news-details
சிறப்புக்கட்டுரை
கல்விச்சாலைகள் எதற்காக?

தேடலில் மனிதன்!

வெள்ளிக்கு விளைநிலம் உண்டு; பொன்னிற்குப் புடமிடும் இடமுண்டு. மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது. மனிதர் இருளுக்கு இறுதி கண்டு எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர். மேலே நிலத்தில் உணவு விளைகின்றது; கீழே அது நெருப்புக்குழம்பாய் மாறுகின்றது. ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது? ‘என்னுள் இல்லைஎன உரைக்கும் ஆழ் கடல், ‘என்னிடம் இல்லைஎன இயம்பும் பெருங்கடல். மனிதர் அதன் மதிப்பை உணரார்; இவை யாவும் யோபுவின் இறைவார்த்தைகள்.

நவீன அறிவியல் மின்னணு உலகில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. இளம் வளர் இடைப்பருவச் சிறார்கள் இடை நிற்றல், தொழில் புரியும் காட்சிப் பிம்பங்கள்  ஒளிக்கீற்றாக நம் கண்களுக்குப் புகுந்தாலும் நகரங்களுக்கு இணையாகக் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இந்த எண்ணிக்கையின் உச்சம் எவ்வாறு இருக்கிறது என்றால், மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கத் துடிக்கும் தமிழகக் கனவுகளுக்கு ஒன்றிய அரசின் கல்விச் சட்டம் தவிடுப்பொடியாக்குகிறது. காரணம், குருவியைவிட கூடுகள் அதிகம் காணக்கிடைப்பது போல் தமிழ்நாட்டு மக்கள்தொகைக்கு முரணாக மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் இருக்கின்றன என்பது ஒன்றிய அரசின் குற்றச்சாட்டாகப் பதிவு செய்யப்படுகிறது.

கல்வியின் நோக்கம் என்ன?

பல்வேறு துறைகளில் பன்மடங்கு வளர்ச்சியை இச் சமூகம் கண்டாலும், சமூகத்தில் நிகழும் முரண்பாடான செயல்களினால்அறிவும் ஞானமும் எங்கே?’ என்ற கேள்விதான் எல்லார் மனத்திலும் எழுகின்றது. பெருகிவரும் குற்றங்களில் பெரும்பாலானோர் கல்வி பயின்றவர்கள். ஓடும் மழை நீரில் ஒய்யாரமாகத் தாவித்திரியும் தவளைகள் போல, கல்வியில் தன்னை முதல் தரத்தில் அழகுப்படுத்திக் கொண்டாலும், இளையோர் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தண்டனை பெறுவது கலாச்சாரமாகக் காட்சியளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, மனிதனின் செயல்பாடில்லா இயந்திரங்கள் இவ்வுலகத்தை ஆட்டிப் படைக்கின்ற வேளையிலே நண்பர் கூட்டத்திலிருந்து வருகின்ற நாளுக்கு ஒரு செய்தியாகதொலைத்தொடர்பு ஊடகங்களைப் பிறர் ஹேக் செய்துவிட்டார்கள்என்பதே ஆகும். அப்படி என்றால் இவர்கள் கல்வி பயிலாதவர்களா? கண்டிப்பாகப் பயின்றவர்கள்.

அறிவுத் தேடலில் மனிதன்

மனிதன் பிறந்த தருணத்திலிருந்து அவன் ஒரு தேடல் மயமான விலங்கு. உலகின் வெளிச்சம் அவன் விழிகளில் ஒளிர்ந்தாலும் உள்ளத்தின் இருள் அவனை ஏதோ ஒரு தேடலில் ஈடுபட செய்கிறது. அறிவால் மனிதன் இயந்திரங்களை உருவாக்குகின்றான். ஆனால், அவன் மனிதனாக வாழ்வதற்குச் சற்று தோல்வி அடைந்துவிடுகின்றான். அறிவு என்பது மனிதனின் உள்ளார்ந்த தாகமாக இருக்கின்றது; அது உண்மையைத்  தேடிக்கொண்டே செல்லும் ஒரு பயணமாக அமைகின்றது. மனித சிந்தனையின் உச்சமும் இறை அச்சத்தின் ஆழமும் சந்திக்கும் இடம்தான் அறிவு என்கிறார் புனித அகுஸ்தினார். அறிவு என்பது நீதியின் ஒளி அது இறைவனிடமிருந்து வருகின்ற பரிசு என்று கூறுகின்றார் புனித தாமஸ் அக்குவினாஸ். அறிவும் நம்பிக்கையும் இரண்டு இறக்கைகள் போல அவை மனித ஆன்மாவை உண்மையின் பக்கம் இட்டுச் செல்கின்றன என்கிறார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்.

தமிழ் இலக்கியம் புறநானூறுநீரினும் நெஞ்சம் நன்கு அறிந்தாரே ஞானிகள் - அப்படியென்றால் ஞானம், அறிவு என்பது மனத்தின் தெளிவும் கருணையும் ஆகும் என்கிறது. ஆனால், பயின்றவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் அறிவுடையோராய் மனத்தில் தெளிவும் மனிதாபிமான கருணையும் கொண்டுள்ளார்களா என்று சிந்திக்கின்ற வேளையிலே குற்றங்கள் நிகழ்ந்து தண்டனை பெறும் அனைவரும் இவை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஆகவேதான் பலருடைய கேள்வியாகக் கல்விச்சாலைகள் எதற்காக? அறிவு எங்கே? ஞானம் எங்கே? என்ற கேள்வியை இதயத் துடிப்பாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.

இதைத்தான் யோபுவின் வார்த்தைகள்ஆண்டவருக்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம். தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவுஎன்கிறது. இதையே திருவள்ளுவரும்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

என்று அழகாகக் கூறுகின்றார். உலகில் நாம் அஞ்ச வேண்டிய செயல்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும்; அதேவேளையில் அஞ்ச வேண்டிய காரியங்களுக்கு அஞ்சி நடப்பதே அறிவுடையோரின் செயலாகும் என்று கூறுகின்றார்.

ஆழ்ந்து அறிந்து கட்டடமாக இருக்கும் கடினமான பாடங்களைப் படித்துத் தேர்ந்தாலும் வாழ்வில் கட்டுப்பாடுகளும் கடவுள் பயமும் இல்லை என்றால், வாழ்வு அறிவற்றுதான் காணப்படும். இன்று அறிவு காணப்படுகிறது, ஆனால் ஞானம், பகுத்தறியும் திறன் குறைவாகத்தான் காணப்படுகிறது.

ஒரு மனிதன் தனது வாழ்வின் உண்மையைக் கண்டடைய வேண்டுமெனில் அறிவும் ஞானமும் அவனுக்குத் தேவைப்படுகிறது. உலகில், அறிவுசார் தகவல் மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆனால், ஞானத்தின் நிலம் காய்ந்து வறட்சி அடைந்திருக்கிறது.

அறிவினால் கடவுளின் படைப்பை ஆராய்வதை விட்டுவிட்டு கடவுளின் அருளால் அவருக்கு அஞ்சி நமது வாழ்வை உண்மையான பாதையில் சீர்தூக்கிட முற்படுவோம்.