியப்படுத்த விரும்பும் முதல் நபர் தாய்தான். பரந்தவெளியில் வேகமாக ஓடும் குழந்தை நின்றவுடன் திரும்பித் தேடிப் பார்ப்பது தன் தாயைத்தான். அவர்களின் உணர்வுத்தேடல் வெற்றியடையவில்லை என்றால், அது அதிக பய உணர்வைக் குழந்தைக்குள் உண்டாக்குகின்றது. ஏழு ஆண்டுகள் என்று சொன்னாலும், அண்மைக்காலத்தில் சில உளவியலாளர்கள் தாய்-சேய்க்கான இந்த உணர்வுப் பிணைப்பு இறுதிமூச்சு வரையும் நீடிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

உலகத் தாய்மார்களுக்கே இப்படியென்றால், உலகத்தினைப் படைத்த உன்னதரின் தாயாம் நம் அன்னை மரியாவுக்கு எவ்வளவு மகத்துவம் கொடுக்கப்பட வேண்டும்! மாபரனை உலகிற்குக் கொண்டுவரும் கருவியாக மட்டும் நாம் அவரைக் குறுக்கிவிட முடியுமா? சிலுவையில் செந்நீர் சிந்தும்போதும், ‘மக்களின் மீட்பே என் தியாக வாழ்வின் இலக்குஎன்று அமைதி காக்க வைத்தது நம் அன்னை கூறிய அல்லது வாழ்ந்த தியாகப் பாடத்தின் விளைவல்லவா!

மகத்துவமாய் பிறந்தாரென்று மகிழ்ந்த நேரத்தில், வாளொன்று உன் இதயத்தைத் தாக்குமென்று குழந்தையான இயேசுவைக் கையில் வைத்திருந்த போது அறிந்த இந்த அன்னையின் மனம் உயிரற்ற அன்பு மகனைச் சிலுவையின் நிழலில் தாங்கிச் சந்தித்த வேதனைகளைத் தன் மகனுக்கும் மற்றவருக்கும் கடத்தாமல் தனக்குள்ளேயே தாங்கிக் கொண்ட வேதனையின் ஆழம், இயேசுவுக்காக மட்டுமே என்று என்னால் எப்படிக் கடந்துபோக முடியும்? அது நிச்சயமாக எனக்காகவும், என் மீட்புக்காகவும்தான். அதனால்தான் கானாவூரில் தானே முன்சென்று தேவையில் வாடுவோரின் கவலையை நீக்குகிறார் இறையன்னை. காரணம், இந்த அன்னை கருணையின் வடிவமே!