கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அடிமாலிக்கு அருகில் உள்ள கிராமப் பகுதியில் வசித்து வருபவர் மரியகுட்டி. இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். கணவர் மற்றும் மகன் என ஆண் துணை இல்லாததால் கைம்பெண் உதவித்தொகை இவருக்குக் கிடைத்தது. 45 ஆண்டுகளாகக் கிடைத்து வந்த ஓய்வூதியம் கடந்த ஐந்து மாதங்களாக இவருக்குக் கிடைக்கவில்லை. தனது வாழ்வாதாரத்திற்கு உதவியாகக் கிடைத்த உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதால், மண்சட்டியுடன் தெருவில் இறங்கி ‘பிச்சை சட்டி’ ஏந்திப் போராட்டம் நடத்தினார். ‘ஏழைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்’ என்ற அட்டையுடன் பிச்சை சட்டியை ஏந்தி தெருவில் இறங்கிய போது மக்கள் ஆதரவு கிடைத்தது. போராட்டம் அரசின் காதுகளுக்கு எட்டியது. தனிமனிதராகப் போராடி வெற்றியும் கண்டார்.
பொதுக்காலத்தின்
29-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நீதிக்கான போராட்டத்தில்
இறைநம்பிக்கையுடன் தளர்வின்றிப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
இன்றைய
முதல் வாசகத்தில் இஸ்ரயேலர்கள் அமலேக்கியர்களுக்கு எதிரான போரில் வெற்றிகொள்வதைக் காண்கிறோம்.
மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தவர்கள்
அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேலர்களுக்கு
எதிராகப் போர் தொடுக்க வருகிறார்கள் என்ற செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து,
அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச்
செய்தது. இஸ்ரயேல் மக்களை அமலேக்கியர் இரபிதிம் என்னுமிடத்தில் எதிர்த்துப் போரிட வந்தபோது,
குன்றின்மேல் நின்று மோசே கரங்களை உயர்த்திச் செபித்தபோதெல்லாம் வெற்றி கண்டனர். மோசே
தளர்ந்து தன் கைகளைத் தளரவிட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றி அடைந்தனர். ஆனாலும், தங்களின்
நீதிக்கான போராட்டத்தில் இறைவனின் துணையோடு மோசே வெற்றி பெறுகிறார்.
இன்றைய
நற்செய்தியில் தனது உரிமைக்கான போராட்டத்தில் ஒரு கைம்பெண் எப்படி வெற்றி பெறுகிறார்
என்பதை லூக்கா பதிவுசெய்கிறார். இந்த உவமையைப்
புரிந்துகொள்வதற்கு முன்னர் முதலில் இஸ்ரயேல் மக்கள் சமுதாயத்தில் வாழ்ந்த கைம்பெண்களின்
நிலையைப் புரிந்துகொள்வோம்.
கைம்பெண்களைப்
பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.
கைம்பெண்கள் இழிவாக நடத்தப்பட்டனர்; அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. ஆண்களை மையப்படுத்தி
அமைந்திருந்த இஸ்ரயேல் சமுதாயத்தில், கணவனை இழந்தக் கைம்பெண்கள் நிலம், சொத்து ஆகிய
பிற உரிமைகளையும் இழந்தனர். சட்டப்படி உரிமைகளற்ற இவர்கள், கணவனின் குடும்பத்தினர்
காட்டக்கூடிய கருணையை நம்பியே வாழ வேண்டியிருந்தது. அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது.
சமுதாயத்தில் சக்தியற்றவர்கள் என்று தெரிந்தால், இந்தச் சமூகம் அவர்களைப் பல வழிகளிலும்
பயன்படுத்தும், துன்புறுத்தும். கணவன் இன்றி, குழந்தைகளின் துணையும் இன்றி உள்ள கைம்பெண்கள்
சந்திக்கும் துயரங்கள் மனித வரலாற்றில் நீண்டதொரு தொடர்கதை. இறைவன் ஏழைகள், அந்நியர்,
அனாதைகள், கைம்பெண்கள் ஆகிய வலுவிழந்த மக்கள் சார்பில் இருப்பவர் என்ற கருத்துதான்
இன்னமும் இவர்களை வாழவைக்கிறது (இச 10:18; 24:17; 27:19; விப 22:22; மலா 3:5).
இன்றைய
நற்செய்தியில் வரும் கைம்பெண் நம்பிக்கையால் உந்தப்பட்டு, கடவுள் எப்படியும் தன் சார்பில்
வருவார், தனக்கு நீதி வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் போராடுகிறார். இயேசுவின் காலத்தில்
இரண்டு நீதிமன்றங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன: 1. தோரா நீதிமன்றம், 2. அரசு
நீதி மன்றம். தோரா நீதிமன்றம் யூதச் சட்டமாகிய தோரா (ஐந்நூல்கள்) அடிப்படையிலும் (மிஷ்னா
சன் கெட்ரின் 1:6). அரசு நீதிமன்றம் அரசு சட்டத்திற்கேற்பவும் நீதி வழங்கியது. உவமையில்
கூறப்பட்டுள்ள கைம்பெண் தோரா நீதிமன்றத்திற்கு வந்து வழக்காடுகிறார். “என் எதிரியைத்
தண்டித்து எனக்கு நீதி வழங்கும்” (லூக் 18:3) என்பதே நடுவரின்முன் இக்கைம்பெண்
வைத்த வேண்டுதல். ஆனால், நீதி வழங்கவேண்டிய நடுவரோ வழக்கை இழுத்தடிக்கிறார். ஆனாலும்,
தனக்கு ‘நீதி வேண்டும்’ என்பதில் தெளிவாய் இக்கைம்பெண் நீதியைப்
பெற்றிட முன்னெடுத்த செயல்பாடுகள் நம்மை வியப்படையச் செய்கின்றன.
முதலில்,
ஒரு பெண் - குழந்தை நிலையில் தந்தைக்கும், மனைவி - என்ற நிலையில் கணவனுக்கும், முதுமை
நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில்,
இந்தக் கைம்பெண் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் நில்லாது தனியாக நின்று செயல்படுகிறார்.
ஒரு பெண் தனித்து நின்று போராடுவதே வெற்றிதான்.
இரண்டாவது,
நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பவர்கள், நேரடியாகத் தங்கள் வழக்கை வாதாடவேண்டும். அவர்கள்
சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் கிடையாது. வழக்கிற்குச் சாதகமாகவோ அல்லது அதற்கு எதிராகவோ
ஓரிருவர் சாட்சி சொல்லலாம். இங்கும் ஒரு சிறு பின்னடைவு பெண்களுக்கு உண்டு. பெண்கள்
பொது இடங்களில் சாட்சி சொல்வது மிக மிக அரிது. நீதிமன்றங்கள் என்பவை ஆண் செயல்பாட்டிடம்.
எனவே, பெண்கள் சாட்சி கூறினாலும், அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் ஆண்களின் விருப்பத்தைப்
பொறுத்தது. இத்தகைய சூழ்நிலையிலும் இக்கைம்பெண் தனியாகவே நீதிமன்றம் சென்று தானே வழக்காடியது
ஆணாதிக்கச் சமூக அமைப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
மூன்றாவதாக,
நடுவர் இக்கைம்பெண்ணின் வழக்கிற்குச் செவிசாய்க்கவில்லை (8:4). எனவே, இந்தக் கைம்பெண்
தன் வழக்கில் நீதி வழங்கவில்லையே என்று தளர்வடையவில்லை; மனமுடைந்து அமைதியாகிவிடவில்லை;
சோர்வுற்று வழக்கைக் கைவிட்டுவிடவுமில்லை; நம்பிக்கையிழந்து நொந்துகொள்ளவுமில்லை. மாறாக,
போராட்டப் பாதையில் இறங்குகிறார். ‘நீதி வேண்டும்’ எனத்
தொடர்ந்து குரல் எழுப்புகிறார். இதுவரை கைம்பெண்ணின் பிரச்சினையாக இருந்த இந்த வழக்கு
ஒரு பொதுப்பிரச்சினையாக மாறுகிறது. பலமுறை நீதிமன்றம் (4:5) சென்று தனக்கு நீதி வேண்டும்
என்று தொடர்ந்து குரல் கொடுத்ததால், தன் வழக்கை இனியும் தள்ளிப்போட முடியாது என்ற சூழலைக்
கைம்பெண் உருவாக்குகிறார். இனியும் இவ்வழக்கைத் தள்ளிப்போட்டால் நடுவர் தோராவுக்கு
எதிராகச் செயல்படுபவர் என்ற கண்டனக் குரலுக்கு ஆளாகிவிடுவார். அதற்கு அந்த நடுவர் தயாராக
இல்லை; எனவே, அக்கைம்பெண்ணுக்கு நீதி வழங்குகிறார். கைம்பெண் தன்னுடைய தொடர் போராட்டத்தில்
வெற்றியும் பெறுகிறார்.
இந்த
உவமை வழியாக இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? 1) இந்த உவமையில் இயேசு சுட்டிக்காட்டும்
கைம்பெண் ஒரு சாதாரணமான பெண் அல்ல; அவர் ஓர் இறையாட்சிப் போராளி எனலாம். இன்று இறையாட்சிப்
பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இந்தக் கைம்பெண்
இரந்து மன்றாடி, நடுவரின் காலில் விழுந்து நீதியைப் பெறவில்லை; அவர் யாரிடமும் கெஞ்சிக்
கூத்தாடவில்லை; மாறாக, அவர் போராடினார். நீதிக்காகப் போராடினார். போராடி நீதியை வென்றெடுத்தார்.
எனவே, சமூகத்தின் அநீதச் சக்தியை எதிர்த்து நிற்பது இறையாட்சியின் முக்கியச் செயல்பாடு
என்பதை இக்கைம்பெண் நமக்கு உணர்த்துகிறார்.
2)
“மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும்”
(லூக் 18:1) என்பதற்கு உருவகமாக இயேசு கூறிய உவமையில் இறைவேண்டல் என்பது வெறுமனே புகழ்ச்சியும்
நன்றியும் வேண்டலும் மட்டுமல்ல; அது ஒரு நம்பிக்கை போராட்டம் என்பதை உணர்கிறோம். திருத்தந்தை
பிரான்சிஸ் 2021-ஆம் ஆண்டு இறைவேண்டல் பற்றிய புதன் மறைக்கல்வி உரையில் “ஊக்கமின்மை,
கவலை, ஏமாற்றம் போன்ற மனித அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றபோது, இறைவேண்டல் என்பது
எளிதானதன்று; மாறாக, அது ஓர் அகப் போராட்டம்” என்கிறார்
(12.05.2021). எனவே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுவது போல, அநீத அமைப்புகளுக்கு
முன் தலை வணங்காது கண்டித்துப் பேசுவதும் கடிந்துகொள்வதும் இறைவார்த்தையை அறிவிப்பதும்
இறைவேண்டல்தான் (2 திமொ 4:2).
3)
நிறைவாக, ஏழைகள் நசுக்கப்படுகின்ற போது, “ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு
நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்” (திபா 10:1) என்ற எண்ணங்கள் தோன்றலாம்.
“அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல்
இருப்பாரோ? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?” (லூக் 18:7) என்ற இறைவார்த்தையில்
நம்பிக்கைகொண்டு தொடர்ந்து செபிக்கவேண்டும். இன்னல்கள், இடைஞ்சல்கள் இடையிலும் ‘படைகளின்
ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்’ (2சாமு 5:10) என்ற நம்பிக்கையே நம்
அழுத்தமான இறைவேண்டல்.