news-details
சிறப்புக்கட்டுரை
டிஜிட்டல் காலத்தில் அச்சுப் பத்திரிகை: தொடர்பை நிலைநிறுத்துவதும் சவால்களை எதிர்கொள்வதும் காலத்தின் தேவை!

நமக்கு மிகவும் நெருக்கமானதாகவும், நம் பணிக்கு மிக முக்கியமானதாகவும் இருப்பது அச்சு ஊடகம். இன்றைய டிஜிட்டல் உலகில் அச்சு ஊடகத்தின் தொடர்பை நிலைநிறுத்துவதும், அவை எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து நாம் சிந்திப்பதும் காலத்தின் தேவையாகும்.

இன்று ஒரு கருத்து நம் சிந்தைக்குள் செல்வதற்கு முன்னதாகவே அவை வேகமாகப் பரவும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செய்திகள் பத்திரிகை அலுவலகங்களை வந்தடைவதற்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. செய்திகள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஊடகம் வழியாகப் பரவிவிடுகின்றன. நிமிடத்திற்கு எண்ணிலடங்காத வகையில் செய்திகள் பெருகுகின்றன. பெரும்பாலும் பொய்யான செய்திகள்முக்கியச் செய்தியாகமாற்றப்படுகின்றன. இதனால் உண்மைச் செய்திகள் வெளி உலகத்திற்குத் தெரியாமலேயே போய்விடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் கூட நம் கத்தோலிக்க அச்சு ஊடகம் உண்மையை உரைக்கும் ஊடகமாக, மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஓர் ஊடகமாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆன்மிகம், கல்வி, சமூகப்பணி வாயிலாக உலகை வடிவமைக்கும் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் திரு அவை, இந்த வியத்தகு மாற்றங்களை அமைதியாகப் பார்க்கத் துணியுமோ? “இந்த நிகழ்வுகளின் பிரதான ஓட்டத்திலிருந்து திரு அவை தனியாக விலகி நிற்கவேண்டும் அல்லது தன்னைத் தனிமைப்படுத்த முயற்சிக்கவேண்டும்என்று கூறுவதற்குப் பதிலாக, மனித முன்னேற்றத்தின் மையத்தில்தான் திரு அவை இருக்க முடியும். பிற மனிதர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதும், அவற்றைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையின் ஒளியில் அவற்றை விளக்குவதும் அவசியம்.

மனிதகுலத்தின் நன்மைக்காகவும், உலகத்திற்கான கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது கடவுளின் உண்மையுள்ள மக்களின் கடமையாகும். ஒவ்வொரு நபரின் மனித மற்றும் உன்னதமான வாழ்வுக்குப் பணிபுரிய கணினி யுகத்தின் முழுத் திறனையும் பயன்படுத்துவதன் வாயிலாக, அனைத்து நன்மைகளின் ஊற்றான தந்தைக்குப் புகழ் சேர்க்கவேண்டும்என்கிறார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் (1990).

1. அச்சு ஊடகத்துறையில் முன்னணியிலிருந்த கிறித்தவச் சமூகம்

ஒரு காலத்தில் இந்தியாவில் அச்சு ஊடகத்துறையில் திரு அவை முன்னணியில் இருந்தது. வட்டார மற்றும் உள்ளூர் மொழி வெளியீடுகளுக்குப் பணி செய்வதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் அச்சகங்களைத் தொடங்கியது கிறித்தவச் சமூகமே. கிறித்தவ மறைப்பணியாளர்கள் உள்ளூர் மொழிகளில் பல இதழ்களைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. அச்சின் நீடித்த மதிப்பு

அச்சு என்பது வெறும் காகிதத்தில் உள்ள மை அல்ல; அது நிலைத்தத்தன்மை, நம்பிக்கையூட்டும் தன்மை மற்றும் கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைக் குறிக்கிறது. ஓர் அச்சுப்பக்கம் நம்மை எளிதாகப் படிக்க வைக்கவும் சிந்திக்கவும் அழைக்கிறது. திரைச்சுற்றல்மீது (Scrolling) அடிமையாகிவிட்ட உலகில், அச்சிடப்பட்ட வார்த்தைகள் சிந்தனையின் செயலாக மாறுகிறது. அச்சிடப்பட்டவை நம்பிக்கைக்குரியதாக, தேர்வு செய்யப்பட்டதாக மற்றும் சரிபார்க்கப்பட்டதும் பொறுப்புள்ளதுமாக இருக்கிறது. நமது கத்தோலிக்க நிறுவனங்கள் திரு அவைச் செய்தி மடல்கள், மறைப்பணி இதழ்கள் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுவது இந்த அச்சு ஊடகமே. எனவே, இவை வெறும் வெளியீடுகள் அல்ல, அவை உயிருள்ள  வரலாறுகள்.

3. நாம் எதிர்கொள்கின்ற சவால்கள்

இன்று அச்சு ஊடகம் எதிர்கொள்கின்ற சவால்களை மறுக்க இயலாது. குறைந்து வரும் சந்தாதாரர்கள், அச்சுக்கான அதிகச் செலவுகள், கவன நேரம் குறைந்து வருதல், மேலும் பெருகி வரும் டிஜிட்டல் தளங்கள் இவற்றால் அச்சு ஊடகம் பெரும் சவால்களைச் சந்திப்பது உண்மைதான். இளைய தலைமுறையினர் அடிக்கடி நம்மிடம் கேட்பது: ‘என் கைப்பேசியில் எல்லாம் இருக்கிறபோது அச்சு எதற்கு?’ விளம்பரதாரர்களும் இன்று எளிதான சேவைகளுக்காக டிஜிட்டல் தளங்களை நோக்கியே நகர்ந்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இவை யாவும் உண்மையான சவால்களே. இருப்பினும், இந்தச் சவால்கள் மீண்டும் நாம் புதிய முயற்சிகளில் முன்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புகளாகும்.

அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் இரண்டுமே சந்தை சக்திகளின் பிடியில் இருக்கின்றன. இன்று ஊடகங்கள் சந்திக்கும் போராட்டங்கள் இவை. ஆனால், சவால்கள் என்பது எப்போதுமே சுயமாற்றத்திற்கான வாய்ப்புகளே. ஊடகங்கள் மெருகூட்டப்பட்ட கவர்ச்சி உலகம் மற்றும் புகழ் வேட்டையின் பின்செல்கின்றன. மேலும், அவை தங்களைக் காத்துக்கொள்வதற்காக ஆதிக்கச் சக்தியினர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடிமையாகிவிட்டன. தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அரசமைப்பு விழுமியங்களை முன்னெடுத்ததில் அச்சு ஊடகம் வகித்த பெருமைக்குரிய பங்கை நாம் மறந்துவிட்டாலும், இன்று அவை சக்திவாய்ந்தவர்களால்வாங்கப்பட்டுகட்டுப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது. மாபியா தலைவர்களைப் புகழ்ந்துரைத்து, அவர்களுக்கு அரசியல் மரியாதை அளிக்க முயலும் போக்கை யாராலும் மன்னிக்க இயலாது. குற்றவாளிகள் மகிமைப்படுத்தப்பட்டு கதாநாயகர்களாக எடுத்துக்காட்டப்படுகின்றனர். வணிக நலன்களால் வழிநடத்தப்படும் சில அச்சு ஊடகங்கள், முன்பு பளபளப்பான பத்திரிகைகளின் பாதுகாப்பிற்காகக் கருதப்பட்ட கவர்ச்சி, வதந்திகள் மற்றும் பாலியல் ஆகியவற்றை மட்டுமே விற்பனை செய்கின்றன.

கடந்த காலத்தின் அடையாளமாக இருந்த அச்சு ஊடகங்களில் தொழில்முறைத் தலைமை பலவீனமடைந்து வருவதாகவும் மறைந்து வருவதாகவும் தெரிகிறது. தொழில்முறை பத்திரிகையாளர்களின் ஒருங்கிணைந்த மனசாட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில், குறுகிய பல்வேறு சுயநல அடிப்படையிலான பத்திரிகையாளர்கள் சங்கங்கள் உருவாகிவிட்டன. இதன் விளைவாக, நீதிமன்றங்களின் கண்டனங்களும், இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலின் எச்சரிக்கைகளும்கூட ஊடகங்கள் தங்கள் பாதையைத் திருத்துவதை உறுதிசெய்ய முடியாத நிலையில்தான் உள்ளன.

4. செயல்பாட்டிற்கான பாதைகள்

இன்று சவால்களை நாம் எவ்வாறு முறியடிப்பது? நாம் எடுக்கவேண்டிய பாதைகள் என்ன?

அச்சு ஊடகம் சிறந்ததாகச் செய்யக்கூடியவற்றை நம்பிக்கையுடன் செய்யவேண்டும். நம்முடைய பதிப்புகள் ஆழமான சிந்தனைகளுக்குரிய இடமாக இருக்கட்டும். நமது வெளியீடுகள் நம்பிக்கையின் சாட்சியங்களாகவும், மனித உணர்வுகள் மற்றும் மனித உரிமைகள் அரசமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துவதாகவும் அமையவேண்டும். இவை அனைத்தும் ஒரு குறுஞ்செய்திக்குள் குறைக்க முடியாத கலையாக இருக்கவேண்டும்.

இவை மிகுந்த கவனத்துடன் சேவை புரிவதாக இருக்கவேண்டும். கத்தோலிக்க அச்சு ஊடகம் முக்கியமான நம் சமூகங்கள், பங்குகள், மறைமாவட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில், இங்கு நிகழும் நம் செய்திகள் பிற ஊடகங்களில் எதிரொலிக்கப்படுவதில்லை. சாதாரண நம்பிக்கையாளர்கள், முன்னோடிகள், திருநிலை-பொதுநிலைப் பணியாளர்கள், சமூகப் பணியாளர்கள் ஆகியோரின் செய்திகளை நாம்தாம் எடுத்துரைக்கவேண்டும்.

அச்சுக்கலை ஒரு சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட வேண்டும். அச்சுக்கலையும் எண்ணிமக்கலையும் ஒன்றோடொன்று தொடர்புடையதே. டிஜிட்டலுடன் அச்சு போட்டியிடவில்லை; மாறாக, இது அதை நிறைவு செய்கிறது. ஓர் இதழில்QRகுறியீடுகள் மூலம் வீடியோக்கள், அலைவரிசைகள் அல்லது பங்கு நிகழ்வுகளுடன் இணைக்கலாம். அச்சு என்பது அடிப்படையில் அடித்தளம்; டிஜிட்டல் என்பது விரிவாக்கம். அச்சு என்பது அமைப்பு; டிஜிட்டல் என்பது அதன் செயல்.

5. நிலைத்தன்மை மற்றும் படைப்பாற்றல்

நிலைத்தன்மை குறித்து நாம் வேறுபாடாகச் சிந்திக்கவேண்டும்:

சந்தாக்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைகள் பரிவர்த்தனைகளாக அல்ல, உறவுகளாக வளர்க்கப்படவேண்டும்.

சிறப்பு பதிப்புகள், சேகரிப்பாளர் இதழ்கள், பக்தி வழிகாட்டிகள், மேய்ப்புப்பணி கடிதங்களின் தொகுப்புகள் இவை பணிகள் மற்றும் வருவாய் வழிகளாக இருக்கலாம்.

நிகழ்வுகள், கருத்தரங்குகள், இளைஞர் போட்டிகள், குழந்தைகளுக்கான பக்கம் மேலும் உந்துதல் தரும் அறிவுத் துணுக்குகள் போன்றவற்றை நம் அச்சு முயற்சிகளுடன் இணைத்தால், அவை பத்திரிகையை மக்களின் வாழ்க்கையில் ஓர் உயிருள்ள இருப்பாக மாற்றும்.

6. அச்சுப்பணி - ஒரு சமூகத் தொண்டு

முக்கியமாக நாம் நினைவில்கொள்ள வேண்டியது: நம் அச்சு ஊடகம் ஒரு வணிக முயற்சி மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தொண்டு. அது ஒரு சமயப் போதனை; அது ஓர் உருவாக்கம்; அது ஓர் உண்மைக்கான பணி. ஒரு கத்தோலிக்க நாளிதழ் அல்லது இதழ் என்பது வெறும் தகவல்களுக்காக மட்டுமல்ல, ஊக்கமளிக்க, உயிரளிக்க, மாற்றத்தைக் கொண்டுவர அமைந்தது. அது வெறும் நிகழ்வுகளை உள்ளடக்குவதில்லை; மாறாக, அது நம்பிக்கையின் ஒளியில் அவற்றை விளக்குகிறது. இது சிக்கல்களை மட்டும் தெரிவிக்காது, நம்பிக்கையின் பக்கம் வழிகாட்டுகிறது.

7. மீண்டும் கண்டுபிடிப்பதற்கும் பிறரை ஒளிர்விப்பதற்குமான ஓர் அழைப்பு

டிஜிட்டல் புயல் உண்மையாகவே உள்ளது. அது அனைத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தியாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை. நம் பதில் என்ன? அச்சை விலக்குவது அல்ல; அதன் அழைப்பை மீண்டும் காணப்படச் செய்தல். அதாவது, தவறான தகவல்களால் நிரம்பிய காலத்தில் நம்பிக்கைக்குரிய சாட்சியாக, திசைதிருப்பும் உலகில் சிந்தனையைத் தூண்டும் வெளிப்பாடாக, முழக்கங்களுக்கு மத்தியில் ஒரு மென்மையான குரலாக அச்சு ஊடகம் அமையவேண்டும். நம் அச்சு ஊடகம் மறைப்பணியின் ஆழம், அதன் அழகு, நம்பகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு தொண்டுப் பணியாக மாறக்கூடும் எனில், அது டிஜிட்டல் யுகத்தில் மூழ்கிவிடாது, தனித்து ஒளி கொடுக்கும் பேரொளியாக அச்சு ஊடகம் அமையும்.

வத்திக்கானில் நடைபெற்ற நோபல் பரிசு பெற்றவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் விடுத்த அழைப்பு எண்ணிப்பார்க்கத்தக்கதே: “இது மனிதகுலத்தின் நலனுக்காகச் செயல்படும் முறைகளை வடிவமைக்க வேண்டிய பொறுப்பை மனிதர்கள் ஏற்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இது சமூகத்தின் மேம்பாட்டிற்கும் சமூக ஒற்றுமைக்குமான முறைகளையும் கட்டமைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.”

எனவே, நம் இதயங்களில் அச்சிடப்பட்ட வார்த்தைஎன் காலடிக்கு உம் வாக்கே விளக்கு; என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) எனும் தூய வார்த்தையை நம் உள்ளங்களில் ஏற்று, கத்தோலிக்கத் தொடர்பாளர்களாகத் துணிவுடனும் படைப்பாற்றலுடனும் நம்பிக்கையுடனும் முன்னே செல்வோம்.

- மொழியாக்கம்அருள்பணி. ஜெ. ஞானசேகரன்