உண்மையுள்ள இடத்தில்தான் நீதி இருக்கும்; நீதி இருக்கும் இடத்தில்தான் வெற்றி இருக்கும். உண்மையும் நீதியும் நெருங்கியத் தொடர்பு உடையவை. உண்மை உன்னதமானது; உண்மையைவிடச் சிறந்தது உலகில் எதுவுமில்லை. உண்மை எப்போதும் உச்சம் கொண்டது. உண்மை இல்லாத இடத்தில் உயர்ந்த அறமும் இருப்பதில்லை; நீதியும் உலாவருவதுமில்லை. உண்மையும் நீதியும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும்.
“உண்மை என்பது பின் தொடரப்படுவது அல்ல; கண்டறியப்படுவதும் அல்ல; புத்தகங்களைப் புரட்டியோ, அனுபவங்களைத் திரட்டியோ அறியக்கூடியதும் அல்ல; மாறாக, அது உண்மையாகவே என்றென்றும் நீடித்து நிற்பவை” என்கிறார் தத்துவ ஞானி கே. கிருஷ்ணமூர்த்தி. அந்த உண்மைதான் இறைமையோடு அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த உண்மையை எடுத்துக்கூறுவதாலும் நிலைநாட்டுவதாலும் நீதிமன்ற நீதிபதிகள் உண்மையைச் சார்ந்தவர்களாக, நேர்மையாளர்கள் (noble man - my lord) என அழைக்கப்படுகிறார்கள்.
இந்திய
மக்களாட்சி அரசியல் அமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் சட்டமன்றங்கள் (The Legislature),
நிர்வாகத்துறை (The Executive),
நீதித்துறை (The Judiciary)
மற்றும் ஊடகத்துறை (The Media) எனும் வரிசையில் மிகவும் குறிப்பிடத்தக்கது நீதித்துறை. இந்திய அரசியலமைப்பு நீதித்துறையைச் சட்டத்தின் பாதுகாவலராகச் செயல்பட அதிகாரம் அளிக்கிறது. அதுவே இந்திய அரசியலமைப்பு தரும் மக்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது; அவற்றை உறுதிசெய்கிறது.
மற்ற
துறைகளிலிருந்து விலகிநின்று தனித்துவமான அதிகாரம் கொண்ட அமைப்பாக நீதித்துறை விளங்குகிறது. இந்த நீதித்துறையின் முழுச் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை மற்றும் பிரிக்க முடியாத தன்மையாகும். சட்டச் செயல்பாடுகளில் நீதித்துறை நடுவராகச் செயல்படுவதுடன், அரசியலமைப்பில் உள்ள சிக்கல்களை மறுஆய்வு செய்யும் தளமாகவும், நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு வழங்கும் வரம்புகளை மீறுகிறதா? எனக் கண்காணிப்பதையும் அடிப்படைச் செயல்பாடாகக் கொண்டிருக்கிறது. அரசின் பிற துறைகள் நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிட முடியாது. இன்று அதுவும் கேள்விக்குறியாக இருப்பது வேறு கதை.
அரசின்
எந்தவொரு துறையும் நிறுவனமும், நாட்டின் எந்தவொரு குடிமகனின் அடிப்படை உரிமையும் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்கிறது. இதுவே சட்டத்தை விளக்கி, சர்ச்சைகளைத் தீர்த்து, அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி வழங்கும் அதிகார அமைப்பாகும். சனநாயகத்தின் காவல் தெய்வமாகவும், அரசியலமைப் பின் பாதுகாவலராகவும் கருதப்படும் இந்த நீதித்துறை அண்மைக் காலங்களில் தனது மாண்பினை இழந்து வருவது மிகவும் வேதனையளிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் பராமரிக்கப்படுவதையும் பாதுகாப்பதையும் உறுதி செய்யும் பல விதிகளை அரசியலமைப்பு
வழங்கியபோதும் அதன் சுதந்திரமும் அதிகாரமும் அண்மைக் காலங்களில் குறிப்பாக, பா.ச.க.
ஆட்சியில் கேள்விக்குறியாகிவருவது வருந்தத் தக்கது.
குறிப்பாக,
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை
நோக்கி வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீச முயன்ற நிகழ்வு, ஒட்டுமொத்த நீதித்துறையையே அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தச் செயலுக்கான நியாயத்தைக் குறிப்பிடும் அவர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது”
என்ற முழக்கத்தை எழுப்பியிருப்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது.
உச்ச
நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான பி.ஆர். கவாய்
மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நீதிமன்ற அறை எண் ஒன்றில் வழக்குரைஞர்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்தபோது உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றிருப்பது நீதிமன்றத்தின் மாண்பினைக் கேள்விக்குறியாக்குகிறது. “இதுபோன்ற நிகழ்வுகளால் கவனம் சிதற வேண்டாம்; இது எங்களைப் பாதிக்கவில்லை; எங்களின் கவனமும் சிதறவில்லை” என்று
எந்தவிதத் தயக்கமும் இன்றி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
குறிப்பிட்டாலும் இந்த இழிசெயலின் குற்றத்தையும் இதன் பின்னணியில் இருக்கும் சனாதன நோக்கத்தையும் நாம் எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.
“உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இத்தாக்குதல் ஒவ்வோர் இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது; இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது; இத்தகைய சூழலைத் தலைமை நீதிபதி அமைதியாகக் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது” என்று
ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி இதுவரை நடைபெறாத வெட்கக்கேடான நிகழ்வு; இது நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான தாக்குதலாகும். நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறைப் பதவியை அடைந்துள்ள நபரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியாகும்; கடந்த 10 ஆண்டுகளில் நமது சமூகத்தில் வெறுப்புணர்வு, மத வெறி ஆகியவை
எந்த அளவு பரவியுள்ளது என்பதை இந்தச் செயல் காட்டுகிறது” என்று
கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவ்வாறே,
“தலைமை நீதிபதி பி.ஆர். கவாயைத்
தாக்க முயற்சித்தது, இந்திய அரசியலமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்; தலைமை நீதிபதியுடன் தேசம் நிற்க வேண்டும்”
எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்
வெளியிட்டுள்ள செய்தியில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் வெட்கக்கேடானது; இது நமது சனநாயகத்தின் மீது உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது கடுமையான கண்ட னத்திற்குரியது; தலைமை நீதிபதி கருணை, அமைதி, பெருந்தன்மையுடன் இதற்குப் பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது; ஆனால், இந்த நிகழ்வை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; நீதிபதியைத் தாக்க முயன்றவர் தனது செயலுக்கான காரணத்தை வெளியிட்டிருப்பது நமது சமூகத்தில் அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது; நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் மீது மரியாதை ஏற்படுத்தும் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்”
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தகைய
விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்த போதிலும் இச்செயலில் ஈடுபட்ட வழக்குரைஞர் சிறிதும் மனவருத்தம் தெரிவிக்காது, “கடவுள் சொல்லித்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாயைத் தாக்க முயன்றேன்; நான் எந்தத் தவறும் செய்யவில்லை; எனக்கு எந்த வருத்தமும் இல்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன்”
என்று ஆணவத்துடன் பேசுவது இந்தக் குரலுக்கான பின்புலத்தையும் நீதித்துறையில் இச்சமூகத்திற்கு இருக்கும் செல்வாக்கையும் சற்றே எண்ணிப் பார்க்கச் செய்கிறது.
குற்றங்களுக்கு
நீதிபதிகளிடமிருந்து தண்டனை பெற்றுத்தர வழக்காடும் வழக்குரைஞரே, நீதிபதிக்கு எதிராகச் செயல்பட்ட பெருங்குற்றத்தில் சிக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இது வேலியே பயிரை மேய்ந்த கதையாகத்தான் இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மேன்மையும், நீதித்துறையின் மாண்பும் அண்மைக்காலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வருந்தத்தக்கதே!
இத்தகைய
சூழலில் புரட்சிக் கவிஞன் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன...
‘இனியொரு
விதி செய்வோம் -அதை
எந்த நாளும்
காப்போம்!’
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்