புனித குழந்தை இயேசுவின் தெரேசா நூற்றாண்டு விழா வாழ்த்துகள்!
புனித
குழந்தை தெரேசாவைப் புனிதராக 1925-ஆம் ஆண்டு உயர்த்திய திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள், அவருடைய மறைபரப்புப் பணி ஆர்வத்தைக் குறிப்பிட்டு, அவருடைய செபம், தியாகம், துன்பம் மற்றும் வேதனை முழுவதையும் மறைபரப்பு நாடுகளுக்காக அர்ப்பணித்தார். ஆகவேதான் மறைபரப்பு நாடுகளுடைய பாதுகாவலியாக இருக்கின்றார் என்றார். புனித குழந்தை இயேசுவின் தெரேசா மறைவல்லுநர் மற்றும் மறைபரப்பு நாடுகளின் பாது காவலியாகத் திரு அவையை இன்று அலங்கரிக்கின்றார்.
சிறு
வழி ஆன்மிகத்தின் வழியாக இறைமக்களின் உள்ளங்களை ஆட்கொண்டிருக்கிறார். ஆன்மாக்களை மீட்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் மறைபரப்பை ஆற்ற வேண்டும் என்கிற பேராவல் கொண்டிருந்தார். அவர் லிசியே நகர் கார்மேல் மடத்து நான்கு சுவர்களுக்குள் மறைந்து வாழ்ந்திருந்தாலும், அவரது உள்ளமானது மறைபரப்பு நாடுகளின் மறைப்பணி யாளர்களுடைய பணி வாழ்வுக்காகச் செபிப்பதிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது.
ஆண்டவர்
இயேசு “நான் தாகமாய் இருக்கிறேன்” என்று
கூறினார். அந்தத் தாகம் தண்ணீருக்கான தாகம் அல்ல; மாறாக, ஆன்மாக்கள் மீட்கப்பட வேண்டும் என்பதற்கான தாகம் என்று உணர்ந்து செபித்தார்.
புனித
குழந்தை இயேசுவின் தெரேசாவை நவீன உலகின் மிகப்பெரிய புனிதை என்றார் திருத்தந்தை 12-ஆம் பயஸ். அவர் குழந்தை தெரேசாவைப் பற்றிக் கூறும்போது, “கடல் கடந்து சென்று ஆண்டவர் இயேசுவை அவர் போதிக்கவில்லை; மாறாக, அவருடைய மறைபரப்பு ஆர்வத்தால், இறையன்பு தீயால் பற்றியெரிந்து தன்னையே முழுவதுமாக ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக ஒப்புக்கொடுத்தாள்” என்கின்றார்.
புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் அவரைத் திரு அவையின் மறைவல்லுநராக அறிவித்தபோது, புனித குழந்தை இயேசுவின் தெரேசா அகில உலகிற்கும் புனிதத்தைப் போதிக்கின்ற பேராசிரியர் என்றார். அவள் திரு அவையின் மறைபொருளைத் திரு அவையினுடைய ஒற்றுமையையும் உள்ளுறைதலையும்
சிறப்பாக வாழ்ந்தார். அதேபோல மறைபரப்பு நாடுகளில் வாழ்கின்ற மறைபரப்புக் குருக்களுக்குச் சகோதரியாகவும், அவர்களுடைய பணிகளில் தனது செபத்தின் வழியாகத் தனது தியாகத்தின் வழியாகக் காத்தாள் என்றார்.
மறைந்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித குழந்தை இயேசுவின் தெரேசாவைப் பற்றிக் கூறு கின்றபோது திரு அவையின் மறைபோதகப் பணி என்பது நம்முடைய திட்டங்களாலும் நம்முடைய நிறுவனங்களாலும் அல்ல; மாறாக, நம்முடைய இதயங்கள் இறையன்பால் பற்றியெரிய வேண்டும். அதேபோல் நம்முடைய இதயங்கள் நற்செய்தியின் விழுமியங்களால் பற்றியெரிய வேண்டும் என்று புனித குழந்தை இயேசுவின் தெரேசா நமக்குப் பயிற்றுவிக்கின்றார் என்றார்.
புனித குழந்தை
இயேசுவின்
தெரேசாவிடம்
நாம்
கற்றுக்கொள்ள
வேண்டியவை
1. குழந்தை உள்ளம்:
‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்பது முதுமொழி. வாழ்வில் வளர்ந்தாலும், மாற்றங்கள் நிகழ்ந்தாலும் குழந்தை உள்ளத்தை இழக்காமல் இருக்கின்றவனே சிறந்த மனிதன் என்பது சீனப் பழமொழி. குழந்தை உள்ளத்தைக் கொண்டு அசைக்க முடியாத நம்பிக்கையை இறைவன்மீது கொண்டிருந்தவள் புனித குழந்தை இயேசுவின் தெரேசா.
2. சிறுவழி ஆன்மிகம்:
புனித குழந்தை இயேசுவின் தெரேசா சிறுவழி ஆன்மிகம் வழியாக இறையன்பைத் தியாகத்தில் வாழ்ந்துகாட்டுவது, சிறு சிறு செயல்பாடுகளில் இறையன்பை வெளிப்படுத்துவது, துன்பத்தின் மத்தியிலும் இறைவன்மீது நிறைவான நம்பிக்கை கொண்டிருப்பது, செபவாழ்வைக் கைவிடாமல் இருப்பது மற்றும் பிறரைக் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது சிறுவழி ஆன்மிகமாகும்.
3. மறைப்பணியார்வம்: புனித குழந்தை
இயேசுவின் தெரேசாவின் மறைப்பணியார்வம் நற்செய்திப் பணியாற்றும் குருக்களுக்காகச் செபிப்பது, நற்செய்தி அறிவிப்புப் பணியில் பேரார்வம் காட்டுவது, நாம் பெற்றுக்கொண்ட ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் அறிவிக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்தார்.
4. புனித வாழ்வு: புனித குழந்தை இயேசுவின் தெரேசாவின் குடும்பம் தந்தை புனித லூயிஸ் மார்ட்டின், தாய் புனித செலிக்கெரின் இருவரும் இறையன்பால், நம்பிக்கையால், செபவாழ்வால், இறைதிருவுளத்தை நிறைவேற்றியவர்கள். ஆகவே, புனித வாழ்வுக்கு இந்தப் புனிதர்கள் முன்மாதிரியாக இருக்கின்றார்கள். இறைவார்த்தையைத் தியானித்து வாழ்வாக்குவதற்குச் சான்றுபகர்கின்றார்கள். புனித குழந்தை இயேசுவின் தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகின்ற நாம், இக்குடும்பத்தின் முன்மாதிரிகையை நம் குடும்ப வாழ்வில் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். விண்ணகத்திலிருந்து ரோஜா மலர்களை அருள்மாரியாக புனித குழந்தை இயேசுவின் தெரேசா நம்மீது பொழிவாராக! நாம் அவரது சிறுவழி ஆன்மிகம்வழி தொடர உறுதி ஏற்போம்.
புனிதராக
வாழ வயது வரம்பில்லை! நிறைவான வாழ்வுக்குச் சிறுவயதும் தடையில்லை! இறைவார்த்தை வழிநின்று வாழ்ந்தால் போதும், நீங்களும் நல்ல மனிதராகலாம்! பார் போற்றும் புனிதராகலாம்! புனித குழந்தை இயேசுவின் தெரேசா நூற்றாண்டு விழா நல்வாழ்த்துகள்!