news-details
சிறப்புக்கட்டுரை
புது விடியலின் பூபாளம்: புனிதை தெரேசாவும் நற்செய்தி அறிவிப்புப் பணியும்

அனுபவமும் அனுப்புதலும்!

திருவிவிலியத்திலும் இறைவெளிப்பாட்டிலும் மீட்பின் திட்டத்தின் அச்சாணியாகவும் அடிநாதமாகவும் விளங்குவது இறை-மனித அன்பு. இவ்வன்பின் இரு பரிமாணங்கள்: அனுபவமும் அனுப்பப்படுதலும். மோசேவுக்கு யாவே இறைவன் பற்றி எரியும் முட்புதரில் வழங்கிய காட்சியில் இவ்விரு அம்சங்களும் வெள்ளிடை மலையாகக் காணப்படுகின்றன. அனைத்து நற்செய்திப் பணியாளர் வாழ்விலும் அனுபவமும் அனுப்பப்படுதலுமே இறைஞானமாக மிளிர்கின்றது.

புனித தெரேசாவின் வாழ்வில் அனுபவமும் அனுப்பப்படுதலும்

பிரான்சு நாட்டில்  லிசியு நகர் கார்மேல் மடத்தில் அடைபட்ட அனுபவ வாழ்விலிருந்து எவ்வாறு இத்தகையதொரு செயல்பாட்டு வாழ்வு தெரேசாவுக்கு மலர்ந்தது என்பது இன்றைய பின்நவீனத்துவச் சமூகத்திற்கு ஒரு கேள்விக்குறியாக அமையலாம். ஆனால், ‘சிறு மலர்என்று அழைக்கப்படும் புனித குழந்தை தெரேசா, இயேசுவை அளவுகடந்த விதத்தில் அன்பு செய்து, உலகின் அனைத்து மக்களுக்காகவும் தன்னையே கையளித்து வாழ்ந் தார். இந்தத் தூய அன்பானது அனைவரையும் சமமாகப் பார்க்ககூடிய ஒரு பரந்த, பாகுபாடற்றப் பார்வையைக் கொடுத்தது. இயேசுவை அன்பு செய்யவும், அவரது அன்பை அகிலமெங்கும் பரப்புவதையுமே தனது கார்மேல் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டார்.

வரைமுறைகளைக் கடந்த புதுப்பார்வை

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் வாழ்ந்த பூர்வீகக்குடிகளை அழித்து, அவர்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் ஐரோப்பியர்கள் கைப்பற்றித் தங்கள் காலனி நாடுகளாக மாற்றினர். இத்தகைய பின்புலத்தில் தெரேசா இந்த ஏழை பூர்வீகக்குடிகளை, “கடவுளைக் கவரக்கூடிய காட்டு மலர்கள் இவர்கள்; இவர்களுடைய உள்ளங்களில்தான் கடவுள் இறங்கி வருகிறார்என நேர்மறையாகப் பார்க்கிறார். அன்றைய ஐரோப்பிய வரைமுறையைக் கடந்த புதுப் பார்வையாக அவரது அணுகுமுறை அமைகின்றது.

தெரேசா தன்னையும் ஒரு காட்டுச் சிறுமலர் என அழைத்து, ‘நானும் அந்தப் பூர்வீகக்குடிகளும் ஒன்றேஎனச் சமத்துவம் பேசுகின்றார். பிற சமய கலாச்சார மரபுகளை மதித்து உரையாடுவதே நற்செய்திப் பணி என்ற இரண்டாம் வத்திக்கான் சங்க புதுப்பார்வையன்றோ அவரில் வெளிப்பட்டுள்ளது!

தெரேசாவின் வாழ்வில் நற்செய்திப்பணி ஆர்வங்கள்

1. பிரான்சினியின் மனமாற்றம்

ஆன்மாக்களை இயேசுவிற்காக அறுவடை செய்யும் மீனவராக தெரேசா தன்னைக்  கருதுகின் றார். அவரது இந்த முயற்சியில்இயேசுவே வலைகளை வீசி மீன்களைப் பிடிக்கின்றார்எனக் கூறுவது, இயேசுவோடு எந்த அளவிற்கு ஒன்றித்திருக்கிறார் எனக் காட்டுகிறது. இந்த ஒன்றிப்பானது அவரது உள்ளத்தில் பிறரன்புத் தீயை மூட்டியது.

சிலுவையில் இயேசுதாகமாயிருக்கிறதுஎன்று கூறியதுஆன்மாக்களுக்காகஎன்றே பொருள்படுகிறது. எனவே, பாவத்தாலும் தீமைகளாலும் இயேசுவை விட்டு விலகியிருக்கும் அனைவரையும் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கத் துடித்தார் தெரேசா.

இத்தகைய பின்புலத்தில் பிரான்சினி என்ற குற்றவாளி ஒருவர் மரண தண்டனைத் தீர்ப்புப் பெற்றார் என்றும், பல அருள்பணியாளர்கள் முயன்றும் மனம் மாற மறுக்கிறார் என்றும் தெரேசா கேள்விப்பட்டார். பிரான்சினியின் மனமாற்றத்திற்காக இடைவிடாது உருக்கமுடனும் உரிமையுடனும் இயேசுவிடம் இறைவேண்டல் செய்தார். ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் கடைசி நிமிடத்தில் அந்தக் குற்றவாளி மனமாற்றம் பெற்றவராய் அருள்பணியாளரிடமிருந்து சிலுவையைப் பெற்று மூன்று முறை முத்தம் செய்தார்.

இந்தச் செய்தியை வாசித்தபோது  “மனம் மாறிய பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7) என்ற இறைவாக்கின்மீது நம்பிக்கை கொண்டு பல ஆன்மாக்களை மீட்க வேண்டும் என்ற தாகம் பன்மடங்கு தனது உள்ளத்தில் பெருகியதாகக் கூறுகின்றார்.

2. அன்பின் பணியே நற்செய்திப் பணி

சிறுமலர் தெரேசா, பவுலடியாரின் 1கொரி 12:29-31;13:1 ஆகிய இறைவார்த்தைகளின் அடிப்படையில்திரு அவையில் அன்பு செய்யும் இதயமாக இருப்பேன்எனக் கூறி, அன்பே எனது அழைத்தல் என்று குறிப்பிடுகிறார்.

ஓர் அருள்பணியாளராக, போர்வீரராக, திருத்தூதராக, மறைப்போதகராக, மறைச்சாட்சியாக, இறைவாக்கினராக... உலகம் முழுவதும் பயணம் செய்து இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, சிலுவையிலிருந்து வரும் மீட்பை அனைவரும் பெறுவதற்கு என்னை அர்ப்பணிக்கின்றேன்என்ற வரிகள் அவரது நற்செய்திப் பணியின் ஆர்வத்தையும் அவசரத்தன்மையையும் சுட்டிக்காட்டுகின்றன.

இயேசுவின் மீட்பின் செய்தியை ஐந்து கண்டங்களிலும் அறிவிக்க விரும்புகிறேன்எனக் கூறும் அவர், படைப்பின் தொடக்கத்திலிருந்து, உலக முடிவுவரை நான் நற்செய்திப் பணியாளராக விரும்புகிறேன்; அதற்காக என் இறுதிச் சொட்டு இரத்தம் வரை சிந்த ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

3. நடைமுறை வாழ்வில்

அடைபட்ட கார்மேல் வாழ்வு என்பது புனி மானது, அமைதியானது. ஆனால், அந்த அமைதியும் புனிதமும், தியாகத்திலும் தாழ்ச்சியிலும் மன்னிப்பிலும் விளைந்த கனிகள்தாம். துறவு சகோதரிகளாக இருந்தாலும், ஒரே இடத்தில் வாழ்ந்து, செயல்பட்டு, கடமைகளைச் செய்யும்போது உறவுகளில் உரசல் கள், கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் சவால்கள், ஆழ்நிலைத் தியான இறைவேண்டல் பயணத் தில் வரும் நம்பிக்கைத் தளர்வுகள், உள்மன வறட்சிகள் என்று எத்தனையோ சவால்கள் அவ்வாழ்வில் உள்ளன. இத்தகைய சவால் நிறைந்த வாழ்வைக் கார்மேல் அருள்சகோதரிகள் ஏன் வாழ்கின்றார்கள்? என்ற உலகினரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில்தான் சிறுமலர் தெரேசாவின் வாழ்வு.

புன்முறுவலோடு ஒவ்வொரு துன்பத்தையும் ஏற்று, கிறிஸ்துவின் அன்புப் பணிகளுக்காக தீமைகளிலும் அறியாமையிலும் கொடிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பவர்களின் மன மனமாற்றத்திற்காக அர்ப்பணித்து அர்த்தம் கொடுத்தார். ஒவ்வொரு சோதனையையும் சவால்களையும் புரிந்துகொள்ளாத் தன்மைகளையும் நற்செய்திப்பணிக்கான அர்ப்பணிப்பு என்ற மனநிலையோடு ஏற்றுக் கொண்டார்.

தான் நோய்வாய்ப்பட்டதை உணர்ந்து தெரேசா, ‘இந்தச் சிறுமலரின் வாழ்வு எவ்வாறு நிறைவடையும்?’ என்ற கேள்வியைக் கேட்கின்றார். ஒருவேளை இளம்வயதிலேயே இயேசுவின் பாதத்தில் உதிர்ந்து விழலாம். ‘உடல் நலத்தை இறைவன் அருளினால் தொலைதூர நாடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணித்தளங்களில் நிறுவப்பட்டுள்ள கார்மேல் மடங்களுக்குச் சென்று வாழ்வேன்என்று உறுதி கொண்டார். தொலைதூரங்களில் பணிசெய்து வாழும் நற்செய்திப் பணியாளர்களுக்காக நற்செயல்களைச் செய்து இயேசுவின் பாதத்தில் மலர்களாகக் குவித்தார்.

1யோவான் 3:18 - “நம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்என்று கூறுகின்றது. சிறுமலர் தெரேசா தன் வாழ்வை அன்பின் சக்தியாக மாற்றி, அந்த அன்பின் சக்தியால் இயேசுவோடு ஒன்றித்து, அகிலத்தையும் ஆட்கொண்டார். அன்பின் தூதுவராக எல்லைகளைத் தாண்டி வருகின்ற அவரது வாழ்வு இன்றைய உலகில்புது விடியலுக்குப் பாடப்படும் பூபாளமாகஅமைகின்றது என்பதில் சந்தேகமில்லை.