செல்வந்தன் ஒருவன் ஒற்றைக் காலில் நின்று தவம் கிடந்தான். கடவுள் தோன்றி தங்கம் தரவேண்டும் என்பதே அவனது கோரிக்கை. ஏழைகளுக்கு உடனடியாக வரும் கடவுள், அவனுக்குத் தாமதமாகவே வந்திறங்கினார். கடவுள் தமது செங்கோலால் ஒவ்வொரு சிறிய பொருளையும் தொட்டார். தங்கமாக மாறியது. அவனது உள்ளத்தில் பெரிய மகிழ்ச்சி. கடவுளும் தொட்டுக்கொண்டே இருந்தார். பேரானந்தத்தில் திளைத்தான். கடவுள் தம் செயலை நிறுத்தவில்லை. ஆனால், அவனுள் வருத்தம், சோகம், சோர்வு. கடவுளிடம் சற்றுச் சத்தமாகவே கூறினான்: “கடவுளே! அந்தச் செங்கோலை மட்டும் தந்துவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று.…
மனிதர்கள்
ஆசைப்படுகிறார்கள்! ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்! ஒவ்வொரு நொடியும் அவனது ஆசைகள் மாறுகின்றன. மாறிக்கொண்டே இருக்கின்றன. ‘மனம் ஒரு குரங்கு’ என்பதுபோல மாறுகின்றான். தற்கால உலகினில் அவனது ஆசைகள் முரண்பட்டு முட்டிக்கொள்கின்றன. தான் ஆசித்தது கிடைத்துவிட்டது என்றாலும், அவன் ஆசித்தது கரங்களில் கிடைத்தது. அடுத்த கணமே பழையதாய் மாறியதை நினைத்து தன்னிடமே கோபம் கொள்கின்றான். இவ்வாறாக, தாங்கள் பார்ப்பது, கேட்பது, தொடுவது, நுகர்வது, சிந்திப்பது என அனைத்தையும் அபகரித்துக்கொள்வதில்
உள்ள வேகம் கூடிக்கொண்டே செல்கிறது.
மனிதச்
சிந்தனைகளின் அளவுக்குமேல் வியாபார உலகமும் தனது உற்பத்தித் தந்திரங்களைத் தந்துகொண்டே இருக்கிறது. சந்தைக் கலாச்சாரத்தில் உடனுக்குடன் கலந்து குவிந்துவிடுகின்றன. மானுடருக்குத் தேவையானது என்பதல்ல; மாறாக, சந்தையில் இருப்பது இவரிடத்திலும் வேண்டும் என்ற மனநிலையில் சந்தைக் கலாச்சாரம் மானுடர்களை விழுங்கி பல ஆண்டுகளாகி விட்டன.
கடவுள்
அழகிய உலகினைப் படைத்திருக்கிறார். அனைவருக்குமான வாழ்வை உருவாக்கியிருக்கின்றார். இது ஓர் அழகான வட்டம். ஒருவர் சுவாசிக்கும் காற்று எங்கும் வியாபித்திருக்கிறது. ஒருவர் குடிக்கும் தண்ணீர் எங்கும் நிறைந்திருக்கிறது.
ஒருவர்
வாழும் பூமி எங்கும் தாங்கிக்கொள்கிறது. சந்தையில் தருவது எனக்கு மட்டுமே! கடவுள் தருவது எல்லாருக்குமே! சந்தை என்னை விற்கிறது! கடவுளின் இயற்கை என்னை வாழ்விக்கிறது! நான் பருகும் தண்ணீரைச் சந்தை எனது வீட்டினுள் தருகிறது. கடவுள் நான் செல்லும் இடமெல்லாம் தண்ணீர் தருகிறார். சந்தை எனது உழைப்பினை உறிஞ்சிக்கொள்கிறது. கடவுள் எனது உழைப்பிற்குப் பலன் தருகிறார். எனக்கு மட்டுமல்ல, வாழும் ஜீவராசிகள் அனைத்திற்கும் தருகிறார்.
ஆம்,
நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஓர் எளிய வாழ்வினை வாழ்ந்தவராகத் திகழ்கிறார்... இன்று நாம் கொண்டாடும் ‘எழிலரசி’,
‘சின்ன ராணி’ என்று பாசமாக அழைக்கப்படும் புனித குழந்தை தெரேசம்மாள். சத்தம் மிகுந்த இவ்வுலகில் சலனமில்லாமல் வாழ்ந்தவர், செபித்தவர், சிந்தித்தவர். உலகெங்கும் அன்பின் நற்செய்தியாய் இன்றளவும் செயலாற்றுகிறார். சூரியனின் வெளிச்சம் பூமியைச் சூழ்வதுபோல், அவரது ஆன்மாக்களின் மீட்புக்கான செபம் இன்றும் நம் உலகைச் சூழ்ந்திருக்கிறது.
குழந்தை
தெரேசம்மாள் சந்தைக்குச் சென்றவரல்லர்; வாங்கியவரும் அல்லர்; விற்றவரும் அல்லர்; சந்தைக் கலாச்சாரம் என்பது ஒரு துளியும் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்தவர். அணிகலன்கள் இல்லை, ஆபரணங்கள் இல்லை, முகப்பூச்சுகள் இல்லை, வாசனைத் திரவியங்கள் எதுவுமில்லை. ஆனால், அழகோ அழகு! கொள்ளை அழகு! மல்லிகையும் தோற்கும் அளவுக்கு அழகு! இறையன்பினால் சுடர் வீசுகிறார்! ஆனால், நம்மைச் சூழ்ச்சியால் தந்திரமாய்ப் பிரித்தது சந்தைக் கலாச்சாரம் தானே! இந்தக் கலாச்சாரம் கண்களுக்குப் பளபளவென, கமகமவென, மினுமினுவென, சுடச்சுடவென, வெதுவெதுவென நிற்கும்போது அவனே எனக்குத் தோழன் என்று சொல்லும்போது, ‘நானே தோழன் வேடத்தில் வந்த எமன்’ என்று சிரிக்கின்றானே சந்தை! என்னவென்று சொல்வது?
ஒரு
சூரியன், ஒரு நிலா, கோடி விண்மீன் வெளிச்சமும் அழகும் குறைவுபடுகிறதா? இல்லையே! ஆம், அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம்தானே நம் பூமி! அது கடவுளிடமிருந்து தோன்றியது அல்லவா! அதேபோன்று, தனது அழைத்தலின் திறவுகோல் அன்பு என்பதை உணர்ந்து, அன்பே என் அழைப்பு, கிறிஸ்துவே என் அன்பு, அவரே எனது இறைவாழ்வு என்று புனித குழந்தை தெரசம்மாள், அன்பை ஆடையாக அணிந்து இறையன்பினால் உந்தப்பட்டு, எளிமையின் அரசியாய், ‘கீழே கிடக்கும் ஒரு குண்டூசியை எடுப்பதன் மூலம் ஓர் ஆன்மாவை மீட்க முடியும்’
என்று கூறி எளிய வாழ்வு வாழ்ந்தது ஆச்சரியம் அல்லவா! அவளின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழும் நாமும், எளிமையான உள்ளம் கொண்டவர்களாய், சின்னஞ் சிறியவற்றையும் பேரன்போடு செய்வோம். இறையன்பினால் ஈர்க்கப்பட்டு, நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் அன்னையவளின் வழி தொடர்வோம்!