news-details
சிறப்புக்கட்டுரை
நீலத் திமிங்கலமும் நீளும் மாய அலைகளும்

நீலத் திமிங்கல சவால்எனும் விளையாட்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. இது இணைய வழி விளையாட்டு எனினும், குழந்தைகளின் உயிரோடுகியூரேட்டர்விளையாடுவார். இதில் 50 சவால்கள் உள்ளன. 30-49 படிநிலைகளில் உயிரைப் பணயம் வைத்து விளையாடவேண்டும். அது தற்கொலை முடிவைக் கேட்கும் உயிர் விளையாட்டு. ஒவ்வொரு சவால் முடிந்ததும், கியூரேட்டருக்குப் புகைப்படம் அனுப்பவேண்டும். கியூரேட்டர் பதிலுக்கு, பயங்கர இசையை அல்லது திகில் படத்தை அனுப்புவார். மாதிரிக்கு ஒரு படிநிலையைக் காண்போம்.

அதிகாலை 4.20க்கு  கியூரேட்டர் ஒரு படம் அனுப்புவார், ஒரு செய்தியும் அனுப்புவார். அதில்உங்கள் சொந்தக் கைகளை நீளவாக்கில் வெட்டுங்கள்; பின் ஒரு திமிங்கலத்தைக் காகிதத்தில் வரையுங்கள்.’

விளையாடுபவர் திமிங்கலமாக மாறத் தயாராக இருந்தால் தன் காலில்ஆம்என எழுதவேண்டும். இல்லையெனில், அவர்கள் தங்களைப் பலமுறை வெட்டிக்கொள்ளவேண்டும். அவர்களை பாலம், கூரை, கிரேன் மீது ஏறிக் குதிக்கச் சொல்வார். இப்படி அப்பாவி பதின் பருவத்தினர் செய்யவேண்டும். அப்படிச் செய்து, அவர்கள் நீலத் திமிங்கலத்தோடு பேசுவார்கள். அவர்கள் நீலத் திமிங்கலமாக மாறும் சவாலில் படிநிலை மாறுவார்கள். இறுதியில் உயிரையும் விடுவார்கள்.

மேலை நாடுகளில் பெற்றோருக்குத் தன் குழந்தைகளின், இணைய தள உபயோகிப்பில் வழிகாட் டும் நெறிமுறைகள் உள்ளன. அங்குப் பெற்றோரின் கண்காணிப்பில் பதின் பருவத்தினர் வளர்கின்றனர். நம் நாட்டில் பதின் பருவத்தினர், பள்ளிக் கல்விக்குப் பின் இளையோர், இருபாலரும், யூடியூப், முகநூல், இன்ஸ்ட்டா, எக்ஸ் தளம் (டுவிட்டர்) என இணைய தளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். வெளியுலக நடப்புத் தெரியாது வாழ்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ரீல்ஸ், லைக், கமெண்ட், ஷேர் என்பதே அவர்கள் உலகமாய் இருக்கிறது. பெரும்விழாக்களில், சுற்றுலா தளங்களில் இன்புளூயென்சர் என்போர் முக்கிய நபராக வலம் வருகிறார்கள்.

பலமுறைடிரெண்டிங்எனப்படும் செய்திகளை, திரைப்பாடல்களை, திரைப்பட முன்னோட்டங்களைக்  கண்டு  வியந்து போயிருக்கிறேன். உலகளாவிய தமிழர்கள் எண்ணிக்கைகளைவிடவியூஸ்எனும் பார்வைகளின் எண்ணிக்கை கண்டு அதிர்கிறேன். அது தொழில்நுட்ப, கார்ப்பரேட் எல்லாம் விலையெனும் வியூகம் தெரிந்து நொந்துள்ளேன்.

ஒரு காலத்தில் அஜித் இரசிகர்கள், விஜய் இரசிகர்களின் சமூக வலைத்தளச் சண்டைகள், தமிழில் இத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளனவா? என அறிய வைத்தனஅச்சேற்ற முடியாத வார்த்தைகள் மின்னணுக்களில் மின்னியது.

குறிப்பாக, பதிவிடுவோரின் உடல் உறுப்புகளையும், அவரது தாய், சகோதரிகள் குறித்த பதிவுகள்! அவர்களைக் கண்டுபிடித்து, கழுத்தை நெரிக்கலாமா? எனவும் தோன்றியது. முகநூலில் இந்த இரசிகர்கள் முகத்தை, முகவரியை மறைத்துவிட்டுச் செய்கிற அசிங்கம் படுகேவலம்.

சில நேரங்களில், இவர்களது முகநூல் பதிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தால், பா... அண்ணாமலை போல எதிர்கேள்வி: “உனக்கு ரூபாய் 200 வந்துவிடும்என்ற ஒற்றைப் பதிலே இரசிகர் கூட்டங்களின் தாரக மந்திரம். முடியாவிட்டால், தற்கொலைக்குத் தூண்டுகிற அர்ச்சனைகள், தரம் தாழ்ந்த பதிவுகள். இவர்கள் என்றும் வேலைக்குச் செல்லாமல் செய்கிற முழுநேர வேலையே இதுதான்.

அஜித் இரசிகர்களை விட்டுவிட்டு, ரஜினி இரசிகர்களோடு, தங்கள் அட்டைக்கத்திகளை விஜய் இரசிகர்கள் வீசினர். அதன் நீட்சி கரூரில் வெளிச்சமானது. எத்தனை எத்தனை பேட்டிகள்! கல் வீசப்பட்டது என்றார்கள். வீசிய கற்கள் வானிலே  நின்றுவிட்டதா? என்றால் பதில் இல்லை. கத்திக் குத்து, மயக்க ஸ்பிரே அடிக்கப்பட்டது, கத்தியில் குத்தினார்கள் என எத்தனை பேட்டிகள்... சமூக வலைத்தளப் பதிவுகளில் மூன்று நாள்கள் உலா வந்தன. முதல்வரே தலையிட்டு, ‘வதந்தியைப் பரப்பக்கூடாது, அவர்கள் கைது செய்யப்படுவார்கள்என்றவுடன், மூன்று கைதுகளுக்குப் பின், தங்கள் சமூக வலைத்தளக் கணக்கை இவர்கள் இழுத்து மூடிப் பதுங்கினர்.

25  ஆண்டுகள் பள்ளியில் பணிபுரிந்தவன் என்ற முறையில் ஆணித்தரமாகக் கூறுகிறேன்: பெற்றோர் தங்கள் செல்லப் பிள்ளைகளின் தவறுகளை நன்கு தெரிந்தும் ஏற்றுக் கொள்வதில்லை. அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடும் குடும்பப் பிள்ளைகளின் கையில் விலையுயர்ந்த ஆன்ட்ராய்டு கைப்பேசிகளைக் காண்கிறேன். இவர்களின் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்கிறேன். இவர்களது மொழி அறிவு, சமூகத் தொடர்பு, வேலைவாய்ப்பு எதுவுமின்றி கனவுகளில் வாழ்கிறார்கள். வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களைக் காண்கிறேன். அனைவரும் மிக ஏழைகள் என உணர்ந்து வருந்துகிறேன். கூட்ட நெரிசலில் ஓர் இளம்பெண்ணிடம் செய்தியாளர் கேட்கிறார்: “இவ்வளவு சிரமப்பட்டு, பிடித்த நடிகரைப் பார்க்க வேண்டுமா?” எனக்  கேட்கிறார். அதற்கு அப்பெண், “நான் செத்தாலும் பரவாயில்லை, பிடித்த நடிகரைப் பார்த்துவிட்டுச் சாகிறேன்என்கிறார். இப்படிப் பிடிவாதம் பிடித்து உயிரிழந்தோர் ஏராளம்.

நடிகரின் கட்சியில் நிர்வாகிகளாக உள்ள இளைஞர்களை நான் அறிவேன். எங்கள் தலைமுறையில் தொகுதிதோறும் பூத் கமிட்டி அமைக்கும் வரை வந்து இந்த அரசியல் வேண்டாம் என்ற நடிகரால் தன் தொழில், குடும்பம், வாழ்க்கை என எல்லாம் இழந்து மரித்த சகோதரர்களைக் கண்டிருக்கிறேன். மீண்டும் அதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதே நமது ஆதங்கம்.

விக்கிரவாண்டி சாராயச் சாவுகள் அனைவரும் அறிந்ததே. விக்கிரவாண்டியில் 50,000 உறுப்பினர்கள் எங்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள் எனப் பேசினார்கள். விஜய் இரசிகர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார்கள். அந்த இடைத்தேர்தலில் பொதுத்தேர்தல் ஓட்டுகளைவிட, நோட்டாவின் ஓட்டுகள் குறைந்தது என்பதே தமிழ்நாடு அரசியல் வரலாறு.

தனது கருத்துகளைத் துணிந்து பொதுவெளியில் தந்தை பெரியாருக்குப் பிறகு பேசும் நடிகவேள் எம்.ஆர். ராதா கூறுவார்: “பார்த்தியா, ரசிச்சயா, அதோட கூத்தாடிய விட்டுப் போயிட்டே இரு. அவன் அடுத்தக் கூத்துக்கு ரெடியாயிட்டு இருப்பான். அவன் உலகத்திலே நுழைஞ்சி பார்க்காதே. அது ரொம்ப அசிங்கம். அவனை அரசியலுக்குக் கூப்பிட்டு, அழிஞ்சு போகாதே. நீ அவனுக்குக் காசு கொடுக்கிறே. அவன் நடிக்கிறான். அவன் உன் வேலைக்காரன். அந்த வேலைக்காரனைத் தலைவன்னு கொண்டாடாதே. அது அசிங்கம், அவமானம்என்பார்.

சில  காலம் தமிழர்கள் தங்கள் மீட்பரை வெள்ளித்திரையில் தேடுகிறார்கள் என்ற பிரச்சாரம் புதைந்து இருந்தது. அது மீண்டும் உயிர் பெற்றுவிட்டது. 2026 தமிழ்நாடு தேர்தல் குறித்த பல கட்டுரைகளில் கடைசி வரியாகச் சொன்ன ஆருடம் கரூரில் நிகழ்ந்துவிட்டது.

இவர்கள் நீலத் திமிங்கல விளையாட்டை இரசிகர்கள் கூட்டமாகச் செய்கிறார்கள். பெற்றோர் தாம் விழித்து, தம் பிள்ளைகளைக் காக்கவேண்டும். மனித உயிர்கள் மகத்தானவை!