news-details
உலக செய்திகள்
சிறிய மலர்களாகச் செல்லும் இடமெல்லாம் மலர்ந்திடுவோம்! (வாழ்த்துச் செய்தி)

குழந்தை இயேசுவின் தெரேசாவிற்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், அவர் பின்பற்றிய தனிச் சிறப்புமிக்க வாழ்க்கைமுறை மற்றும்  போதனைகள் நமக்குப் பல கோட்பாடுகளை நினைவுபடுத்துகிறது. லிசியாஸின் புனித தெரேசா தனது ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் ஆன்மிகம் சார்ந்த எளிமையான, அதேநேரத்தில் எல்லாரும் பின்பற்றக்கூடிய சக்திவாய்ந்த விசுவாச வாழ்க்கை வாழ்வதற்கான அணுகுமுறை மூலம் உலகில் ஓர் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அவரது சிறிய வழிமுறைகள்கூட உலகத்தில் உள்ள எண்ணற்ற மக்கள் தொடர்ந்து பின்பற்றுவதற்கு உதவியாக இருந்திருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதன் தன் வாழ்க்கைப் பயணத்தில் பலதரப்பட்ட இடர்களில் சிக்கி மீளமுடியாமல் தவிக்கின்றான். மனிதன் பெரிய சாதனைகளைச் சாதிக்க வேண்டும் என்பதற்காகச் சிறுசிறு அர்த்தமுள்ள மகிழ்ச்சி தரக்கூடியச் செயல்களில் கவனம் செலுத்துவதையும் தவிர்க்கின்றான். நாம் செய்யும் சிறு சிறு அன்பான நற்செயல்கள் மூலம், நாம் பேசும் அன்பான வார்த்தைகள் மூலம், நாம் கேட்கும் நற்காரியங்கள் மூலம், நாம் வாழும் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் மாற்றும் சக்தியாக இவை விளங்கும் என்பதை நமக்குச் சிறுமலர் நினைவூட்டுகின்றார்.

நவீன வாழ்க்கையின் சிக்கல்களை நாம் கடந்து செல்லும்போது புனித தெரேசாவின் சிறிய சிறிய வாழ்க்கை முறைகள் நமக்கு மன அமைதியையும் இரக்கத்தையும் மற்றும் நம்பிக்கையின் பாதையையும் காட்டுகிறது. ஒவ்வொரு சிறு இரக்கக்குணமும், ஒவ்வொரு சிறிய அன்பான வெளிப்பாடும், ஒவ்வொரு முறையும் மற்றவரை மன்னிக்கும் குணமும் இறைவனுக்குத் தரப்படுகின்ற மகிமையாக வெளிப்படுகிறது. இது இறைவன் நம்மில் வாழ்கின்றார் என்ற தெய்வீக உணர்வை வெளிப்படுத்துகிறது. திருத்தந்தை பிரான்சிஸ், “நாம் செய்யும் சிறிய சிறிய செயல்களும் அன்பின் மகத்துவமாக மாறும்என்று கூறுகிறார்.

புனிதராகப் பட்டம் பெற்ற குழந்தை இயேசுவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் இவ்வேளையில், மறுபடியும் அவரது அடிச்சுவட்டில் நடக்க நம்மையே நாம் அர்ப்பணித்துக்கொள்வோம். கடவுளை மகிமைப்படுத்தும் வகையில் அவருடைய சிறிய வழிமுறைகளை நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க நம்மையே நாம் இணைத்துக்கொள்வோம். இவ்வாறு செய்வதன்மூலம் நம் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் நிறைவையும் காண்பது மட்டுமல்லாமல், உலகில் கடவுளின் அன்பையும் அமைதியையும் வெளிப்படுத்தும் கருவியாக மாறுகிறோம். குழந்தை இயேசுவின் சிறுமலர் தெரேசாவின் மரபு நம்மையும் நம் வாழ்க்கை முறைகளையும், கடவுளின் மகிமைக்காகவும் அன்புக்காகவும் வாழத் தொடர்ந்து நம்மைத் தூண்டட்டும். அவர் பின்பற்றிய அன்பு, எளிமை மற்றும் நம்பிக்கை எனும் பண்புகளைப் பரப்பத் தொடர்பாளர்களாக நம்மையே நாம் மாற்றி, அவரின் சிறிய மலர்களாக நாம் செல்லும் இடமெல்லாம் மலர்ந்திடுவோம்!

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் புனிதர் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் இத்தருணத்தில் இவ்வழகானநினைவு மலர்உருவாக அர்ப்பணிப்போடு அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். உங்களின் சிறந்த படைப்பாற்றல், அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி அனைத்தும் இவற்றைப் படிக்கின்றவர்களுக்கு ஒரு பொக்கிஷமாகவும், பக்தியை வெளிப்படுத்தும் உந்துசக்தியாகவும் அமையும்இறுதியாக, இந்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு உங்களின் மேலான ஒத்துழைப்பிற்கு எங்களின் இதயம் நிறைந்த நன்றி. இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக!