news-details
ஞாயிறு மறையுரை
செப்டம்பர் 28, 2025, ஆண்டின் பொதுக்காலம் 26 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) ஆமோ 6:1,3-7; 1திமொ 6:11-16; லூக் 16:19-31 - ‘உணர்வின்மை’ ஒரு பெருங்குற்றம்!

இரக்கம் என்பது மனிதனின் முதன்மை அடையாளம். மனித சமுதாயம் பரிவும் கரிசனையும் ஒற்றுமையும் தழைத்திருக்க வேண்டிய ஓர் உயிர்மை அமைப்பாகும். ஒருவரின் துன்ப நிலையை மற்றவர்கள் உணர்வதுதான் மனிதநேயத்தின் அடிப்படை. இதுவே, சமூகத்தின் உயிரணு. பிறரின் துன்பத்தை உணர மறுப்பது ஒருவர் மனிதனாக இருக்கவேண்டிய அடிப்படை பண்புகளை மறுப்பதாகும். ஒருவர் தனது நலனையே கருதி, பிறரின் துயரங்களை நோக்காமல், புறக்கணித்து வாழத் தொடங்கினால், அது சமூகத்தின் பேரழிவே. ‘உணர்வின்மைஎன்பது ஒருவர் பிறரின் துன்ப நிலையை, பிணிகளை, வறுமையை, பசியை, சமூக அநீதியை ஏற்க மறுக்கும் மனநிலையாகும். ஆகவேதான், உணர்வின்மை என்பது ஒரு பெருங்குற்றம்; ஒரு பெரும்பாவம்!

இன்று நாம் பொதுக்காலத்தின் 26-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அடுத்தவர்களின் தேவையைப் பற்றிய அக்கறையின்மையும், பிறரது வேதனை பற்றிய உணர்வின்மையும் ஒரு பெருங்குற்றம் என எச்சரிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆமோஸ் தன்னுடைய சமகாலத்துச் செல்வந்தர்களின் சொகுசு வாழ்க்கையையும் அவர்களது கிறக்க நிலையையும் இடித்துரைக்கிறார். குறிப்பாக, சமாரியாவின் உயர்குடி மக்களுக்கு எதிராக நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கின்றார். செல்வக் குவிப்பும் அதனால் ஏற்பட்ட நுகர்வுவெறிச் சொகுசுகளுமே வாழ்வுக்கான பாதுகாப்பு என அவர்கள் இறுமாந்திருந்தார்கள். வஞ்சிக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொண்டுவாழ்வு இனிக்கிறதேஎனச் சுகபோகத்தில் மூழ்கியிருந்தனர். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். ஆடம்பரத்திலும் கேளிக்கைகளிலும் அழகு சாதனங்களிலும் நுகர்வுவெறியிலும் மூழ்கியிருந்த இஸ்ரயேலின் மேட்டுக்குடிப் பெண்டிரை ஆமோஸ், ‘பாசான் மாடுகள் (ஆமோ 4:1) என இடித்துரைக்கிறார். ஏழைகளின் உழைப்பை மனச்சாட்சியின்றிச் சுரண்டுமாறு தங்கள் கணவருக்கு மந்திரம் ஓதிய (ஆமோ 4:1) இவர்களைகொழுப்பேறிய பசுக்களாக (திபா 22:12) சுட்டிக்காட்டுகிறார்.

ஏழைகளின் நலனின் அக்கறையின்றி இருப்பவர்களைஇன்பத்தில் திளைத்திருப்போர், “கவலையற்றிருப்போர், ‘உயர்குடி மக்கள், ‘பெருமை வாய்ந்தவர்கள் (6:1) போன்ற பெயர்களில் அழைக்கும் ஆமோஸ், விருந்து என்னும் உருவகம் வழியாக அவர்கள் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கையையும் மற்றவர்கள்மேல் அவர்கள் காட்டிய அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகின்றார் (6:4). செல்வர்கள் தங்களுடைய மேட்டிமை வாழ்வால் எவற்றையெல்லாம் செய்ய இயலாதோ அவற்றைச் செய்யும் மாயை உலகில் வாழ்ந்தனர் என்று சாடும் ஆமோஸ், தாவீதைப்போல இசைப் பாடகராகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்களின் பாடல் அலறலுக்கு ஒப்பானது என்கிறார் (6:5). இவ்வாறாக, செல்வர்கள் தங்கள் எல்லாச் செயல்கள் வழியாகச் சாதாரண மக்களிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக்கொண்டனர். நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் மனப்பக்குவத்தையோ அதற்கான வழிகளையோ அவர்கள் தங்களுக்கென உருவாக்கிக்கொள்ளவில்லை. பாவப் பளு ஏற ஏறக் கடவுளின் திசையைக் கண்டறியும் அவர்களின் பார்வைகளும் மங்கிக்கொண்டே இருந்தன.

ஆகவேதான், மற்றவர்கள்மேலும் கடவுள்மேலும் காட்டிய அக்கறையின்மை அவர்களுக்கு ஒருசேர அழிவையே உறுதியாகக் கொண்டுவரும் என ஆமோஸ் எச்சரிக்கிறார் (6:7). ஆமோஸ் உரைத்தபடியே, அவரது இறைவாக்குப் பணி முடிந்த 30-40 ஆண்டுகளில் சமாரியா என்கிற இஸ்ரயேலின் தலைநகரம் அசீரியப் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டு வடநாடு அழிக்கப்பட்டது (கி.மு. 722) என்பது நாம் அறிந்த இஸ்ரயேலரின் வரலாறு.

வான்வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் (லூக் 16:9) என்றும் கூறும் கடவுள், தங்களுடைய சொகுசு வாழ்வுக்கும் நுகர்வுவெறிக்கும் வாயில்லா ஏழைகளின் உடலையும் உயிரையும் சுரண்டுவதை எப்படிச் சகித்துக்கொள்வார்? சுயநலத்தையும் கண்டுகொள்ளாத தன்மையையும் கண்டு கடவுள் கொதித்துப்போய் விடுகிறார். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும்செல்வரும் இலாசரும்உவமையில், தனக்குக் கீழ் ஏழை இலாசர் உணவின்றி அவதிப்படுவதைப் பற்றிக் கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாமல் தன்னுணர்வு அற்ற நிலையில் செல்வர் இருப்பதைப் பெருங்குற்றமாகப் பார்க்கிறார்.

மாந்தரெல்லாம் மனநிறைவோடு வாழவேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அந்த மனநிறைவு செல்வத்தால் வந்துவிடாது என்பது இயேசுவின் போதனைத் திருப்பம். இந்த உலகம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், சிலர் கடவுளின் படைப்பைச் சூறையாடி, அதனைப் பதுக்கி, உழைப்பவரை அடிமையாக்கி, உழைப்பிற்கும் தேவைக்குமேற்ற ஊதியம் வழங்காமல் தங்கள் வாழ்வை மட்டும் வளப்படுத்திக் கொண்டமையால் உருவானதே ஏற்றத்தாழ்வு. இதன் காரணமாகவே, இலாசர் எவ்வகையிலும் கவனிப்பாரற்றுக் கேவலமாக, உடல் முழுவதும் புண்களாய் நிறைந்துஅச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார் (லூக் 16:20). “கிடந்தார்என்ற சொல்லில் இலாசரின் அவலநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும் இலாசரும் ஒன்றே!

இலாசரின் நிலைமையை, ) அவர் ஓர் ஏழை, ) அவர் உடல் முழுவதும் புண்கள், ) வீடற்றவர் ) பசியால் துடித்தவர் ) நாய்களோடு இருப்பவர் என விவரிக்கும் லூக்கா, செல்வரின் மனநிலையை இவ்வாறு விவரிக்கிறார்: ) இலாசரைப் பற்றிச் செல்வருக்குக் கவலை இல்லை. ) அவரது பசி, பட்டினி பற்றிச் செல்வர் சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ) அவர் இலாசரைக் கண்டுகொள்ளவில்லை. ) தம் செல்வத்தில் சிறு பகுதியைப் பகிர்ந்துகொள்ளவில்லை. ) ஒருவேளை உணவுகூட கொடுக்க முன்வரவில்லை. ஆகவே, இலாசரின் நிலை பற்றியஉணர்வின்மையேசெல்வரின் பெரிய குற்றமாகிறது. செல்வர் தம்மையும் தம் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள அவர் கட்டியெழுப்பிய தடுப்புச் சுவர்களே அவர் விண்ணகம் செல்லமுடியாது அவரைத் தடுத்துவிடுகின்றன (16:26). ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையே உள்ள தடைச் சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். இதுவே, இயேசு நம்முன் வைக்கும் விண்ணகத் தேர்வுக்கான சவால். ஆகவே, இறையாட்சி சமூகத்தின் உறுப்பினர் தகுதியைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்?

முதலாவதாக, இன்றைய உலகில் பெரும் பிரச்சினை பற்றாக்குறையல்ல, பகிராக்குறையே! தான் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவைக் கடவுள் தந்துள்ளார். ஆனால், மனிதருள் பலர் போதுமான வளங்களைப் பறித்து அவற்றைத் தமக்கும் தம் தலைமுறைகளுக்கும் சேர்த்து வைத்துள்ளனர். ஒருவர் எவ்வளவு செல்வத்தை வைத்திருக்கிறார் என்பதை வைத்து இந்த உலகம் கணக்கிடும், ஆனால் அவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பதை வைத்துக் கணக்கிடுபவர் கடவுள். அளவுக்கு அதிகமான செல்வம் அநீதியானது. ஏனெனில், அது அநீதியாகச் சேர்க்கப்பட்டது. செல்வம் நம் அன்றாட அனுபவத்திற்கே, அவை அன்பிற்குரியவை அல்ல. வாழ்வே உயர் செல்வம். அதை நமக்கென மட்டும் என்றில்லாமல் பிறர்க்கென வாழ்கையில் உண்மையான செல்வந்தர் நாமே. “பகிரப்படாத செல்வம் பாவமானதுஎன்ற புனித பேசிலின் பார்வை முற்றிலும் உண்மை. பகிர முன்வராதோர் இறையாட்சி சமூகத்தில் உறுப்பினராகத் தகுதியற்றவர்களே!

இரண்டாவதாக, இந்த உலக வாழ்வு மறுவாழ்வை நமக்குப் பெற்றுத்தரும். மறுவாழ்வுக்கு இந்த உலக வாழ்வே ஆதாரம். வாழ்வில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் நம்முடைய மறுவாழ்வை நிர்ணயிக்கின்றன. செய்த குற்றங்களுக்குத் தண்டனை என்பது பொதுவாக இவ்வுலக நீதியின் அளவுகோல். ஆனால், செய்யத் தவறிய நன்மைகளுக்காகத் தண்டனை பெறுதல் என்பது மறு உலக நீதியின் அளவுகோல். நம் அயலார்மீது அன்பு, பரிவு, கருணை காட்டுவது நாம் செய்யவேண்டிய நன்மைகள். இவற்றைச் செய்ய மறுக்கும்போது, நம் வாழ்வில் கடவுளின் எண்ணங்களும் ஏக்கங்களும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இதுவே தொடர்கதையானால் பாவமே நெறிமுறையாக்கப்பட்டு கடவுளை நிரந்தரமாக மறந்துபோய்விடும் நரக நிலையை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

மூன்றாவதாக, அடுத்தவர்களின் தேவைகளைப் பற்றிய கவலையின்மை, அவற்றைக் கண்டுகொள்ளாமை குறிப்பாக, பிறரின் துன்பநிலை பற்றியஉணர்வின்மைஒரு பெருங்குற்றம். கொடும் வறுமை, கடுமையான நோய், பெருந்தோல்வி, இழப்பு, வஞ்சிக்கப்பட்ட நிலை, போன்றவற்றால் நொந்து நொடிந்து முகவரியற்ற நிலையில் இருக்கும் இலாசர்கள் நம் மத்தியில் ஏராளம். “இரக்கம் என்பது புலனாகாத ஒரு சொல் அல்ல, அது ஒரு வாழ்வு முறை. இரக்கத்திற்குப் பார்க்கக்கூடிய கண்களும், கேட்கக்கூடிய காதுகளும், தீர்த்து வைக்கக் கூடிய கைகளும் உள்ளன (சிறப்பு யூபிலி மறைக்கல்வி உரை, 30.06.2016) என்ற திருத்தந்தை பிரான்சிஸின் எண்ணங்கள் எண்ணிப்பார்க்கத்தக்கதே. எனவே, பிறரின் துன்பங்கள், தேவைகளின் நிலைபற்றி உணர்வற்றும் கவலையற்றும் நாம் வாழ்ந்தோமெனில் அதுவே, இன்றைய பெரும் பாவம்! பெருங்குற்றம்!