news-details
சிறப்புக்கட்டுரை
சனாதனத்தின் ‘சாமர்த்தியம்’

கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஓர் அநாகரிகச் செயல் இந்திய சனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு, சமூகநீதி ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சங்களை நம் மனத்தில் ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை.

70 வயதுக்கு மேற்பட்ட வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், “சனாதனத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாதுஎன்று கூச்சலிட்டுக் கொண்டே  தன் காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை ஆசனத்தில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்துகொண்டிருந்த தலைமை நீதியரசர் கவாய் அவர்களை நோக்கி எறிந்ததை ஒரு சாதாரண நீதிமன்ற அவமதிப்பு நிகழ்வாகக் கருதிக் கடந்துசெல்ல முடியாது.

நமது கலாச்சாரப்படி செருப்பைக் கழற்றி ஒருவரை அடிப்பது அல்லது ஒருவர்மேல் எறிவது என்பது ஒரு தனிமனிதருக்கு நாம் செய்யும் உச்சபட்சமான அவமானம். அந்தத் தாக்குதலின் நோக்கம் ஒருவரை உடல்ரீதியாகக் காயப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, அது ஒரு தனிமனிதரின் சுயமரியாதையைக் கொச்சைப்படுத்துவதற்காகத் தாக்கப்பட்ட நபர் தனது சுயகௌரவத்தை இழந்து சமூகத்தின் முன் அவமானப்பட்டு, வெட்கத்தால் தலைகுனிந்து நிற்கவேண்டும் என்பதே அந்தத் தாக்குதலின் நோக்கம்.

பொதுவாக, தன் தகுதியை மறந்து, மனத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கொடுமையான இழிச்செயலைச் செய்தவர்களுக்குத்தான் நமது முன்னோர்கள்செருப்படிஎன்ற இந்தத் தண்டனையைப் பயன்படுத்தினார்கள். இந்தத் தண்டனையையும் யாரும்மேல் சாதிக்காரர்களுக்குகொடுப்பதில்லை. ‘கீழ்சாதிக்காரர்களுக்குமட்டுமே பெரும்பாலும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதையும் நாம் மனத்தில் கொள்ளவேண்டும்.

நாம் இன்றுவரலாற்று நாயகர்கள்என்று கொண்டாடுகின்ற நம் தேசத்தின் தந்தை மகாத்மாவும், தந்தை பெரியாரும்கூட ஆதிக்கச் சக்திகளால் இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதையும் நாம் மறக்கவில்லை. அந்த நேரங்களில் நம் மாபெரும் தலைவர்கள் அந்தத் தரங்கெட்டவர்களின் தாக்குதலை எவ்வாறு எதிர்கொண்டனரோ, அதே வழியில் நமது தலைமை நீதிபதியும் தனது சித்தம் கலங்காமல், அவர் வகிக்கின்ற பொறுப்பின் மாட்சிமையும் கண்ணியமும் குறைந்துவிடாமல் இந்தச் சம்பவத்தைக் கடந்து சென்றார் என்பதும் நமக்கெல்லாம் பெருமை. ஆனால், நமது சமூகம் அந்தச் சம்பவத்தை அப்படிக் கடந்துபோக முடியாது.

நீதியரசர் கவாய் சுதந்திர இந்தியாவின் முக்கால் நூற்றாண்டுகால வரலாற்றில்  தலித் சமூகத்திலிருந்து வருகின்ற இரண்டாவது தலைமை நீதிபதி. அம்பேத்கர் சிந்தனை மற்றும் சமூகக் கண்ணோட் டத்தைத் தங்களது மரபணுக்களில் கொண்டிருக்கும் பாரம்பரியமான குடும்ப மரபில் வந்தவர். அவரது தந்தை இராமகிருஷ்ண சூரியபான் கவாய், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய தோழர். பல போராட்டக் களங்களில் அம்பேத்கரோடு தோளோடு தோள் இணைந்து நின்று போராடியவர். 1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில்  பௌத்த மதத்தைத் தழுவியபோது, அவரோடு சேர்ந்து பௌத்த மதத்தைத் தழுவியவர். அந்த வகையில் நீதியரசர் கவாய் பௌத்த மதத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதி எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

சனாதனத்தை இழிவுபடுத்தியதால், இறைவன் எனக்கு ஆணை தந்ததால் தலைமை நீதிபதியை நோக்கிச் செருப்பினை எறிந்தேன். இதில் வருத்தப்படுவதற்கோ, மன்னிப்புக் கேட்பதற்கோ எதுவும் இல்லைஎன்று அடாவடியாக கிஷோர் பேசுவதால், தலைமை நீதிபதியின் சமூகப் பின்னணி முக்கியத்துவம் பெறுகிறது. அவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று முதன்முறையாக அவரது சொந்த மாநிலமான மகராஷ்டிராவுக்குச் சென்றபோது, மாநில அரசின் சார்பாக இந்தியத் தலைமை நீதிபதியை வரவேற்க ஒருவரும் வரவில்லை என்பது அந்த மாநில அரசின் தலித் எதிர்ப்பு மனநிலையைக் காண்பிக்கிறது என்று அன்றைய தினம் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சிதான். புல்டோசர் ஆட்சி அல்ல; அதனை ஒருநாளும் அனுமதிக்கமாட்டேன்என்று ஆணித்தரமாகத் தீர்ப்பினைத் தந்து புல்டோசர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் நீதியரசர் கவாய். தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் வேறு எந்த அரசுப் பொறுப்பினையும் பெற்றுக்கொள்ளமாட்டேன்  என்று பகிரங்கமாக அறிவித்த மானஸ்தர். ஆர்.எஸ். எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று எவ்வளவோ வற்புறுத்தியும், அதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார் தலைமை நீதிபதியின் தாயார்.

இந்தப் பின்னணியில் சில நாள்களுக்கு முன்பு மத்தியப்பிரதேசத்தில் இருக்கின்ற புராதன ஜாவேரி இந்து ஆலயத்தில் சிதிலமடைந்து இருக்கும் விஷ்ணுவின் சிலையை மீண்டும் சரிசெய்து தர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் நீதியரசர் கவாய் கூறிய சில வார்த்தைகள் இந்துகளின் மனத்தைப் புண்படுத்திவிட்டது என்று வலதுசாரி சமூக ஊடகங்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்தன. “உச்ச நீதிமன்றத்திற்குள் சென்று தலைமை நீதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்திருக்கும்போது, அவரது தலையினை உடைக்க வேண்டும்; அந்த உணர்வு எந்த இந்து வழக்குரைஞருக்காவது உள்ளதா என்று பார்க்க வேண்டும்; அப்படி யாராவது செய்தால் அவர்களை விட வீரர்கள் யாரும் இல்லைஎன்றெல்லாம் வலதுசாரி மதவெறியர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட நூற்றுக்கணக்கானோர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது, இந்த வன்முறையாளர்களுக்கு ஒன்றிய அரசின் ஆதரவு இருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தனது வார்த்தைகளுக்குத் தவறான உள்நோக்கங்களைச் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக வும், தான் அனைத்து மதங்களையும் மதிப்பவர் எனவும் தலைமை நீதிபதி, நீதிமன்றத்திலேயே விளக்கம் கொடுத்தார்.

சம்பந்தப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி எதுவும் தவறாகப் பேசியதாகத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட ஆலயம் மிகப் பழமையான ஒன்று. தொல்பொருள்துறை கட்டுப்பாட்டிலும், ஐக்கிய நாடுகள் சபையின்யுனிசெப்மேற்பார்வையிலும் இருக்கிறது. அவர்களது அனுமதி இல்லாது எவ்விதப் பணிகளையும் அந்த ஆலயத்திற்குள் செய்ய முடியாது. “நீதிமன்றத்தால் எதுவும் செய்ய வழியில்லை. அந்தத் தெய்வத்திடம் சென்று சொல்லுங்கள். அவரால்தான் அது முடியும்என்ற வகையில் பேசி அந்த வழக்கினை தலைமை நீதிபதி முடித்துவைத்தார். இதனைத்தான் வழக்குரைஞர் கிஷோர்சனாதனத்தை நீதிபதி அவமதித்துவிட்டார்என்றும், அதற்கான பரிகாரத்தை அந்தத் தெய்வம் கூறியபடி தான் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறுகிறார்.

இறைவன் சொன்னார்; நான் செய்தேன்என்று கிஷோர் கூறும்போது, மேனாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அயோத்தி இராமர் கோவில் வழக்கில், “இறைவன் இரவில் சொன்னார்; அதனை அப்படியே தீர்ப்பாக எழுதிவிட்டேன்என்று கூறியது என் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதைப்போல நமது பிரதமரும் இந்த நாட்டை வழிநடத்துவதற்கு இறைவனே தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்  என்று கூறினார். குறிப்பிட்ட நீதிபதிகளுக்கும், குறிப்பிட்ட வழக்குரைஞர்களுக்கும், நமது பிரதமரைப் போன்றவர்களுக்கு மட்டும் நேரிடையாக வந்து கூறுகின்ற இறைவன், வறுமையிலும் ஏழ்மையிலும் உழலும் சாதாரண பொதுமக்களிடம் ஏன் பேசுவது இல்லை? என்பது எனக்கு விளங்கவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது. தங்களது செயலுக்கு எவ்விதமான நியாயத்தையும் தர முடியவில்லையென்றால், ஆண்டவன் மேல் பாரத்தைப் போடுவதுதான் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரேவழி என்பது மட்டும் தெரிகிறது. ‘அருணாச்சலம்திரைப்படத்தில் ரஜினி சொல்வாரல்லவா! “ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் செய்றான்என்று. அது திரைப்படத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். உலகின் மிகப்பெரும் சனநாயக நாட்டின் தலைமை நீதிபதியை நீதிமன்றத்திலேயே செருப்பால் தாக்க முயற்சித்துவிட்டு, ‘ஆண்டவன் சொன்னான். நான் செய்தேன்என்று கூறினால் அதனை அப்படியே விட்டுவிட முடியுமா? அப்படி விட்டுவிட்டால் நமது சனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் என்னவாகும்?

தலைமை நீதிபதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த அநாகரிகத் தாக்குதலைவிட, இந்த மாதிரியான ஓர் அநாகரிகத் தாக்குதலைச் செய்ய வேண்டும் என்ற மனநிலையும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த அசிங்கத்தைச் செய்யும் துணிவும் எப்படி வந்தது என்பதுமே முக்கியமானது.

மகாத்மாவின் படுகொலைக்குப் பின்னர் அந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றிப் பேசிய அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் அவர்கள் சொன்ன கருத்துகளை இங்கே நினைவுகூர்வது பொருத்தமானது. காந்தியடிகளின் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நேரிடையான தொடர்பு உண்டா என்பதை நிரூபிப்பதற்குத் தற்சமயம் போதுமான ஆதாரம் இல்லையென்றாலும், இதைப் போன்ற மாபாதகம் நடப்பதற்கு அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளும் பிரச்சாரங்களும், அவர்கள் முன்னெடுத்த வெறுப்பு அரசியலும் முக்கியக் காரணம் என்பதைத் தன்னால் உறுதியாகச் சொல்லமுடியும் என்று தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும்  பா..., ஆர்.எஸ்.எஸ், விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஹிந்து மகா சபா போன்ற வலதுசாரி மதவாத அமைப்புகள் விதைத்து வரும் துவேஷமும் வெறுப்பும், மதநல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் அடியோடு அழிக்கும் ஊழித் தீயாகப் பரவி வருகின்றன. சிறுபான்மையினர், பட்டியலின மக்கள், இடதுசாரிச் சிந்தனையாளர்கள், சமூக நீதியினை வலியுறுத்தும் முற்போக்காளர்கள், பெண் உரிமைப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வலதுசாரி மதவெறி அரசியலை எதிர்க்கும் அனைவரையும்தேச விரோதிகள்என்றும், ‘இந்து மத எதிர்ப்பாளர்கள்என்றும் தவறாகச் சித்தரித்து, வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள்மீது வன்முறையினை வரைமுறையின்றி ஏவிவிடுவதும், அத்தகைய வன்முறையாளர்களைப் போற்றிப் புகழ்ந்து அவர்களை அமைச்சர்களாக, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களாக அமரவைத்து அழகு பார்ப்பதும் கடந்த பத்தாண்டுகளாக நாட்டின் அரசியலாக மாறிப்போனதுதான் இன்று உச்ச நீதிமன்றத்திற்குள்ளேயும் எதிரொலித்துள்ளது.

தங்களுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்களைசனாதனத்தின் எதிரி  என்றும், ‘இந்து மதத்தின் எதிரிஎன்றும்  தங்களது ஆதரவு ஊடகங்களில் பிரகடனம் செய்து, அந்தக் கருத்தியலாளர்களை மிரட்டிச் செயல்படவிடாமல் முடக்குவதுதான் அவர்களுடைய திட்டம். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அவர்கள் இந்தச் சதிவேலையைத் தொடர்ந்து செய்துவந்தாலும், தற்போது அவர்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரமும், அவர்கள் கைகளில் இருக்கின்ற அரசு நிர்வாகமும் எதை வேண்டுமானாலும் செய்யலாம், தங்களைக் கேட்க ஆளில்லை என்ற ஆணவத்தையும் அதிகாரத் திமிரையும் துணிவையும் தந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாகக் கண்டித்தனர். பிரதமர் ஒரு நீண்ட மௌனத்திற்குப்பின் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வார்த்தைகளில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவித்ததாக நான் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது, பிரதமரே தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று அரசின் ஆதரவையும், தனது உடனிருப்பையும் தெரிவித்திருக்கவேண்டும் அல்லது சட்ட அமைச்சரையாவது அரசின் சார்பாக, தலைமை நீதிபதிக்கு ஆறுதல் கூற அனுப்பியிருக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி கூறிய ஒரு கருத்தினை ஒதுக்கிவிட முடியாது. இந்தச் சம்பவத்தை ஒரு முஸ்லிம் வழக்குரைஞர் செய்திருந்தால் இதற்குள் நாடே ரணகளமாக மாறியிருக்கும். அந்த நபரின் வீட்டை புல்டோசர் இடித்துத் தள்ளியிருக்கும். அவரைத் தேசிய புலனாய்வு முகமையினர் தங்களது விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தியிருப்பார்கள். தேசிய ஊடகங்களிலே இடைவிடாத நேர்காணல்களும் விவாதங்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இடைவிடாமல் தொடர்ந்திருக்கும். சொல்லி வைத்தாற்போல பா... தலைவர்கள், அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள், பெரும்பாலான பா... கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் இவ்வேளையில் அமைதி காத்தது நமக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

சம்பவம் நடந்த மறுநாள் வழக்குரைஞர் கிஷோர் பா...வின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஒருவரோடு நீண்ட நேரம் இருந்த செய்தியும் வீடியோ பதிவும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. நம்மைப் பொறுத்தவரை கிஷோர் என்பவர் எய்யப்பட்ட அம்பு மட்டுமே. அவரை எய்திய சதிக் கும்பல் எது என்பதுதான் முக்கியம். அந்தச் சதி மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டது என்பதில் நமக்கு ஐயமில்லை. ஒரு தலித் நீதியரசர்மீது செருப்பினை எறிய அதே சமூகத்தைச் சார்ந்த ஒரு தலித் வழக்குரைஞரைத் தயார் செய்ததுதான்அவர்களதுசாமர்த்தியம்.

இது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. தென் மாவட்டங்களில் தங்களது மார்புகளை மறைக்கும் உரிமைகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்கள் தோள் சீலைப் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் இரவிக்கை அணிந்து பொது இடங்களுக்குப் போவதென்று முடிவெடுத்து இரவிக்கை அணிந்தபோது அதே சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தாம் அப்பெண்களின் இரவிக்கைகளைத் தொரட்டி கம்பு கொண்டு கிழித்தார்கள். ஆலயப் பிரவேச அனுமதி மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை, சீர்திருத்தவாதிகள் ஆலயங்களுக்குள் அழைத்துச் சென்றபோது அந்தச் சமூகங்களைச் சார்ந்தவர்களே சீர்திருத்தவாதிகளைத் தாக்கினர். தேவதாசி முறையினை ஒழிக்க வேண்டும் என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் இயக்கம் நடத்தியபோது, அவரைத் தாக்கியவர்களும் தேவதாசி சமூகத்துப் பெண்களே. வீரர்களும் துரோகிகளும் ஒரே வீட்டில் பிறப்பது ஆச்சரியமும் இல்ல! அதிசயமும் அல்ல! வரலாற்றின் வழிநெடுகிலும் அதற்கு உதாரணங்கள் ஏராளம் உள்ளன.

நாம் கவலைப்படுவதெல்லாம், அரசியல் சாசன சட்டத்தின் காவல் அரணாகவும், அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் பெற்ற அமைப்பாகவும் இருக்கின்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, உச்ச நீதிமன்றத்தின் வளாகத்திற்குள்ளேயே இந்த நிலை என்றால், இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்பதே!

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும்என்பதை மட்டும் இப்போது மனத்தில் வைப்போம்.