ஒரு குறிப்பிட்ட சம்பவமோ அல்லது ஒரு குறிப்பிட்ட அனுபவமோ, தனிமனிதரோ என்னுடைய வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை, ‘இன்றியமையாத’ ஒன்றை ஏற்படுத்தினார்கள் என்றால், அது நான் எப்போதும் நன்றியுடன் நினைத்து, மனதார வணங்கி பலரோடும் பகிர்ந்து வாழும் மூன்று பெண்கள்தாம்.
பெற்றோர்,
பள்ளிப்பருவம் முதல் பயிற்றுவித்த ஆசிரியர்கள், உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பரிவுகாட்டிய நண்பர்கள், உறவினர் என்று பலருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
Existential
philosophy-யில் Exclamatory Awareness and Existence என்று ஓர்
அற்புதமான படிப்பினை உண்டு. ‘இந்தத் தருணத்தில் நான் இப்படி இருக்கிறேன்’ என்பதை
முழுமையான பரவசத்துடன் உணர்கின்ற உள்ளக் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும், தன்னிலை உணரும் நிலையும் ஒருங்கே சேரும் அனுபவம் அது. அத்தகைய ஒரு மன எழுச்சியை நினைக்கும்
தோறும் எனக்குத் தந்து என்னை நன்றியுடன் கரம் கூப்பச் செய்கின்றவர்களே நான் விவரிக்கப்போகும் மூன்று பெண்கள்.
டீன் மகதலேன்
வில்லியபா
கும்பகோணத்தில்
கல்லூரிப் படிப்பைத் தொடங்கிருந்த நிலையில், அதை இடை முறித்து மேற்கொண்டு படிக்க 1978-இல் என் தந்தையாரும், வேரித்தாஸ் வானொலியின் தமிழ்ப்பணி தலைவருமான மறைந்த திரு. எம்.ஏ.சாமி என்னை
பிலிப்பைன்சின் மணிலாவுக்கு அழைத்துச் சென்றார். முதலில் சேசு சபையாரின் அத்தனயே டி மணிலா பல்கலைக்கழகத்தில்
மூன்று ஆண்டுகள் படித்து பட்டம் வாங்க ஆயத்தமான நிலையில், எனது இந்தியப் படிப்பையும், சில பாடங்களையும் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு, எதிர்காலம் கேள்விக்குறியானது. என் தந்தையார் தனது சக மாணவராக இருந்த
டாக்டர் மகதலேனா வில்லியபாவிடம் இதுபற்றிக் கவலையுடன் பேசியபோது “என்னிடம் அழைத்து வாருங்கள், நான் டீன் ஆகப் பணியாற்றும் இராயல் போன்டிப்பிக்கல் யூனிவர்சிட்டி ஆகிய சாந்தோ தோமாஸ் பல்கலைக்கழகத்தில் மேலும் சில பாடங்களைப் படிக்கச் செய்து பட்டம் வாங்குகிறேன்” என்று
வாக்குறுதி அளித்தார் அவர்.
அங்கேயும்
அதே சிக்கல். இந்திய மாணவனை இடைநிலையில் சேர்த்து, முன்னர் படித்த படிப்பை அங்கீகரிக்க முடியாது என்று சிலர் மறுப்பு தெரிவித்தபோது, “நான் கொடுத்த வாக்கு கொடுத்ததுதான். என்னை நம்பி வந்து விட்டார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமை டீன் நான். நான் அளித்த வாக்குறுதி இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையாகும்” என்று
என்னை ஏற்று, பட்டமளித்து வாழவைத்த பெருந்தகை என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் டீன் மகதலேன் வில்லியபா. அந்த நன்றியின் வெளிப்பாடாக என் மூத்த மகளுக்கு அவர் பெயரையே வைத்திருக்கிறேன்.
திருமதி. அனுராதா
டிடிவி
தினகரன்
அது
போராட்டமான வாழ்க்கைக்குள் நான் நுழைந்திருந்த காலம். ஊடகத்துறையில் பெரிய அனுபவம் ஏதுமின்றி, முக்கிய முடிவுகளை எடுப்பதில் அனுபவம் பெற்றவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி, நான் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருந்த
நேரம். ஒரு வேலையில் உட்கார்ந்திருந்தோமா? மாதம் முடிந்தால் சம்பளம் வாங்கினோமா? என்று வாழ்க்கைக்குள் பழக்கப்பட்டிருந்த பின்னணியிலிருந்து, சென்னைக்குக் குடியேறி வாழத் தொடங்கியிருந்த எனக்கு ‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’
நிலை அப்போது. எந்தப் பின்னணியும் இன்றி வந்து உழைப்பாலும், தந்தையிடம் பெற்ற பயிற்சியாலும் ஊர் உலகம் தெரிந்தவனாக மாறி இருந்த எனக்கு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களும், சமூகம் செயல்படும் விதங்களும் தெரிந்திராத நேரம் அது. காரணமே இல்லாமல் நமக்கு எதிராகப் பேசியவர்களும், நம்முடைய இருப்பையும் வளர்ச்சியையும் பிடிக்காத பலரும் வாழ்க்கையில் வந்து போவார்கள்; நம்முடைய ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பொருள் சொல்லி நம்மைத் தூக்கி எறிவதில் மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகையோர் எல்லார் வாழ்விலும் உண்டு. என் வாழ்விலும் இருந்தனர்.
தாய்லாந்து
நாட்டில் தமிழ் ஈழ அமைதிப் பேச்சு
வார்த்தையில் என்னைத் தொடர்புபடுத்தி என்னை வீழ்த்த முயன்ற சிலரை எதிர்த்து நின்று பெரும் சிக்கலிலிருந்து என்னைப் பாதுகாத்தவர் திருமதி. அனுராதா டிடிவி தினகரன். அவரோடு 13 ஆண்டுகள் ஜெயா டி.வி.யில்
பணியாற்றி, நான் பெற்ற அனுபவங்கள் மிக நேர்த்தியானவை.
நான்
திடீரென மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அதிர்ச்சியான சூழலில் மருத்துவமனைக்கு வந்து என் மனைவியிடம், “நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதீர்கள்” என்று
தைரியமூட்டிய பேருள்ளம் கொண்டவர். என்னைவிட பலமடங்கு இளையவராய் இருந்தபோதும், ஒரு நல்லாசிரியராக எனக்கு இருந்த பெண்மணி அவர். கண்ணுக்குக் குலமேது? கருணைக்கு இனமேது?
அம்மா செல்வி
ஜெயலலிதா
முதன்முதலாக
1997-இல் சந்தித்தபோதிலிருந்து கடைசியாகச் சந்தித்த 2016-வரை ஒரே மாதிரியான மரியாதையையும் உபசரிப்பையும் கௌரவத்தையும் எனக்கு அளித்தவர் அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள். அவருடனான எனது அனுபவங்களை ஏராளமாகக் கூறலாம். என்னை ஏன் எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக்கினார்? என்பதை மட்டும் இப்பொழுது கூறுகிறேன்.
2010-ஆம் ஆண்டு
ஜூன் மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல்களுக்கான அ.இ. அ.தி.மு.க.
கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாள். அன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு செல்வி ஜெயலலிதா அம்மா அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
“வாங்க... திரு. பெர்னார்ட்” என்று
வழக்கம் போல இன்முகத்துடன் என்னை அழைத்தார் அம்மா.
“உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நான் எத்தனையோ முறை முயற்சி செய்தேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஓர் அரசியல், சமூக நிர்ப்பந்தம் ஏற்பட்டு எனது முயற்சி தோல்வியுறும். இன்றைக்கும்கூட நமது கட்சியின் இரண்டு வேட்பாளர்களை நான் அறிவிக்கப் போகின்றேன். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் இந்த இருவரில் ஒருவரை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்த இடத்திற்கு உங்களை அனுப்புவேன். நான் இதை ஏன் இப்போது உங்களிடம் சொல்கிறேன் என்றால், இது எனக்கு நானே செய்து கொடுக்கும் சத்தியப் பிரமாணம். அப்போதுதான் எந்த நிர்ப்பந்தம் வந்தாலும் நான் வாக்குக் கொடுத்துவிட்டேன்; மீற முடியாது என்று என்னால் சொல்ல முடியும்”
என்று மடமடவென ஆங்கிலத்தில் கூறினார்.
அதேபோல
ஆட்சிக்கு வந்த உடனேயே என்னை நாடாளுமன்றத்திற்கு அறிவித்துவிட்டு என்னை முதலமைச்சரின் அறைக்குள் அழைத்துச் சென்று, “என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன், கடவுளுக்கு நன்றி” என்று உள்ளம் நெகிழ்ந்து கூறினார் அம்மா.
நான்
என்ன மதம், என்ன சாதி, என்ன உட்பிரிவு? என்று எந்தக் கேள்வியும் கிடைக்காது, “உனக்கு உதவ நான் நினைத்தேன், அந்தச் சிந்தனையை கடவுள் என் மனத்தில் வைத்தார், வாக்குக் கொடுத்தேன், கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன், கடவுளுக்கு நன்றி” என்று என் வாழ்க்கையின் திசையை மாற்றியவர்கள் இவர்கள்.
இந்த
மூன்று பெண்களுக்கும் நானும் எனது குடும்பமும் தலைமுறைத் தலைமுறையாக நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.
செயற்கரிய செய்வர்
பெரியர்!