திருப்பலி முன்னுரை
இறைவன்
முன்னிலையில் நம்மைத் தாழ்த்தி, அகந்தையில்லாத மனத்தோடு ஆண்டவரோடு உறவாட ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவேண்டல் செய்யும்போது நமது மனநிலை எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார். பரிசேயர் நேர்மை உள்ளவராகவும், மற்றவர்களைவிட உயர்வானவராகவும் நினைத்துக் கொண்டு ‘தான்’ என்ற அகந்தையோடு செபிக்கின்றார். ஆண்டவரை அனுபவிக்க முடியாமல் ஆலயத்திலிருந்து பாவியாகத்
திரும்பிச் செல்கின்றார். வரி தண்டுவோரோ தான் பாவி என்ற மனநிலையோடும் தூய்மையான உள்ளத்தோடும் செபிக்கிறார். நேர்மையுள்ளவராக, ஆசிரைப் பெற்றவராக ஆலயத்திலிருந்து வெளியே செல்கிறார். நாம் உள்ளத்தில் இறுமாப்புடன் இருந்த பரிசேயராக இருக்கின்றோமா? அகத்தை தாழ்ச்சி என்ற புண்ணியத்தால் அழகு செய்து, ஆண்டவர் முன் தன்னைத் தாழ்த்திட்ட வரிதண்டுவோராக இருக்கின்றோமா? எனச் சிந்திப்போம். உதட்டால் செபிப்பவர்களாய் இல்லாமல் உள்ளத்தால் செபிப்பவர்களாய் மாறிடவும், ஆலயத்தில் மட்டுமல்ல, அடுத்தவரிலும் இறைவனைக் கண்டிடவும், செபமே செயலாக மாறிடவும் வரம் வேண்டுவோம். சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் வாழ்க்கையிலும் உயர்ந்தவர்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
கடவுளின்
திட்டத்திற்குப் பணிந்து வாழும்போது நாம் கேட்பவை அனைத்தையும் ஆண்டவர் நமக்கு அருள்வார். உள்ளத்தில் தூய்மையானவற்றைச் சிந்திக்கும்போதும், மற்றவருக்கும் நமக்கும் பயன்தரக்கூடியதைக் கேட்கும்போதும் ஆண்டவர் நமக்குக் கட்டாயம் கொடுப்பார். தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு இறைவனை நோக்கிச் செபிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
ஆண்டவர்
உயர்ந்தவர். நாம் வேண்டுவதற்கும் மேலாகவே கொடுக்கக்கூடியவர். எத்தீங்கும் அணுகாது நம்மைக் காப்பவர். தம்முடைய தூதர்களைக் கொண்டு தாங்குபவர். நமக்கு முன்பாகச் சென்று அனைத்து இடர்களையும் தகர்த்துவிடுபவர். திருத்தூதர்
பவுலின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆண்டவர் எவ்வாறு கூடவே இருந்து வழிநடத்தினார் என்பதை எடுத்துக்கூறும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் இறுதிவரை உம்மில் நிலைத்திருந்து பலன்கொடுக்கவும், மக்களை நம்பிக்கையின் பாதையில் வழிநடத்தவும் தேவையான அருள்வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ‘நானே நல்ல
ஆயன்’ என்று
மொழிந்த ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தன்னலமின்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழ்ந்திடவும், ஏழைகளின் வாழ்வு வளம் பெறுவதற்குத் தேவையான சட்டங்களைக் கொண்டு வரவும் வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எம்மை
விட்டு நீங்காத ஆண்டவரே! எம் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களில் நம்பிக்கையும் அன்பும் வளர்ந்திடவும், எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது செபிக்கவும், தேவையான நல்ல மனத்தை எமக்குத்
தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எம்மோடு
பயணிக்கும் ஆண்டவரே! நாங்கள் கிறிஸ்துவை எங்கள் வாழ்க்கையால் அறிவிக்கவும், செபத்தில் நிலைத்திருக்கவும், வாழ்வுதரும் வார்த்தையை அன்றாடம் படிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. இமைப்பொழுதும்
நீங்காத ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளையோர் அனைவரும் கணினி உலகத்தில் ஆன்மாவைத் தொலைத்துவிடாமல் மெய்யான இறைவனாகிய உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.