news-details
சிறப்புக்கட்டுரை
செபமாலையின் முக்கியத்துவம்!

தூய ஆவியால் நிரப்பப்பெற்று மரியன்னையின் அனுமதி பெற்ற சாமிநாதர், அது முதல் செபமாலையின் மேன்மை பற்றி மக்கள் மனங்களில் தனது போதனையின் மூலம் ஆழமாக வலியுறுத்தி வந்தார். தினமும் செபமாலை செபித்தார். செபமாலைதான் அவரது போதனையின் முன் ஆயத்தமாகவும், முடிந்தபின் அன்னையுடன் உரையாடுவதாகவும் இருந்தது.

ஒருநாள் அவர் பாரீஸ் பட்டணத்தில் உள்ள மாதாவின் பேராலயத்தில் போதிக்க வேண்டியிருந்தது. அன்று நற்செய்தியாளரான புனித யோவானின் திருநாள். சாமிநாதர் அவ்வாலயத்தில் பெரிய பீடத்தின் பின்னால் உள்ள சிற்றாலயத்தில் உருக்கமுடன் செபமாலை செபித்து ஆயத்தம் செய்துகொண்டு இருந்தார்.

அப்போது அன்னை அவருக்குத் தோன்றி, “மகனே சாமிநாதா! நீ சொல்ல நினைத்திருக்கும் செய்தி நல்லதுதான். ஆயினும், அதைவிட சிறந்த செய்தி ஒன்றை உனக்கு நான் தருகிறேன்என்றார். அப்போது அன்னை கொண்டு வந்திருந்த புத்தகத்தை, சாமிநாதர் கரத்தில் வழங்கினார். சாமிநாதர் அதைக் கவனமுடன் வாசித்தார்; பின் அதைத் தியானித்தார்; அன்னைக்கு நன்றி கூறினார். ஆலயத்தில் வேத சரித்திர வல்லுநர்களும், மேல்நிலைச் சிந்தனையாளர்களும் கூடியிருந்தனர். சாமிநாதர் பிரசங்க மேடையில் ஏறி, “யோவான் விண்ணக அரசியான மரியன்னையின் காப்பாளராக இருக்கும் தகுதி பெற்றார்என்று மட்டுமே கூறினார். மேலும்,  “ஞானமும் அறிவும் மிகுந்த அறிவுரைகளை நான் இப்போது போதிக்க வரவில்லை. தூய ஆவியின் சக்தி கொண்டு அவரது எளிமையில் பேசப்போகிறேன்என்று கூறினார்.

உயர்குல மக்களே, அறிவில் சிறந்தவர்களே, அறிவுமிக்க சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்டு நீங்கள் பழக்கப்பட்டு இருக்கிறீர்கள். மனித அறிவின்படி மொழிகளில் பேசி வந்த நான், இன்று அப்படிப் பேச விரும்பவில்லை. மாறாக, கடவுளின் தூய ஆவியையும், அவரது பெருமைகளையும் எளிமையான முறையில் பேசவே விரும்புகிறேன்என்று கூறினார். சாமிநாதர் சம்மனசு கூறிய மங்கள வார்த்தை செபத்தை உதாரணங்களுடன் அன்றாட வாழ்வில் காணப்படும் நிகழ்வுகளைக் கொண்டு விளக்கினார்.

பாவிகளையும் மூடநம்பிக்கை கொண்டோரையும் மனம் திருப்பவும், பாவத்தை அழிக்கவும் ஏதுவாக செபமாலையின் மேன்மையை எடுத்துச் சொல்- இப்படி அன்னையும் நமது இறைவனும் சாமிநாதருக்குப் பலமுறை தோன்றிக் கூறியதாக முத் ஆலன் குறிப்பிடுகின்றார்.

சாமிநாதர் தேவ அன்னையின் காட்சியைப் பெற்ற பின் இயேசுவும் அவருக்குக் காட்சியளித்தார். அப்போது இயேசு, சாமிநாதரிடம், “சாமிநாதா, நீ மனிதரின் புகழ்ச்சியைத் தேடாமலும், உன் பலத்தில் செருக்குறாமலும், ஆன்மாக்களின் மீட்புக்காக மிகுந்த தாழ்ச்சியுடன் உழைப்பது குறித்து நான் மகிழ்கிறேன். ஆனால், பல குருக்கள் மனிதர்களின் கனமான பாவங்களை எடுத்து உடனேயே இடித்துப் பேசுகின்றனர். கசப்பு மருந்தை நோயாளிக்குக் கொடுக்கும் முன், அவனுக்கு அதனை ஏற்றுக் கொள்வதற்குரிய மனநிலையை உருவாக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. குறிப்பாக, செபமாலை செபத்தின்மீது மக்களுக்கு விருப்பத்தைக் குருக்கள் ஏற்படுத்த முயல வேண்டும். செபமாலை செபிக்கத் தொடங்கி, தொடர்ந்து செபித்து வருவார்களானால், இரக்கமுள்ள இறைவனாகிய நான் அவர்கள் கேட்கும் வரத்தை மறுக்க மாட்டேன். ஆகவே, நீ செபமாலையின் மேன்மையை எடுத்துரைக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்என்று கூறினார்.

ஒருமுறை அன்னை சாமிநாதரிடம், “என் அன்பு மகனே, உன் போதனைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று ஆதங்கப்படாதே. நீ மழை பெய்யாத நிலத்தில் விவசாயம் செய்ய முயல்கிறாய். எல்லாம் வல்ல இறைவன் இப்பூமியைப் புதுப்பிக்க திட்டமிட்டபோது முதலில் மோட்சத்திலிருந்து மழையை அனுப்பினார். வானதூதரின் மங்கள வார்த்தைதான் அந்த மழை. அதைக்கொண்டே இறைவன் உலகைப் புதுப்பித்தார். ஆகவே, நீ போதிக்கும்போது, மக்கள் செபமாலை செபம் செபிக்கும்படி தூண்டு. அப்படி நீ செய்தால், உன் வார்த்தைகள் ஆன்மாக்களுக்கு அதிகப்பலனைப் பெற்றுத் தரும்என்று கூறினார்.

அன்னையின் வேண்டுகோளை ஏற்று, உடனே அவர் அதனைச் செயலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். மேற்கண்ட நிகழ்வுகள்செபமாலை புதுமைகள்என்ற இத்தாலிய நூலில் காணப்படுகின்றன. புனித சாமிநாதரின் வழிகாட்டுதலின்படி குருக்கள் செபமாலையின் மேன்மையை எடுத்துரைத்து வந்த காலகட்டத்தில், இறைமக்களின் உள்ளங்களில் பக்தியும் ஆன்மிக எழுச்சியும் செழித்து வளர்ந்தது. இதைக் கைவிட ஆரம்பித்த பின்னர்தான், பாவம் உலகைச் சூழ்ந்து நின்று நெருக்கியது.