news-details
தலையங்கம்
காலம் கடந்து வந்தாலும் கணினியில் களம் கண்டுள்ளது ‘நம் வாழ்வு’ நாளிதழ் (E-Newspaper)

என் இனிய வாசகப் பெருமக்களே,

உங்கள் பேராதரவிற்கு மிக்க நன்றி! இரு மாதங்கள், அதாவது 60 நாள்கள் - அறுபதாயிரம் வாசகர்கள் என வளர்நிலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறதுநம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழ் (E-Newspaper).

நம் வாழ்வு - வார இதழ், ‘கல்விச் சுரங்கம் - மாணவர் மாத இதழ்,  ‘நம் வாழ்வுபதிப்பகம் - மாதம் ஒரு நூல்... எனப் பயணித்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம், இன்று உலகம் எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் இச்சூழலில், காலத்தின் அறிகுறிகளைக் கருத்தாய்க் கணித்து, அதன் இலக்கைச் சற்றே கூர்மைப்படுத்தி, எண்ணத்தை ஆழமாய்த் தெளிவுபடுத்தி ஐம்பது ஆண்டுகாலக் கனவை இன்று  நனவாக்கியிருக்கிறது

மிகப்பெரிய பொருள்செலவில் அச்சகம் நிறுவப்பட்டு, விலைவாசி விண்ணை முட்டி  நிற்கும் இக்காலத்தில், அன்றாட நாளிதழாக அச்சிட்டு, நாள்தோறும் பரவலாக்கம் என்பது பெரும் சவாலே. ஆயினும், இறைவன் தந்த மாபெரும் கொடை, வளர்ந்து வரும் எண்ணிம அறிவியல் தொழில்நுட்பம். இது கடவுள் தந்த களம்; காலம் தந்த தளம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வந்த பிறகு, அதற்கான வாய்ப்புகள் கனிந்த பிறகு, நமது அச்சு ஊடகப் பணியின் செயல்பாட்டையும் பயன்பாட்டையும் சுய ஆய்வும் கள ஆய்வும் செய்ததன் வெளிப்பாடுதான், ‘எண்ணிமத் தொழில்நுட்பத்தில் நாம் தடம் பதிக்கவேண்டும்என்ற சிந்தனை. அதன் அடிப்படையில், அச்சு ஊடகப் பணியகத்தின் அத்தனை பிரிவுகளும், புதிய வலைதளம், ‘நம் வாழ்வுசெயலி, சமூக ஊடகங்களின் பயன்பாடு, ஃபிளிப் புக் (மின்னணுப் புத்தகம்), சந்தாதாரர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் மென்பொருள், மின்னஞ்சல் வழியாகப் பகிரப்படும் வார இதழ், உயர் தொழில்நுட்ப வடிவமைப்பு, மாதா தொலைக்காட்சி மூலம் பரவலாக்கம் என எண்ணிமத் தொழில்நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளது

இத்தகைய தொழில்நுட்பம் கைகூடிய பிறகு திரு அவைச் செய்திகள், திருத்தந்தையின் முழக்கங்கள், உலக அமைதிக்கான அவருடைய கருத்துகள்உலகளாவிய அளவில் கிறித்தவர்களின் நிலைப்பாடு, அவர்களின் வாழ்வியல் முறை, சந்திக்கும் எதிர்வினைகள், ஆசிய-இந்திய- தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் கிறித்தவர்கள், சிறுபான்மையினர் அறிய வேண்டிய தரவுகள் என யாவற்றையும் உடனுக்குடன் வழங்குவது காலத்தின் கட்டாயமானது.

புத்தக வாசிப்புபத்திரிகை வாசிப்பு, வார-மாத இதழ்களைப் புரட்டுவது என்னும் நமது அன்றாடப் பழக்கத்தை இன்றைய இளைய தலைமுறையினரிடம் காண்பது அரிதாகிப் போனது. அதேவேளையில், எண்ணிமத் தொழில்நுட்பம் அவர்களைச் சூழ்ந்துகொண்டதும், அதுவே உலகமென அவர்கள் கருதிக்கொண்டதும் காலமாகிப் போனது. அவர்களையும் வாசிப்பவர்களாக மாற்றவேண்டும், அரசியல்-ஆன்மிக-சமூகச் சிந்தனைகளில் நாட்டம் கொண்டவர்களாக வளர்க்கவேண்டும், மாண்புமிக்க மானுடச் சமூகத்தின் உலகச் சிந்தனைகளை உள்வாங்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பிறந்ததுதான்நம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழ்.

இது இளையோருக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் கத்தோலிக்கக் கிறித்தவருக்கும்... ஏன், யாவருக்கும் பயன்படும் காலப் பெட்டகம்! இது உலகெங்கும் வாழும் தமிழ்க் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் சமூகத்தளத்திலும், ஊடக உலகத்திலும் நாளை நிறைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகைய பொழுதைக் காண எம் கண்கள் தவமிருப்பதே எமது கனவாகிறது.

இன்றைய சமூகமும்  மானுட வாழ்வியலும் அன்றாடச் செய்திகளால் கட்டமைக்கப்படுகின்றன. உண்மையும்-பொய்மையும் கலந்தே உலா வருகின்றன. பல வேளைகளில் பொய்மை புகழப்படுகிறது, உண்மை ஓரங்கட்டப்படுகிறது; பொய்மை-பசுத்தோல் போர்த்திய புலியாக உலா வருகிறது; உண்மையற்றத் தரவுகள் ஓங்கி ஒலிக்கின்றன. போலிகள் உண்மையைப் போலவே உருவெடுத்துள்ளன; ‘கல்யாணி கவரிங்போலவே நம்மையும் நம்பவைத்து விடுகின்றன. உண்மைகள் உரசிப் பார்க்கப்படவேண்டும். அது நீதியின் தளத்தில், நேர்மையின் தடத்தில், அன்பின் வழியில் உரசிப் பார்க்கப்படவேண்டும். கிறிஸ்துவின் மனநிலையில், திருவிவிலியத்தின் வழிநின்று, இறையரசின் மதிப்பீடுகளில் நாம் அதை உரசிப் பார்க்கவேண்டும்.

இன்றைய சூழலில், ஒரு நாட்டின் சமூக-அரசியல்-பொருளாதார மற்றும் கலாச்சாரக் கட்டமைப்பை வடிவமைப்பதில் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் பங்கு  அளப்பரியது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டில் அரசிற்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது  இத்தகைய ஊடகமே!

குறிப்பாக, மக்கள்மன்றப் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுவதையும் விவாதிக்கப்படுவதையும் செயல்படுவதையும் உறுதிசெய்வது இவ்வூடகமே. வரலாற்று ரீதியாகத் தகவல்களைப் பரப்புவதற்கும், ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அதற்காகப் பொறுப்பேற்க வைப்பதற்கும், தேசிய நீரோட்டத்தில் பொதுமக்களின் ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் ஒரு மூலைக்கல்லாகச் செயல்படுவதும் ஊடகமே!

மக்கள் மத்தியில் சமூகப் பிரச்சினைகளை எடுத்துச்சென்று விழிப்புணர்வு கொடுப்பதிலும் நீதியின் வழியிலும் உண்மையைச் சுமந்த வாழ்விலும் அவர்களை இயக்கங்களாகக் கட்டமைப்பதிலும் ஊக்குவிப்பதிலும் இவ்வூடகங்களின் பங்கு மிகப்பெரிது.

மக்களின் சமூக வாழ்வியல் பிரச்சினைகளான வறுமை, கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, உண்மை மற்றும் நீதிக்கான குரலாக இவை ஓங்கி ஒலிக்கின்றன. தவறான தகவல் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், நடுநிலை தவறாத ஊடகங்களும் சமூகத்தில் உண்டல்லவோ! ‘நம் வாழ்வுவார இதழ் இப்பணியைத் துணிவோடும் தெளிவோடும் கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றிவருவது பெருமைக்குரியதே!

நவீன ஊடக நிலப்பரப்பில் குறிப்பாக, இந்திய மண்ணில் கருத்துரிமை என்பது அண்மைக் காலங்களில் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இத்தகைய சூழலில், கருத்துச் சுதந்திரம், உண்மையை எடுத்துச்சொல்வதில் சந்திக்கும் இடர்ப்பாடுகள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆயினும், அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சன் குறிப்பிடுவதுபோல, “நமது சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தது; அதை இழந்துவிடாமல் காக்கவேண்டியது நமது கடமை.”

இவ்வேளையில் வாசிப்பு, ஊடக எழுத்தறிவு, பத்திரிகைத்துறை சார்ந்த கல்வி, செய்திகளில் உண்மைத்தன்மை, தவறான தகவல்களை எதிர்கொள்ளும் விதம், தொழில்நுட்பக் கருவிகள் பயன்பாடு உள்ளிட்ட பன்முக அணுகுமுறையில் நாமும், நமது எதிர்காலத் தலைமுறையினரும் விழிப்படைய வேண்டியுள்ளது.

சமூக நீதியை முன்னிலைப்படுத்தி, சமூக மாற்றத்திற்கு வித்திடும் முயற்சியில்நம் வாழ்வுமுன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்குத் தொடர்ந்து கரம்கொடுக்க வேண்டுகிறேன். மாற்றங்களை மனத்தில் கொண்டு நேர்மறையான அணுகுமுறையுடன் நேரிய நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி, சமூகச் சீர்திருத்தம் காண்போம்.

காட்சி ஊடகப் போதை தெளியட்டும்;

கடக்க வேண்டிய பாதை தெரியட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்