news-details
கவிதை
கவிதைச் சாரல்கள்

அப்போதும்

இப்போதும்

ஏன் எப்போதுமே

தெய்வ தரிசனம்

எல்லாம்

தெய்வங்கள் இல்லாக்

கோவில்களில்

மட்டுமே!

தெய்வங்களோ

வீதிகள்தோறும்

சாமானியர்களோடு

சரிசமமாய்

வீதி உலாவில்!

 

விதி விலக்குகள்

விளங்காததுதான்

விவரங்கள்

தெரியும் வரை!

 

புன்னகை

நேர்மறை உணர்வின்

ஆயுதம்!

கோபம்

எதிர்மறை உணர்வின்

ஆரம்பம்!

உணர்வுகளின்

கூட்டுப் பலனே

ஆரோக்கியமான

உள்ளத்தின்

மொத்த எடை!

 

பொறாமைப்பட்டால்

பொலிவிழந்து

போவாய்!

ஆணவம் கொண்டால்

அழகு இழப்பாய்!

சீறிப்பாய்ந்தால்

சீர்மை இழப்பாய்!

புறங்கூறித் திரிந்தால் 

அகம் இழப்பாய்!

திமிறினால்

திறன் இழப்பாய்!

அன்பு பொலிவாக்கும்!

தாழ்ச்சி

அழகு சேர்க்கும்!

சாந்தம் சாந்தி தரும்!

பணிவு உயர்வு தரும்!

 

நேரங்கள் எல்லாம்

எதிர்காலத்தையும்

நினைவுகள்

எல்லாம்

கடந்த

காலத்தையுமே

சுற்றிக்

கொண்டிருக்க

நிகழ்காலத்தைப்

பற்றி

நினைக்க

நேரத்திற்கே நேரமில்லை!

 

பலவீனம்

பழி வாங்கும்!

வலிமை

மன்னிக்கும்!

அறிவு

பொருட்படுத்தாது!

பிறரது

குறைகளையும்

உதாசீனங்களையும்!

 

தெய்வங்கள்கூட

அவ்வப்போது

தவறிவிடுகின்றன!

பக்தர்களின்

தீவிர அன்புக்குப்

பதில் தரத் தெரியாமல்

திணறி

விடுகின்றன!

 

விமர்சனங்களைக் கல்லாக்கி

மனத்தைக் கடலாக்கும்

நுட்பம் அறிந்தோர்

வாழ்க்கைப் பெருங்கடலின் 

சுனாமியிலும்

பெருஞ்சூழலிலும்

சிக்கிச்  சுழல்வதில்லை!

 

நீண்ட நாள்

புறக்கணிப்பும்

நெடுநாள்

உதாசீனங்களும்

மன்னிக்கப்

படுவதில்லை!

வாழ்நாள் மன்னிப்பும்

நெடுநாள்

ஏற்புடைமையும்

என்றுமே

மறக்கப்

படுவதில்லை!