news-details
தலையங்கம்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: கனவை நோக்கிக் காய் நகர்த்தும் பா.ச.க.

நாடாளுமன்றம்-சட்டமன்றம் என்ற அடித்தளத்தின்மீது கட்டப்பட்டதுதான் மக்களாட்சி எனும் மாளிகை. அம்மாளிகையின் உயர் காவலர்களாக இருப்பவர்களே குடியரசுத் தலைவரும் துணைத் தலைவரும்!

இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. 14-வது குடியரசுத் துணைத் தலைவராக இருந்த திரு. ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் வரும் 2027 ஆகஸ்டு வரை உள்ள நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரெனப் பதவி விலகினார்.

அடிப்படையில் திரு. ஜெகதீப் தன்கரின் பதவி விலகலே ஆயிரம் கேள்விகளை மக்கள் மன்றங்களில் எழும்பியிருப்பது ஒருபுறம்; மறுபுறம், இந்தியச் சனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் பெரும் தாக்குதலுக்குள்ளாகி வரும் இக்கட்டான இச்சூழலில், நாட்டின் இந்த உயர் பதவிக்குச் சனநாயக மாண்புடைய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டிவந்த சூழலில், அவையையும் எதிர்க்கட்சிகளையும் ஒருசேர அணைத்துச் செல்லக்கூடிய ஓர் ஆளுமையைப் பா... தேடிக் கொண்டிருந்தது. அந்தக் கோணத்திலும் தமிழ்நாட்டின் எதிர்வரும் தேர்தலைக் கணக்கில் கொண்டும் தமிழர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பது நல்லது என ஆர்.எஸ்.எஸ்., பா... மேல்மட்டக் குழு கலந்து ஆலோசித்ததன் பேரில் தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. சி.பி. இராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பா... அறிவித்தது.

எதிர்வரும் தமிழ்நாடு அரசியலை மையப்படுத்தி பா... வின் திட்டங்களுக்கு இவர் கைகொடுப்பார் என்ற எண்ணத்திலும், அப்துல் கலாமுக்குப் பிறகு தமிழர் ஒருவருக்கு உயரிய பொறுப்பை பா... வழங்கியிருக்கிறது என்று இனி தமிழ்நாட்டில் முழக்கம் செய்யலாம் என்பதாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை துணைக் குடியரசுத் தலைவராக்க பா... திட்டம் தீட்டியிருக்கிறது.

இந்தக் களச்சூழலை நன்கு முன்னுணர்ந்தஇந்தியாகூட்டணி, தமிழ்நாட்டிலிருந்தோ அல்லது தென்னிந்தியப் பகுதிகளிலிருந்தோ சரியான  போட்டியாளரை முன்னிறுத்த வேண்டுமெனத் தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. பி. சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது. இவர் நாட்டின் புகழ்பெற்ற முற்போக்கான நீதிபதிகளில் ஒருவர்; ஆந்திர உயர் நீதிமன்றம் குவாஹாட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி என நீண்டகாலச் சட்ட அனுபவம் கொண்டவர். சமூகப் பொருளாதார அரசியல் ரீதியில், நீதியின் நிலையான மற்றும் துணிச்சல்மிக்க பாதுகாவலராகச் செயல்பட்டவர்; ஏழைகளின் ஆதரவாளர். தனது பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக ஏழைகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்தவர். அரசமைப்புச் சட்ட நீதிமன்றங்களில் 16 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்துள்ளவர்.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 உறுப்பினர்கள் உள்ளனர்; ஓர் இடம் காலியாக உள்ளது. அதேபோல மாநிலங்களவையில் 239 உறுப்பினர்கள் உள்ளனர்; அங்கு ஆறு இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பா... தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மையும் உள்ளது. ஆகவே, இந்தக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது ஒருபுறம் உறுதியாகியுள்ளது. ஆயினும், சனநாயகப் பேரவைகளின் செயல்பாடுகளை வைத்துதான் குடியாட்சியின் பெருமையும் சிறுமையும் அமைகின்றன என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அனைத்தும் பா...வின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு அரசமைப்புச் சட்டமே இன்று பேராபத்தில் சிக்கியுள்ளது. இத்தகைய சூழலில்இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சிகள், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்; அவருக்குத் தி.மு.. அரசு முழு ஆதரவையும் அளிக்கிறதுஎன சுதர்சன் ரெட்டியை ஆதரித்துச் செய்தி  வெளியிட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின்.

சுதந்திரமாக அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரைத்தான் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அவருக்குத் தமிழர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனுமில்லைஎன்கிறார் தொல். திருமாவளவன். சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த உடனேயே தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளரான சி.பி. இராதாகிருஷ்ணனை ஆதரிக்கப்போவதாக ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவ்வாறே, அம்மாநில எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் பா... வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தேசிய சனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் தேர்வில் ஆர்.எஸ்.எஸ்., பா..., மோடி, அமித்ஷாவின் திரைமறைவுத் திட்டங்கள் நன்றாகவே புலப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலிருந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் வாயிலாக, அந்த இயக்கத்தைத் திருப்திபடுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால், அவரைக்காட்டி தமிழ்நாட்டில் வாக்கு வங்கியைப் பெருக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்; ஆட்சி மாற்றதிற்கு வழி தேடியிருக்கிறார்கள். பாவம் அவர்! தமிழ்நாடு மீன்களைப் பிடிக்க  பா... போட்ட தூண்டிலில் மாட்டப்பட்டுள்ள புழு என்பதை அறிந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை!

பா... பல வேளைகளில் தன் தலைவர்களைத் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டு பின் பாராமுகமாய்ப்போன கதைகள் ஏராளம். அத்வானி தொடங்கி அண்மையில் மறைந்த நாகலாந்து மாநிலத்தின் மேனாள் ஆளுநர் இல. கணேசன் வரைக்கும் அது தான். அவ்வாறே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின் தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனின் எதிர்காலத்தைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இந்தச் சூழலில், தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களில் இடம்பிடிப்பதற்காக தமிழ்நாட்டைப் பெருமைப்படும் வகையில் பேசிச் சென்றிருக்கிறார். புண்ணிய பூமியான தமிழ் மண்ணில் தமிழ்மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிப்பதாகவும், இந்தத்  தமிழ் மண் வரலாறு, வீரம், பண்பாடு, கலாச்சாரம் நிறைந்தது என்றும், இந்த மண்ணை தான் வணங்குவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அண்மைக் காலங்களில் இவர்கள்தாம் தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதார மேம்பாட்டிலும், மொழிக்கொள்கையிலும், சிறுபான்மையினர் நலனிலும், கீழடி ஆய்விலும் பெரும் தடைகளைப்  போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.

தமிழரான ஐயா அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவராக உயர்த்தியதும் தேசிய சனநாயகக் கூட்டணிதான்; தற்போது அது மீண்டும் இந்த மண்ணைப் பெருமைப்படும் வகையில் சி.பி. இராதாகிருஷ்ணனைக் குடியரசுத் துணைத் தலைவருக்குப் பரிந்துரை செய்ததன் வழியாக, தமிழ் மண்ணின் பெருமையையும் தமிழ்மக்களின் உணர்வுகளையும் உணர்வுப்பூர்வமாக பா... மதிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த தேர்தலில் பா... 18% வாக்குகளையும், .தி.மு. 21% வாக்குகளையும் பெற்றுள்ளன; அவை இரண்டும் சேர்ந்தால் தி.மு..வை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற மாபெரும் திட்டத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். “தேசிய சனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல; மாறாக, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடையச் செய்யக்கூடிய கூட்டணிஎன்று வர்ணித்திருக்கிறார்.

ஆனால், இறுதியில் அவருடைய பேருரையோ, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு..வை வேரோடு பிடுங்கி எறிய, ஆட்சி மாற்றத்தை உருவாக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெற்றிக்கான மாற்றத்தை உருவாக்கவேண்டும்எனப் பா... தொண்டர்களை, வாக்குச் சாவடி நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் மன்றத்தில், அவர்களுடைய மனத்தில் மாற்றத்தை அல்ல; மாறாக, வாக்குச்சாவடியில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மைக்காலங்களில் இவர்களின் இத்தகைய செயல்பாடுகளைத்தான் இராகுல் காந்தி தெளிவாகவே வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். ‘மாற்றம்மக்கள் மனத்தில் வரவேண்டுமே தவிர, மக்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் அல்ல! முறைகேடுகள் நடக்காத தேர்தலை இனி நாம் காணக்கூடும் என்ற நம்பிக்கை காலப்போக்கில் பொய்த்துப்போய்விட்டது. அதிகார பலம், பண பலம், அடியாள் பலம் இவை மூன்றும்தான் தேர்தல் வெற்றியைத் தேடித்தரும் என்றால், உண்மையான சனநாயகம் எப்படி உயிர்வாழும்?

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்