news-details
சிறப்புக்கட்டுரை
ஆர்.எஸ்.எஸ்: 100 ஆண்டுகள் கண்ட ‘ஒற்றுமை இயக்கம்’

1925-ஆம் ஆண்டு நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஹெக்டேவார் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, இந்த ஆண்டு விஜயதசமியன்று அதன் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது. தேசப்பற்றின் முழு அவதாரமாகக் கருதப்படும் இவ்வமைப்பின் முழுநேரப் பணியாளராக இருந்த மோடி இன்று இந்தியப் பிரதமரான நிலையில், இந்நூற்றாண்டு விழாவையொட்டி நினைவுத் தபால் தலையோடு, நூற்றாண்டு நினைவு நாணயமும் வெளியிட்டுத் தன் நன்றிக்கடனைத் தீர்த்து வைத்தார்.

சங்கப் பரிவாரங்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-இன் (இராஷ்டிரிய சுயம் சேவக்) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, இவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் அவர்கள் அருளின உரைச் சுருக்கத்தினை ஊடகங்கள் தாராளமாகவே வெளியிட்டிருந்தன. நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குப் புகழாரம் சூட்டியவர்களின் செய்தியின் உள்ளடக்கம் என்னவாயிருந்தது? “நாட்டிற்கான தொண்டு (discipline), மக்களின் தேவையின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செய்யும் மனிதாபிமானப் பணி (Humanitarian) இரண்டும் போற்றுதற்குரியன என்று புகழ்ந்து வாழ்த்தும் சந்திரபாபு நாயுடு, இவரையொட்டி ஆந்திரப் பிரதேசத்தின் பவன் கல்யாண் அவர்கள், “ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காட்டும் ஒழுக்கம், தொண்டு மனப்பான்மை, தேசத்தின் மீதான அர்ப்பண உணர்வு வியப்பானது என்றெல்லாம் புகழும் பவன் கல்யாண் மேலும் கூறுகிறார்: “இவ்வமைப்பு இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஆரவாரமில்லாமல் காட்டிய ஆதரவு புகழ்வதற்குரியது.”

தேசாபிமானம், பாரம்பரியம் காக்கும் ஒழுங்கு, சுய ஒழுக்கம், சமூக விழிப்புணர்வு இவையெல்லாம் நெகிழவைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர் பண்புகள் என்று வியந்து பாராட்டுகிறார் மராட்டியத்தின் மேனாள் முதல்வரின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே. இந்த ஆர்.எஸ்.எஸ். பற்றிய புகழ் குறிப்புகள் அனைத்தும்இந்து நாளேட்டில் (அக் 13, 2025) இடம்பெற்றவை.

தேசப்பற்று, ஒழுக்கம், மனிதாபிமானம், தேசியம் எனும் அனைத்துப் பண்புகளுக்கும் கொள்கலனாகும் ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசால், அரசின் தலைமை அமைச்சர்களால் கொண்டாடப்படுவது அவர்களைப் பொறுத்தவகையில் சரிதான்இதே நாளிட்டஇந்து நாளிதழில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இன்றைய தலைவர் மோகன் பகவத் அவர்களின் உரையும் வெளியாகியுள்ளது. அவர் என்ன கூறுகிறார்: “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்நாட்டிற்குள் குடியேறிய அந்நிய நாட்டினர் பலர் இந்நாட்டை விட்டு வெளியேறியபோது சிலரை இந்நாட்டிலேயே விட்டுச்சென்றனர். பாரதக் கலாச்சாரம் கற்பிப்பதற்கு ஏற்ப அந்த அந்நியர்களை நாம் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டோம். அவர்களை அந்நியராக நாம் கருதவில்லை. ஆனால், வேறுபட்ட அடையாளங்களுடைய இவர்கள், இந்நாட்டில் பிரிவினைக்கு (Division) காரணமாய் அமைதல் கூடாது (இந்து, அக்.5, 2025).

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் செதுக்கப்பட்டு, இந்தியத் தலைமை அமைச்சராகும் அளவிற்கு வளர்ந்த மோடி அவர்கள், இந்தியாவின் விடுதலைப் பெருவிழா மேடையில் இந்திய ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் உருவகமாக ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதாகவும், இந்திய எழுச்சிக்கும்  ஒற்றுமைக்கும் ஆதாரமாக நின்று செயலாற்றி வருவதாகவும் பாராட்டிய மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு வாழ்த்தும் கூறினார்.

இன்றைய இந்தியா அன்று காலனி ஆதிக்கத்தை எதிர்த்துத் தேசிய இயக்கம் கண்டபோது, துரும்பளவு பங்குகூட இடம்பெறா ஓரமைப்புக்கு விடுதலை நாள் மேடையில் இப்படிப் புகழாரங்கள்!

இந்தியா விடுதலை பெறுகின்றபோது, மதம் சார்ந்த நாடாக உருவாகவேண்டும் என்ற இந்தியத் தேசியர்களின் கனவைத் தகர்க்கும் வகையில், இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்.-சும் செயல்பட்டு வந்த தன் உச்சம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்சே, காந்தியின் மார்பு நோக்கி நீட்டிய துப்பாக்கி என்பதெல்லாம் கூறும் செய்தியென்ன?

ஆர்.எஸ்.எஸ். எனும் மத அடிப்படைவாத அமைப்பின் நூறாமாண்டு நாளில் இவ்வமைப்பின் உள்ளடக்கச் சிறப்பாகச் சொல்லப்பட்ட பண்புகளாகத் தேசக்கட்டுமானம், பாரம்பரியப் பாதுகாப்பு, சுயநலமின்மை, ஒழுங்கு, ஒழுக்கம், ஒருமை, ஒற்றுமை என்பன பற்றியெல்லாம் மீளாய்வு செய்யப் பெற வேண்டிய காலம் வந்தாகிவிட்டது. இவ்வமைப்பு நாடெங்கும் நடத்தும்ஷாகா (Shaka) மூலம் நாட்டுப்பற்று வளர்க்கப்படுகிறதுஉடற்பயிற்சி மூலம்  இந்தியாவிற்கான உடற்கட்டுடன் கூடிய இளைஞர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்ற கட்டுக்கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலையிலிருந்து இந்தியக் குடிமக்களை மீட்டெடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

இவ்வமைப்பு பேசும் ஒருமை, ஒற்றுமையின் பொருள் என்ன? தேசக்கட்டுமானம் என்றால் என்ன? ஆர்.எஸ்.எஸ். எதனை ஒழுக்கம் என்கிறது? ஒழுங்கு என்பதன் வரையறை என்ன?

மோகன் பகவத் தன் உரையில் பல ஆயிரமாண்டுகளுக்குமுன் இந்தியாவில் குடிபுகுந்தோரைப் பாரதக் கலாச்சாரம் தழுவி ஏற்றுக் கொண்டதாம். இந்நாட்டிற்குள் குடிபுகுந்து எஞ்சியிருப்போர் பலர் நம் அடையாளத்தை (Identity) இன்னும் பேணுவது சரியில்லையாம்?

இந்நாட்டில் குடிபுகுந்தோர் யார்? குடிபுகுந்தோர் யாரின் தயவில் குடிகளாக ஏற்கப்பட்டனர்? இம்மாதிரி கேள்விகளில் தொக்கி நிற்கும் அரசியல் என்ன? சனநாயக நாட்டில் யார் தயவில் யார் வாழ்வது? இந்நாட்டில் குடிபுகுந்தவர் யார்? என்ற தொல் ஆய்வுக்கு இடமில்லை என்றாலும், மதவாத ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும்இந்நாட்டின் முதன்மைக் குடிகள் எது?’ என்ற கேள்விக்கு விடைகாண முயன்றால், அடையாளத்தை இழக்க வேண்டிய நிலையிலிருப்போர் யாராயிருப்பர்?

வேற்று நாட்டிலிருந்து இந்தியாவில் குடிபுகுந்தோர் தம் அடையாளத்தை நிறுவக் கூடாதாம். இந்தப் பகைப் பேச்சை இந்தியப் பிரதமர் ஏற்கிறார், பாராட்டுகிறார். ஒற்றை அடையாளத்தை நாளும் நிஜமாக்கி வரும் இந்திய ஆளும் கட்சி இதனைத்தானே செய்துவருகிறது!

இந்திய நாட்டில் வாழ்வோர் இந்துக் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும்; இந்துமதத் தலைவர்களைப் போற்ற வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாதோர் இந்தியாவிலிருந்து எந்தச் சலுகையும் (Previllages) பெறத் தகுதியற்றவர்கள். இவர்கள் எவ்வித உரிமைகளையும் கோருவதற்கு (Chims) உரிமை இல்லை. ஏன் குடியுரிமைக்குக் (Citizen ship) கூடத் தகுதியில்லை; அந்நியர்கள் (Giliens) - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோல்வால்கர் முன்மொழிந்த கட்டளை இது. இந்த முன்மொழிவைக் கோல்வால்கர் முன்வைத்தார்; மோகன் பகவத் வழிமொழிந்தார்; மோடி நெகிழ்ந்துபோனார்.

ஏற்கெனவே கோல்வால்கர் முன்மொழிந்த இந்தியாவின் எதிரிகள் பட்டியலில் இசுலாமியரும் கிறித்தவரும் பொதுவுடமை இயக்கமும் இருப்பதை அறிவோமல்லவா? இம்மூன்று தரப்பினரையும் எதிரிகளாக அடையாளப்படுத்துவதற்கான காரணம் என்ன?

இந்திய மக்களை இந்து தேசியம் (Cultural nationalism) எனும் பிரிவினைவாதக் கோட்பாட்டினை முன்வைத்த ஆர்.எஸ்.எஸ். பரந்து விரிந்த நாட்டின் பன்மைத்தன்மையை அழித்து ஒற்றைப் பண்பைத் திணிக்கும் விதை கண்ட ஆர்.எஸ்.எஸ். மானுடத்தின் உயர் மாண்பினைச் சிதைக்கும் வண்ணம்நாம் (We) - ‘அவர்கள் (they) என்ற பேதத்தினை வகுப்புவாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டமைத்து, சிறுபான்மையினரின் மத அடையாளங்களைப் பகை அடையாளமாகத் திட்டமிட்டு, அதில் வெற்றியும் கண்ட வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கொண்டாடப்பட வேண்டிய அமைப்பா?

நூறாண்டு வளர்ச்சியின் அடையாளம் ஒன்றியத்தில் இன்று ஆட்சிப் பொறுப்பு! ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று 36 கிளை அமைப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், இந்து முன்னணி, பாரதிய சனதா கட்சி என்ற பல்வேறு அமைப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. தமிழ்நாட்டின் இந்து முன்னணியாயினும், இந்து சாமியார்களை மூலவர்களாகக் கொண்டு இயங்கும் விசுவ இந்து பரிஷத் ஆயினும் பெயர்கள் தாம் வெவ்வேறே தவிர, இலக்கும் இயக்கமும் ஒன்றே. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தொண் டர் பேசும் மொழியும், கடைக்கோடி இந்துத்துவ உறுப்பினர் பேசும் மொழியிலும்-கருத்தியலிலும் எந்தவிதக் குழப்பமும் காண இயலாது. காலந்தோறும், இடம்தோறும் மாறுபட்டுப் பேசும் முறை இவர்களிடம் இல்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப்பரிவாரங்கள், எவையெல்லாம் இந்தியாவுக்கான கொள்கை, முதன்மை (Priority) என்று கூறிவந்ததோ, நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்று மறுக்கப்பட்டும்-ஏளனப்படுத்தப்பட்டும் வந்தனவோ... அவையெல்லாம் படிப்படியாகச் சாத்தியமாகியே வருகின்றன. அயோத்தியில் இராமருக்கான ஆலயம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, பொதுச் சிவில் சட்டம், வக்பு உரிமை மறுப்பு, மதமாற்றத் தடைச்சட்டம், இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்கத் துடிக்கும் போக்கு, மாநில உரிமைகளைப் பறித்தல் என்பனவெல்லாம் ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுதிமொழிகள். இவற்றில் பெரும்பான்மையும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சாத்தியமற்றவை எனக் கருதப்பெறும் கொள்கைகள் பல சாத்தியமாகி வருதலை நாம் காண தவறிவிடக்கூடாது. மதரீதியாகக் குடிமக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, தேர்தல் சனநாயகம் முழுமையாகத் திருடப்பட்டு, மத அடிப்படையிலான பெரும்பான்மை உருவாகும் நிலையில் பெரும்பான்மை வாதம் ஆட்சியேற்கும். பெரும்பான்மைவாதம் மத ரீதியான பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், மதச் சிறுபான்மையினர் நிலை அப்போது என்னவாகும்? தனித்த இயல்புடைய தேசிய இனங்களின் கதி என்னவாகும்? பெருமுயற்சியோடும் பெருங் கனவோடும் நம்பிக்கை தரும் வகையில் தரப்பட்ட அரசமைப்புச் சட்டமும் சனநாயகமும் என்னவாகும்?

உச்ச நீதிமன்ற நீதியரசர் மீதுசனாதனத்தை இகழ்ந்தார் என்ற பெயரில் வழக்குரைஞர் ஒருவர் செருப்பைத் தூக்கி எறிகிறார்! சனாதனமும் சனநாயகமும் இணைந்து செல்லமுடியாது என்பதே உண்மையாயிருக்க, சனநாயகம் தரும் உரிமைவழி உருவாக்கப்பட்ட நீதி பரிபாலன அமைப்பின் வழக்குரைஞர் உயர்வு பெற்ற ஒருவர், சனாதனக் கோட்பாட்டை இகழ்ந்தார் என்ற பெயரில் நீதிமன்றத் தலைமை நீதிபதியை எப்படி அவமானப்படுத்த முடியும்?

இந்து ஆங்கில நாளேட்டில் (அக்டோபர் 6) உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கேவலமான நிகழ்வொன்று நடந்துள்ளதைச் செய்தியாக அறிவித்தது. ‘கருவுற்ற முஸ்லிம் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க இந்து டாக்டர் மறுப்பு, ‘மதத்தின் அடிப்படையில் மருத்துவ மறுப்பை அனுமதித்த கொடுமை.’  இந்நிகழ்வு பற்றி அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத், “இந்நிகழ்வுகள் அடங்கிய பாகுபாடும் சமூகத்தை மதவாரியாகப் பிரித்துப் பிரிவினைவாத அரசியல் நடத்தும்போக்கும் ஆளும் பாரதிய சனதாவின் கை வந்த கலை என்கிறார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கும் இனப்படுகொலைக்கெதிரான அமைப்பின் இயக்குநர் கிரகோரி ஸ்டார்டன் அவர்கள், “உலக வரலாற்றில் இந்தியா மிகப்பெரிய இனப்படுகொலை (Genocide) நாடாக மாறும் நிலை உருவாகி வருகிறது என்கிறார். இதுபோன்ற கணிப்புகள் வெறும் கற்பனைகள் அல்ல; இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியாவில் நடந்தேறிய மதக்கலவரங்களால் ஏற்பட்ட மனித இழப்புகள் அனைத்திலும் சங்கப் பரிவாரங்கள் பெரும்பங்கு வகித்தன என்பதைப் பல விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் தந்துள்ளன.

நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண் டிய உண்மை என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு பாசிச மனப்பான்மையை (Mentality) உள்வாங்கிய ஒன்று என்பது. இவ்வமைப்பைபாசிசம் என்றே அழைப்பேன். இவ்வமைப்பின் பாதையைப் புரிந்துகொண்டோர் ஹிட்லரின் பாசிசம் ஐரோப்பாவில் என்ன கோரத்தை நிகழ்த்தியது என்பதை அறிவர். இந்திய நாடு ஹிட்லர் காட்டிய வழியைப் பின்பற்றாது என்பதை நம்புவோம் -ஜவஹர்லால் நேரு (Nehru’s India, Aditya Mukherjee, பக். 83).

பாசிசத்தை எப்போது, எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?