news-details
சிறப்புக்கட்டுரை
‘அகண்ட பாரதத்தில்’ நடப்பது என்ன?

இந்து தேசியர்களின் கனவு மிக அகலமானது. இந்தியா பல தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பதை மறுத்து, இந்தியாவை ஒரு தேசமாகவே கட்டமைக்கும் இந்து தேசியவாதிகளைப் புரிந்துகொள்வோம்.

கலாச்சாரத் தேசியம்என்ற பெயரில் பன்மைக் கலாச்சாரத்தை அழித்து, ஒற்றைப் பண்பைத் திணித்து, எதேச்சதிகாரப் பாணியில் ஆட்சி நடத்தி வருதலையும் நாம் அறிவோம். திராவிடம் என்பது கால்டுவெல் மூலம் இந்நாட்டைப் பிளக்க அந்நியர் உருவாக்கிய சதி என்றும், இந்தியா ஒரு தேசம்; இத்தேசத்தின் உள்ளடக்கம் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்றிருக்க, இந்நாட்டின் எதிரிகள் இந்நாட்டை ஒரு துணைக் கண்டம் (Sub continent) என்றும் முத்திரையிட்டு உண்மையை மறைக்கும் இழிசெயலைச் செய்கின்றனர் என்றும் இந்துத்துவர்கள் வசைபாடுவதோடு நின்றிடவில்லை. இந்தியாவில் இன்று ஆட்சியைக் கைப்பற்றி ஆளும் உரிமையைப் பெற்றிருக்கும் கட்சியின் பூர்வீக அமைப்பாம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சவார்க்கரின்இந்து மகா சபாஎன்பனவெல்லாம் இன்று நாம் காணும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்தியாவை இவர்கள் கனவு காணும் நாடாக ஏற்கவில்லை.

இன்று நாம் ஆளும் இந்திய நிலப்பரப்பு குறைபட்ட ஒன்று. இந்தியா விடுதலை பெற்ற நாளில், இந்திய நிலப்பரப்பினுள் பாகிஸ்தானை இழந்தோம்; ஏற்கெனவே ஆப்கானில்தான் பறிபோயிற்று; தென் இலங்கை கைமாறியது என்றெல்லாம் அகண்ட பாரதம் சுருங்கிப் போய்விட்டதாகக் கலங்கும் இந்துத்துவர்களைப் பற்றி நாம் அறிய வேண்டுவது, இன்றும் இந்துத்துவத் தலைவர்களின்அகண்ட பாரதக் கனவுஅப்படியேதான் உள்ளது.

அகண்ட பாரதத்தின் உறுப்பு நாடுகளாக இவர்கள் கருதிய தேசங்கள் இன்று தன்னாட்சியும் இறையாண்மையும் பெற்ற நாடுகளாகவே திகழ்கின்றன. இந்தியாவில் இந்துத் தேசியர்களின் ஆட்சி மலர்ந்திருக்கும் காலத்தில்சார்க் (SAARC) என்ற அமைப்பு ஏனில்லை? ‘ஏசியன் (Asian) தெற்காசியக் கூட்டமைப்பு எங்கே? உலகின் ஒரே இந்து நாடு என்று இங்குள்ள இந்துத்துவர்களால் பாராட்டப்பட்ட நேபாளம் இந்தியாவின் கவனத்துள் இல்லை. சனநாயக ஆட்சிக்கு முந்தைய முடியாட்சி இந்துத்துவர்களின் விருப்பமான ஆட்சியாக இருந்திருக்க, சனநாயக நேபாளம், சீனா பக்கம் திரும்பியுள்ளதே... ஏன்?

இந்துத்துவக் கனவு என்பது ஒரு சனநாயகக் கனவல்ல; தேசிய இனங்களை அங்கீகரித்து, அவைகளின் தனித்துவத்தை மதிப்பதோ ஏற்பதோ அல்ல; இந்துத்துவர்களின் கனவு நவீன ஏகாதிபத்தியக் கனவு. ஏகாதிபத்தியத்தின் எல்லையோ பெரிது. ஏகாதிபத்தியம் என்பது விழுங்கும் இயல்பினைக் கொண்டது. ஏகாதிபத்தியத்தின் அரசியல் கொடுமையானது. இன்றைய மோடி அரசின் கொள்கை ஏகாதிபத்தியச் சாயலைக் கொண்டது. உலகில் நாம் இன்று சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்உருசிய அதிபர் புதின், பாலஸ்தீனத்தில் நாளும் கொலை பாதகம் நடத்திவரும் இஸ்ரேல் பிரதமர் என்போரெல்லாம் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளே.

வெவ்வேறு நாடுகளைக் காலனிகளாக மாற்றி, அந்நாடுகளின் வளத்தைச் சுரண்டி அடிமைப்படுத்துவது மட்டுமல்ல ஏகாதிபத்தியம்; சுயாட்சி பெற்ற நாட்டில் இயங்கும் அரசுகூட ஏகாதிபத்தியச் சிந்தனையோடு, ஏகாதிபத்தியம் உருவாக்கும் எதேச்சதிகார வடிவத்தைக் கொண்டிருக்கலாம்.

இன்றைய இந்துத்துவ மதவாத அரசு மத அடிப்படைவாதத்தைக் கொள்கையாகக் கொண்டிருப்பதால், இவ்வரசில் சனநாயகப் பண்பு இல்லை. ஆனாலும், சனநாயகத்தின் மிகப்பெரிய மதிக்கப்பெறும் தேர்தல் முறை, இந்துத்துவ மதவாத சனநாயக எதிர்ப்பாளர்களால் ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அரசியல் அறிவுள்ளோர் புரிந்துகொள்வர். குடிமக்களின் சமத்துவத்தை, குடிமக்களின் தெரிவு செய்யும் உரிமையை, குடிமக்களின் மனித உரிமைகளை மத ரீதியாக அணுகிப் பாகுபடுத்தும் ஓர் அரசு, ஏகாதிபத்திய ஏதேச்சதிகார அரசாகத்தான் இருக்க முடியும். சனநாயகத்தை நம்பாத ஓர் அரசு, சனநாயகம் தரும் தேர்தல் சனநாயகத்தை (Electrical Democracy) ஏற்பதாக நடித்து, அம்முறையில் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிவிடுகிறது.

சாதி, மதம், இனம், மொழி ரீதியாக எவரும் பாகுபடுத்தப்படக்கூடாது என்று பகரும் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மிகக் கேவலமாக மீறப்பட்டு, மத ரீதியாக மக்களைத் துருவப்படுத்தி, தேர்தலில் பெறுகின்ற பெரும்பான்மை, உண்மையான பெரும்பான்மை அல்ல என்பதையும், மத ஒருங்கிணைப்பு மூலம் பெற்றுவரும் பெரும்பான்மை, பெரும்பான்மைவாத அரசியலுக்கே இட்டுச்செல்லும் என்பதை அறிந்திருந்தும், ஒரு மதப்பெரும்பான்மைவாத அரசின் ஆட்சியின் போக்கை 140 கோடி மக்கள் மௌனமாகத் தரிசித்து, சகித்து வருகின்றனர்.

மௌனம் எப்போதுமே ஒடுக்கலையே ஊக்குவிக்கும் (Silence nourishes supressure). இந்தியக் குடிமக்கள் மௌனிக்கின்றனரா? இக்கூற்றில் உண்மை இல்லை என்பதும் உண்மையே. விரும்பி ஏற்கும் மௌனம் வேறு; மௌனிக்க வைத்தல் வேறு. இன்றைய இந்தியாவில் வகுப்புவாதக் கருத்தியலின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வோர் எளிதில் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். வகுப்புவாதக் கருத்தியல் பிரிவினையை உள்ளடக்கமாகக் கொண்டது; முடங்கும் சமூக அமைப்பை நியாயப்படுத்துவது; எதேச்சதிகார விதை இதன் உள்ளடக்கம்; எனவே, இக்கருத்தியல் பாசிசத்தின் விளை நிலம் என்றெல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையிலும், ‘இந்தியத் தாய்இதை உவந்து ஏற்றுக்கொண்டிருப்பது எப்படி?

இந்தியா கற்றுக்கொள்ளுமா?

அகண்ட பாரதப் பெருங்கனவுக்குள் சிக்கிக்கொள்ளாமல், இறையாண்மை மிக்கதாயும், சனநாயக நாடாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட நம் அண்டை நாடுகளின் நிலை என்ன? தென் இலங்கையிலும், இந்தியா உதவியோடு உருவாக்கப்பட்ட வங்காளதேசத்திலும், ‘உலகின் ஒரே இந்து நாடுஎன்று நம்மில் பெரும்பான்மைவாதிகளால் போற்றிப் புகழப்பட்ட நேபாளத்திலும் இன்று நடப்பது என்ன?

இம்மூன்று நாடுகளின் இளைஞர் கூட்டம் உயிரைத் துச்சமென வைத்துத் தெருவிற்கு வந்துள்ளது. இந்நாடுகள் அனைத்தும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவை. வங்காளதேசமும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்றாலும், மதம் என்ற பண்பாட்டு அடையாளம் ஒற்றைத் தேசத்தை உருவாக்கும் கருவியாக முடியாது என்பதை நிரூபித்து, இரு நாடுகளாக இவை உருவான வரலாற்றை நாம் அறிவோம்.

நம் அண்டையிலிருக்கும் இவ்விரு நாடுகளின் பிரிவினை, இந்தியாவின் மதப்பெரும்பான்மைவாதிகளின் மதரீதியான தேசியத்தை வேரோடு அழித்தது. 1971-ஆம் ஆண்டு பொய்யானதேசியம்என்ற கற்பனைக் கருத்தியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வங்காளதேசம் உருவான நிலையிலும், இந்தியாவின் மதப்பெரும்பான்மைவாதம் இன்னும் அதே பொய்மையை இங்கு வளர்த்து, அதை நம்பச் செய்து ஆட்சிக் கட்டிலிலும் ஏறி, மேலும் வேகமாக வளர்த்து வருகிறது.

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, ‘மதத்தால்என்ற சித்தாந்த அடிப்படையில் மக்கள் அணி திரட்டப்பட்டு உருவான பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது எப்படி? அந்நியரிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியத் துணைக்கண்டம், இருபெரும் நாடுகளாகத் துண்டிக்கப்படும் முன், பல இலட்சம் மக்களை மதவெறிக்குப் பலியாக்கியிருந்தது. சாத்விகத்தையும் அகிம்சையையும் போதித்த காந்தி பிறந்த மண்ணில் மனித இரத்தம் நதியெனப் பாய்ந்தது. மத ரீதியில் மக்களை வெறியூட்டி உருவான பாகிஸ்தான் ஒரே ஓர் ஆண்டு மட்டுமே ஜின்னா அவர்களின் வேண்டுகோளின் பெயரில் - சமய வேண்டுகோளின் பெயரில்சமயச் சார்பற்றக் குடியரசுஎன அறிவிக்கப்பட்டது. ஜின்னாவின் மறைவிற்குப் பின் பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசாக உருமாறிப் போனது. மத ரீதியாக மக்களை ஒருங்கிணைத்து உருவான நாடு, சனநாயகக் குடியரசாக மாறும் என்பது பொய்யான ஒரு நம்பிக்கை என்பதை பாகிஸ்தான் இவ்விதம் நிரூபித்தது.

இந்தியாவில் காந்தி மற்றும் நேரு தலைமையில் வளர்க்கப்பட்ட இந்தியத் தேசியம் வலுப்பெற்றிருந்த காலத்தில், மதவாத தேசியம் தன்னை நிலைநிறுத்தத் துடித்துக் கொண்டிருந்தது. பெரும்பான்மைவாதிகளுடன் நிகழ்ந்த சித்தாந்தப் போரில் காந்தியைக் கூட இழந்துவிட்டிருந்தாலும், இந்தியா சனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று என்ன? வராது போல் வந்த மாமணியைக் காக்கத் தவறிவிட்ட அவலச் சூழலில் உள்ளோம். சனநாயகம் காக்கும் வேள்வியில் எந்தப் பங்கும் பெறாத ஒருபெரும்பான்மைவாத அமைப்பு, கடந்த பதினோர் ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்க, வராது போல் வந்து மாமணியாம் சனநாயகத்தைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம். சனநாயகமும், சனநாயகப் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்ட சனநாயக நிறுவனங்களும், இந்திய அரசமைப்புச் சட்டங்களும் நாளும் குடிமக்களின் கண்முன்னே நசுக்கப்பட்டு வரும் நிதர்சனத்தை மௌனமாய் தரிசிக்கிறோம். ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டோம். அநீதியைக் கைகூப்பி ஏற்றுக்கொள்ளும் இம்மனநிலையைஇந்தியப் பண்பாடுஎன்று நியாயப்படுத்துகிறோம்.

மோடியின் ஆட்சியில் கேள்வி கேட்பது தேசத் துரோகம்; கேள்வி துறந்து மௌனிப்பது தேசப்பற்று; உண்மையான இந்திய அடையாள அட்டை (badge) என்பது அஞ்சி நடுங்குவோருக்கும் பார்வையற்றோருக்கும் முதுகெலும்பு இல்லாதோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனஎன்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்.

மோடி அரசு மறுத்தல் (being), திசை திருப்பல் (distract), பொய்யுரைத்தல் (Lie), நியாயப்படுத்தல் (Justify) போன்ற கொள்கைகளின் பின் நின்று உண்மையை மறைத்து வருகிறதுஎன்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்.

மேலே தரப்பெற்ற இருவரின் கூற்றுகளும், இக் கூற்றுகளில் உள்ளடங்கும் அவல அடையாளங்களும் ஒரு பாசிச அரசின் நிலைப்பாடுகளே. இந்த நிலைப்பாடுகளை எவ்வளவு காலம் தாங்கிக் கொண்டு நாம் வாழப்போகிறோம்? ‘அகண்ட பாரதத்தின் அண்டை நாடுகள்காட்டும் வழியை எப்போது கண்டு கொள்ளப்போகிறோம்?

ஈழப்போரில் வெற்றிகண்டதாகவும், ஈழப்புலிகளை அழித்துவிட்டதாகவும், சிங்கள மக்களை ஒருங்கிணைத்துப் பேரினவாதப் பெருமை பேசிய இராசபக்சேக்கள் தூக்கி எறியப்பட்டது எப்படி?

கார்கிலைக் காட்டி, புல்வர்மாவைப் பொய்யாகச் சித்தரித்து, பெகல்காமில் நடத்தப்பட்ட கொலைகளைசிந்தூர்எனும் பெயரில் மக்கள் உணர்வைத் தூண்டி, மோடி சாம்ராஜ்யம் வெற்றி பெறுவது எப்படி?

இலங்கையில் சிங்களப் பேரினவாதம் தந்த வெற்றி தகர்ந்தது. ‘ஒரே இந்து நாடுஎன்று பெருமைப்படுத்திய நேபாளமும் தகர்ந்தது. முடியாட்சியைத் தகர்த்துக் குடியாட்சி கண்டவர்கள், அக்குடியாட்சியின் அனைத்து மகத்துவங்களும் தகர்ந்துபோனது கண்ட இளைஞர்கள் கொஞ்சமும் காலந்தாழ்த்தாது வெடித்தெழுந்தது எப்படிச் சாத்தியமாயிற்று?

சனநாயக அரசின் நம்பகத்தன்மை இழந்துபோன நிலையில், ஆளும் அரசுகளின் தவறான ஆளுகை, மக்களுக்குப் பதில் சொல்லும் கடமையை மறுத்தல், மனித உரிமை மீறல்கள், சுரண்டல், ஊழல் எனும் கொடுமைகளைக் கண்டும், கேட்டும் பழகிப்போய்விட்ட பாரத நாட்டுக் குடிமக்களைப் போலல்லாமல்இராசபக்சே துரத்தப்படுகிறார்; வங்கதேசத்து அசீனா ஓட்டம் பிடிக்கிறார்; நோபாளத் தலைவர்கள் காணாமற் போகின்றனர்! இத்தனை எழுச்சிகளுக்கும் காரணகர்த்தர்கள், இந்நாடுகளின் இராணுவப் பலத்தையும் எதிர்த்து, உயிரை மாய்த்து மாற்று அரசுக்கு வழிகண்ட இளைஞர் கூட்டம். இக்கூட்டம் உலக நாடுகளுக்கு குறிப்பாக, நமக்குப் பாடம் கற்றுத்தருகிறது. இவ்வேளை, ஒரு வெற்றுத் தலைவர் பெயரில் கூடும் ஒரு கூட்டம், அக்கூட்டத்தின் வெற்றுக் குரல், வெற்றுக் கூச்சலையும் நாம் மறந்திடல் கூடாது.