news-details
ஆன்மிகம்
‘சிற்பமாகச் செதுக்கப்பட்டேன்...’ (இந்த வார ஆளுமை – (03) பேராளுமைகள் பேசும்பகுதி)

தேனி மாவட்டத்திலுள்ள தே. சிந்தலைச்சேரி என்னும் கிராமத்தில் 09-09-1948-இல் பிறந்தேன். என் அப்பா திரு. சவரிமுத்து பள்ளி ஆசிரியராகவும், அஞ்சலக மேலதிகாரியுமாக இருந்தார். என் அம்மா திருமதி. சலேத்தம்மாள் ஓர் இல்லத்தரசி. எனக்கு இரண்டு அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. என் குடும்பத்தில்தான் நான் இன்றுவரை பின்பற்றும் நல்ல மதிப்பீடுகளையும் நல்ல பண்புகளையும் கற்றுக்கொண்டேன்.

என்னைச் செதுக்கிய சிற்பிகள்

எனது வாழ்க்கை உயர்ந்த குறிக்கோளுடன் அமைய உதவிய மூன்று முக்கியமானவர்களை இங்குப் பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

 1. அருள்தந்தை மாத்யூ டி முட்டம் சே.. பல ஆண்டுகள் சிந்தலைச்சேரியில் பங்குத் தந்தையாகப் பணியாற்றியவர். நான் இயேசு சபைக் குருவாக வேண்டும் என்ற கனவுக்கு வடிவம் கொடுத்தவர் தந்தை முட்டம் அவர்கள்தான்.

2. திருச்சி புனித வளனார் கல்லூரியின் அன்றைய தாவரவியல் துறையின் தலைவர் அருள்தந்தை கே.எம். மாத்யூ, சே.. அவர்கள். நான் தாவரவியல் பாடத்தை விரும்பிப் படித்ததற்கும், அதில் பல விருதுகள், பரிசுகள், புதிய கண்டுபிடிப்புகள் என உலக அளவில் புகழ் பெற்றிருப்பதற்கும் அன்று தந்தை கே.எம். மாத்யூ அவர்களிடம் நான் கற்றப் பாடங்களே காரணம்.

3. எனது இன்றைய ஆய்வு வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட மற்றொரு மறக்க முடியாத மனிதர் பேராசிரியர் பாபு அவர்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக அமைந்தவர்தான் முனைவர் பாபு. உடன் பணியாற்றுபவர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் உற்ற நண்பரைப்போல விளங்கியவர். எனது முனைவர் பட்ட ஆய்வு மிகச்சிறப்பாக அமையக் காரணம் பேராசிரியர் பாபு அவர்கள் எனக்களித்த அளவற்ற ஆதரவு, வழங்கிய பங்களிப்பு, என்பால் காட்டிய அன்பு, அக்கறை மற்றும் நட்புறவு ஆகியவைதாம். அவரிடம் நான் கற்றுக் கொண்ட யுக்திகள் எண்ணற்ற மாணவர்களை ஆய்வில் ஈடுபடுத்த உதவின.

என்னை வழிநடத்திய கனவு

சிறுபிள்ளையாக இருக்கும்பொழுதே தினமும் காலை 5.30 மணி திருப்பலியில் தவறாது கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அதேபோன்று, மாலை நேர செப வழிபாட்டிலும் தவறாது கலந்துகொள்வேன். குருத்துவ வாழ்வில் இணைந்து இறைவனின் அருள்பெற்று ஏழை, எளிய மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்ற எண்ணம் எனது எட்டாவது வயதிலேயே எனக்கு ஏற்பட்டது.

அந்த வயதில் எனக்கு ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவு இரண்டு நாள்கள் தொடர்ந்தது. முதல் நாள் கனவு கீழ்வருமாறு இருந்தது. நான் எனது அப்பாவோடு ஊரில் உள்ள நடுத்தெருவில் நடந்து சென்றேன். அப்படி நடந்து சென்ற பொழுது எனது அருகில் அன்னை கன்னி மரியா திடீரென வந்து கூடச் சேர்ந்து நடந்தார்கள். பின்பு தெருவின் முடிவை எட்டிய பொழுது உலக உருண்டை எனக்கு முன் தென்பட்டது. இத்தோடு முதல் நாள் கனவு முடிந்துவிட்டது.

பின்பு அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாள் கனவு தொடர்ந்தது. நானும், அன்னை மரியாவும் அந்த உலகை உருண்டை மேல் நடந்து செல்கிறோம். என் அப்பா என்னோடு வரவில்லை. உச்சியை அடைந்தபொழுது சிலுவையில் அறையுண்ட இயேசு காட்சி அளிக்கிறார். உடனே திரும்பிப் பார்த்தேன், அன்னை மரியாவைக் காணவில்லை. நானும் இயேசுவும் மட்டும்தான் அங்கிருந்தோம்.

அன்றிலிருந்து இறைவன் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கின்றார் என்று அதனைத் தேடிக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். குறிப்பாக, இறைவனோடு செபம் வழியாகப் பேசுவது எனது அன்றாடப் பழக்கமாகிவிட்டது.

அன்றாடம் நினைவுகூரும் இறைவார்த்தைகள்

உன் செல்வம் எங்குள்ளதோ, அங்கேதான் உன் இதயமும் இருக்கும். இந்த உலகில் நீ சேர்த்து வைப்பதைப் பூச்சிகள் வந்து அழித்துவிடும். ஆனால், விண்ணுலகில் நீ சேர்த்து வைப்பதை எவராலும் அழிக்க முடியாதுஎன்ற இறைவார்த்தைகள் நான் எட்டு வயது சிறுவனாக இருந்தபொழுதே எனது மனத்தில் ஆழப் பதிந்துவிட்டன. இவையே என்னை இன்றும் வழிநடத்துகின்றன.

அதேபோன்றுவீண், முற்றும் வீண்; எல்லாமே வீண்-இறைவனை நேசிப்பதையும் அவருக்குப் பணிவிடை செய்வதையும் தவிர...” என்ற இறைவார்த்தைகளும் இளம் வயதிலேயே என் உள்ளத்தில் வேரூன்றி எனது வாழ்க்கைப் பாதையைச் சரியான விதத்தில் அமைத்துக்கொள்ள பெரிதும் உதவின. இன்றும் இவையே எனக்கு ஒளியாய் இருக்கின்றன.