சிறுமலர் தெரேசா அவர்கள் புனிதராக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவடையும் இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், அவர் உலகிற்கு வெளிப்படுத்திய புனிதத்திற்கான, ஆழமான ஆனால் எளிமையான பாதையை - ‘சிறுவழியை’ நாம் நினைவுகூர்கிறோம்.
ஒரு
நூற்றாண்டு கடந்தாலும், சிறுமலர் தெரேசா அவர்களின் அன்பின் நறுமணம் உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. அன்றாட வாழ்வின் மறைமுகமான தருணங்களில்தான் புனிதம் மலர்கிறது என்பதை அவர் கற்றுக்கொடுத்தார். மென்மையான சிரிப்பில், பொறுமையான வார்த்தையில், அமைதியான செபத்தில், ஒவ்வொரு செயலின் பின்புலத்தில் உள்ள அன்பான எண்ணத்தில் புனிதம் மலர்கிறது.
அவர்
உலகத்தின் பார்வையில் மகத்தான, வெளிப்படையாகப் பெரிய வீரச் செயல்களைச் செய்யவில்லை; ஆனால், கடவுளுடனான ஆழமான உறவுக்கு ஒரு புரட்சிகரமான, எல்லாரும் அணுகக்கூடிய புதிய பாதையை வெளிப்படுத்தினார். புனிதம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே உரியது அல்ல; மாறாக, ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பு! நம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளில் நிறைவேற்றக்கூடியது என்று அவர் நமக்குக் கற்றுக்கொடுத்தார்.
இன்று
மகத்தான செயல்கள் மற்றும் சிக்கலான சவால்களால் மூழ்கியிருக்கும் இவ்வுலகில், புனித சிறுமலர் தெரேசாவின் செய்தி நம் ஒவ்வொருவருக்கும் குணமளிக்கும் மருந்தும் வழிகாட்டும் விளக்குமாகும். இந்தச் ‘சிறு வழிகள்’ மூலமே கடவுளையும் அயலாரையும் நேசிக்க வேண்டும் என்று இறைவன் நமக்குக் கொடுத்த அழைப்பை நாம் உண்மையிலேயே வாழ முடியும். நமது சாதாரண வாழ்க்கையை அசாதாரண பக்திச் செயல்களாக மாற்றமுடியும்.
புனித
தெரேசா தன்னை ஒரு சிறு குழந்தையாகக் கருதினார். எனவே, அவளால் தனியாகச் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏற முடியாது என்பதை
உணர்ந்து, அவள் இயேசுவின் கரங்களை மின்தூக்கியாக (Lift) தேர்ந்தெடுத்தாள்.
இந்த ஆழமான எளிமை, கடவுளின் அன்பு நம்மை உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன், நமது சிறுமையையும் பலவீனத்தையும் ஏற்றுக்கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது.
இந்தச்
சிறந்த புனிதரிடமிருந்து நாம் அனைவரும் நமது சிறுமையைத் தழுவிக்கொள்ளவும், கடவுளின் மாறாத அன்பில் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும், புனிதத்திற்கான பாதையில் நடக்கவும் கற்றுக்கொள்வோம்.