“கலைப் படைப்புகள் மக்களைப் பகுத்தறிவு பாதையிலிருந்து மடைமாற்றி மடையர்களாக மாற்றுகின்றன” (The Republic) என்ற பிளேட்டோவின் வலிமையான வார்த்தைகளின் வலியை தமிழ்நாடு இன்று உணர்ந்து கொண்டிருக்கின்றது. தற்சமயம் தமிழ்நாட்டின் பேசுபொருளாக இருக்கும் கரூர் சம்பவம் நமக்கு வலிகளோடு சேர்ந்து சில கசப்பான உண்மைகளையும் கற்றுத் தந்திருக்கின்றன.
‘அறிவுடையார் எல்லாமுடையார்’ (குறள்
430) என்ற புரட்சிக் கோட்பாட்டை இவ்வுலகிற்குக் கற்பித்த தமிழர்களின் பகுத்தறியும் தன்மையை எண்ணி இவ்வுலகமே இன்று எள்ளி நகையாடுகின்றது. ஏனெனில், கரூரில் ஏற்பட்ட 41 நபர்களின் இறப்புக்கு அரசியல் வட்டாரத்தில் பல காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும்,
முதன்மையான காரணம் தமிழரின் சினிமா மோகமாகும். பலரின் சினிமா மோகமும் சிலரின் அரசியல் ஆசைகளும் 41 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்ச்சங்கம், நடிகர் சங்கங்களில் மாட்டித் தவிக்கின்றது. இந்நிலை மாறவேண்டும். கரூரில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட இறப்பானது திரைக் கவர்ச்சியால் ஏற்பட்ட முதல் இழப்பல்ல; ஆனால், இதுவே இறுதி இழப்பாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின்
மக்களும் அரசியலும் இன்று திரைத்துறை வசம் கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. ஆனால், ஆரம்பத்தில் சினிமா என்பது தலைவர்களின் அரசியல் கோட்பாடுகளை எளிய மக்களிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கருவியாக இருந்தது. சினிமாவின் முந்தைய வடிவமான மேடை
நாடகங்கள் சமுதாய விழிப்புணர்வின் ஆயுதமாகக் கருதப்பட்டது. எழுத, படிக்கத் தெரியாத எளியவர்களிடத்திலும் புரட்சிகர கருத்துகள் சென்றடைவதற்கான சிறந்த வழியாக இருந்தது. பக்தியையும் அரசியலையும் புரட்சியையும் கொண்டு சேர்த்த நாடகங்கள் அத்துடன் சேர்ந்து அதில் நடிக்கும் நடிகர்களின் மீதான ஈர்ப்பையும் காலப்போக்கில் கொண்டு சேர்க்க ஆரம்பித்தது.
சினிமா
பெரும் பொருளாதார வர்த்தகமாக மாறிய பின்பு சினிமாவின் போக்கும் மாறியது. இன்றைய சினிமாவில் பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகக்
கருத்துகளைத் தவிர்த்து, கவர்ச்சிகளை அதிகமாக்கிவிட்டனர். இந்தக் கவர்ச்சிகள் கலைஞர்களின் மீதான ஈர்ப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இதை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கென இரசிகர் மன்றங்களைத் தொடங்குகிறார்கள். இதன்மூலம் சினிமாத்துறையின் வளர்ச்சியும், தனிப்பட்ட கலைஞர்களின் வருவாயும் பன்மடங்கு பெருகியது. இதன் காரணமாகவே, உடல் வருத்தி உழைக்கும் உழைப்பாளிகளின் ஊதியம் நூறுகளில் இருக்க, பாடல் வரிகளுக்கு வாயசைக்கும் நடிகர்களின் ஊதியம் பல கோடிகளில் உள்ளது.
இந்த
உழைப்புக்கு மிகுதியான ஊதியத்தைத் தக்கவைத்துக்கொள்ள திரைப்படங்களின் கதாநாயகர்கள் மேற்குறிப்பிட்டதைப்போல இரசிகர் சங்கங்கள், இசை வெளியீட்டு விழாவின் அதிரடி வசனங்கள் போன்ற பல உத்திகளை மேற்கொள்கின்றனர்.
நாளடைவில் ஒரு நடிகரின் மீதான ஈர்ப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் நபர்களின் மீதான வெறுப்புக்குக் காரணமாகின்றது. இதன் காரணமாகவே, அரசியலில் ஈடுபடும் நடிகர்களின் இரசிகர்கள், அவர்களுடைய நாயகனுக்கு எதிராக, கண்ணியமான முறையில் அரசியல் விமர்சனம் வைப்பவர்களைக் கூட மிகத் தரக்குறைவான வகையில்
சமூக ஊடகங்களில் கேலி செய்கின்றனர். திரையின் கதாநாயகர்களை, நிஜ வாழ்விலும் கதாநாயகர்களாகக் கருதுகின்றனர்.
சமூக
ஊடகங்களின் மாபெரும் வளர்ச்சி இந்நிலையை மேலும் மோசமடையச் செய்துவிட்டன. பல கோடிகளைச் சம்பளமாக
ஈட்டி, வரிகட்டாமல் ஏய்க்கும் நடிகர்களுக்காக இரசிகர்கள் சமூக ஊடகங்களில சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதன் காரணமாக, சமூகத்தின் முக்கியமான அனைத்துப் பிரச்சினைகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. சினிமாவின் வர்த்தக அரசியலின் வலையில் வீழ்ந்து கிடக்கும் இரசிகர்களும் மக்களும் தங்களின் வாழ்க்கைத் தேவையை மறந்து திரைப்
பிரபலங்களின் பட வெற்றியைப் பெரிதாகப்
பார்க்கின்றனர்.
இப்படிச்
சினிமாத்துறையே மக்களுடைய வாழ்வின் பெரும் பகுதியை அபகரித்துவிட்டதால், இரசிகர்கள் மட்டுமில்லாமல், பெரும்பாலும் மக்களும் நடிகர்களை நேரில் பார்க்கவேண்டும் என்று ஏங்குகின்றார்கள். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர்.
மறுபுறம்,
நடிகர்கள் சினிமாவின் மூலம் தங்களுக்குக் கிடைத்த பெரும் இரசிகர் கூட்டத்தையும், மக்களிடத்தில் உள்ள திரை வெளிச்சத்தையும் கருத்தில் கொண்டு நேரடியாகப் பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தங்களுடைய இரசிகர் சங்கத்தைக் கட்சியாக மாற்றுகின்றனர். இரசிகர்
சங்கத்தைக் கட்சியாக மாற்றும் நடிகர்கள், தங்களுடைய இரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றுவதில்லை; அவர்களை அரசியல்படுத்துவதில்லை; அவர்களை இரசிகர்களாக ஒரு மாய உலகில் தொடர்ந்து வைத்திருக்கின்றனர். இதை அறியா இரசிகர்கள் தங்கள் தலைவர் அவருடைய வாழ்வையே தங்களுக்காகத் தியாகம் செய்துவிட்டு வந்துவிட்டதாக நினைத்து, தங்கள் தலைவரைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.
இந்த
நடிகர்களுக்குத் தெளிவான கொள்கை என்று எதுவும் இருப்பதில்லை. தங்கள் மீதான கவர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள திரைப்படங்களில் எப்படி வசனங்களால் தங்கள் இரசிகர்களைத் திருப்திப்படுத்துகின்றார்களோ
அதேபோல் அரசியல் மேடைகளிலும் தன்னைத் தவிர அனைத்துத் தலைவர்களையும் திறனற்றவர்களாகவும்
நேர்மையற்றவர்களாகவும்
உருவகப்படுத்துகின்றார்கள்.
குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் மக்களிடையே தோன்றி, நடிகரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைச் செயற்கையாகத் தூண்டி மக்களை அரசியல் சதுரங்கத்தின் காய்களைப்போல் பயன்படுத்துகின்றார்கள். தரம் குறைந்த வசனங்களைப் பயன்படுத்தி மக்கள்
முன்னிலையில் கொள்கை முனைப்புடன் செயல்படும் பிற தலைவர்களின் அரசியல் அனுபவத்தைக் கேலிக்கூத்தாக்குகின்றார்கள். இதனால்
கொள்கை சார்ந்த அரசியலை மென்மேலும் பல வீனமடையச் செய்கின்றனர்.
கொள்கை என்பது வளர்ச்சியை நோக்கி மட்டுமல்ல, அது முழு மனிதச் சுதந்திரத்திற்கானதாக இருக்க வேண்டுமென்று பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் கூறுகின்றார். நாம் செயல்படுத்தும் கொள்கைகளால்தான் நம் உயர்வும் தாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறுகின்றார். ஒரு கட்சி கொள்கையை மையமாக வைத்துச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், வியாபார அரசியல் குறைந்து மக்கள் நலன் மீதான அக்கறை கொண்ட அரசு அமையும்.
கொள்கையற்ற
அரசியல் செய்யும் நடிகர்கள் மக்களின் பிரச்சினைகளான பொருளாதாரச் சிக்கல்கள், ஊழலின் பாரம், வேலையில்லாத் திண்டாட்டம், தரமற்றக் கல்வி போன்றவைகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர். இவற்றைத் தங்கள் பேச்சுகளில் பெயரளவிற்குச் சேர்த்துக்கொண்டு தங்களைக் கதாநாயகர்களாக முன்னிலைப்படுத்திக் குறுக்கு வழிகளில் அரியணை ஏற முயற்சிக்கின்றனர்.
பொருளாதாரத்
தளமே ஒரு சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு. அந்த அடிப்படைக் கட்டமைப்பின் மீதே கலை, பொழுதுபோக்கு, மதம் என்ற பிற தளங்கள் அமைய வேண்டும் என்று காரல் மார்க்ஸ் கூறுகின்றார். ஆனால், மக்களின் பொருளாதார வாழ்வானது சினிமா மோகத்தை மையமாக வைத்துக் கட்டியெழுப்புவது என்பது மிகவும் பேராபத்தானது. மக்களின் வலிகளை உணரச் செய்து தனிமனித ஒழுக்கத்தையும் அரசின் படிநிலைகளையும் சரிவரப் பொருத்தினால் மட்டுமே இங்கு வலிமையான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால், நடிகர்கள் மற்றும் பெரும்பாலும் அரசியல்வாதிகள் இதைச் செய்வதில்லை; ஏனெனில், மக்களை விழிப்படையாமல் வைத்துக்கொள்வதே அவர்களுடைய முதன்மையான பணியாகும். முதலில், மக்கள் அனைவரும் நடிகர்களைத் தங்களைப் போன்ற சாதாரண மனிதர்களாகக் கருதவேண்டும். அதற்கு மதிப்பெண் அடிப்படையிலான கல்வி மட்டும் போதுமானதல்ல; பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டும் தலைவர்களின் சிந்தனைகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும். தேர்தல் அரசியலில் ஈடுபடாத பொதுநலக்கட்சிகள் இன்னும் அதிகமாகத் தோன்றி, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சுய பகுத்தறிவுச் சிந்தனைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும்.
இங்குப்
புரட்சியென்பது நடிகர்களிடமிருந்தோ, தலைவர்களிடமிருந்தோ பிறக்கப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் ஊழலால் சுரண்டப்படுவதில்லை, வீதிகளில் உறங்கியதில்லை, ஊதியத்தின் பாதியை வரியாகக் கட்டியதில்லை. இவை அத்தனையையும் அனுபவிப்பவர்கள் மக்களே. எனவே, புரட்சி என்பது அவர்களிடமிருந்துதான் பிறக்கவேண்டும்.
நடிகர்கள்
மதம், இன மற்றும் சாதிவெறி
கொண்ட கும்பல்களின்மீது நாம் பெரிதும் நம்முடைய அக்கறையைச் செலுத்துவதால் மக்கள் அரசியல் செய்யும் தலைவர்கள் காணாமல் போகின்றார்கள். அவர்களை மக்கள் மிளரச் செய்தால் மட்டுமே தமிழ்நாடு மிளிரும். இல்லையேல்...?