news-details
ஆன்மிகம்
துறவு அவைகளின் முன்னோடித்தன்மை! (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 08)

திரு அவையின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூய ஆவியார் அதற்குத் தருகின்ற அருங்கொடைகள் மிகப்பல. அவற்றுள் தனிச் சிறப்பு வாய்ந்தது துறவு வாழ்வுக்கான அழைப்பு. தனது தனியாள் சுதந்திரத்தையும் சொகுசுகளையும் திருமண வாழ்வையும் விட்டுவிட்டு பணிவு, எளிமை, மணத் துறவு எனும் உறுதியேற்புகளைச் செய்து இறையாட்சிப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்து, சகோதரக் குழுமங்களாக வாழ்வோரே கிறித்தவத் துறவியர்.

இந்தத் துறவு வாழ்வு எனும் அருங்கொடையினால் திரு அவை அடைந்துள்ள வளர்ச்சிகள் மிகப்பல. அதன் வழியாக தூய ஆவியார் ஒவ்வொரு காலத்திலும் திரு அவையைப் புதுப்பித்துள்ளார். அதன் மாற்றுப் பண்பாட்டு வாழ்க்கை முறை வழியாக உலகப்போக்கில் செல்ல திரு அவைக்கு எப்போதும் ஏற்படும் சோதனையை எதிர்த்து நிற்கும் ஆற்றலைத் தருகின்றார்.

தங்கள் தனித்தன்மை வாய்ந்த இறைவேண்டல் முறைகள், மக்கள்பணி என்பனவற்றின் வழியாகப் பல்வேறு துறவு அவைகள் கிறித்தவச் சீடத்துவத்தின் அழகையும் புனிதத்தையும் வெளிப்படுத்துகின்றன. பல வேளைகளில் முக்கிய வரலாற்று மாற் றங்களையும், அவற்றின் வழியாக தூய ஆவியார் தரும் தூண்டுதல்களையும் முதலில் இனம்கண்டவர்கள் துறவியரே. காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப திரு அவை மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்பவர்களும், முன்னின்று சிறப்பாகச் செய்து வருபவர்களும் அவர்களே.

துறவு அவைகள் இறைவாக்கு உரைக்கும் தங்களது குரலால், அவை திரு அவையையும் சமூகத்தையும் நோக்கிக் கேள்விகள் எழுப்ப அழைக்கப்பட்டுள்ளன (இஅ 65).

இறைவாக்குத் தன்மையுடைய அவர்களது குரலும் செயல்பாடுகளும் திரு அவைக்கு இன்றும் மிகவும் அவசியமே. சிறப்பாக, பல நூற்றாண்டுகளாகத் தங்கள் குழுமங்களில் அவர்கள் கடைப்பிடித்துள்ள கூட்டியக்க வாழ்வு மற்றும் தெளிதேர்வு நடைமுறைகளிலிருந்து திரு அவையும் கூட்டொருங்கியக்கப் பாதையில் நடக்கப் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இதற்கு எடுத்துகாட்டுகளாக தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவும், அமைப்புகளைப் புதுப்பிக்கவும் தங்கள் பணிகளிலும் ஏழைகளுடனான உடனிருப்பிலும் புது முறைகளைச் செயல்படுத்த தங்கள் மாநில மற்றும் பொதுப்பேரவைகளில் அவர்கள் செய்யும் தெளிதேர்வுமுறை, தனி உறுப்பினர்களுடைய திறமைகளையும், தங்கள் துறவு அவைக்குப் பொதுவான மறைத்தூதுப் பணியையும் ஒத்திசைவாக்கல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும், அவற்றுள் சிலவற்றில் காணப்படும் நலமான உரையாடலுக்கு வாய்ப்பளிக்காத ஆதிக்க அதிகார நடைமுறைகள் கவனமாகத் தவிர்க்கப்படவேண்டும்.

செயல்படுத்தச் சில பரிந்துரைகள்

1. ஆயருக்கும் துறவியருக்கும் இடையிலான உறவு பற்றிய ஆசிரிய ஏட்டைத் (Mutual relationship 1978) திருத்தி எழுதுவதற்கான காலம் கனிந்துள்ளது. அத்தகைய திருத்தம் அதனுடன் தொடர்புடைய அனைவருடனும் கலந்தாய்வு செய்து, கூட்டொருங்கியக்க முறையில் செய்யப்பட வேண்டும்.

2. ஆயர்கள் பேரவைகளுக்கும் துறவு அவைகள் மற்றும் திருத்தூது வாழ்வு கழகங்களின் பேரவைகளுக்கும் இடையே சந்திப்பையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

3. அருள்பணித் தலைவர்களும் துறவு அவை மற்றும் திருத்தூதுக் கழகங்களின் பொறுப்பாளர்களும் பொதுவான மறைத்தூதுப் பணிக்கெனத் தங்கள் வளங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் தங்களுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.