news-details
தலையங்கம்
தற்சார்பு தேசமா? தடுமாறுகிறதே தொழில் வளம்!

ஒன்றிய பா... அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் வெறிச்சோடிக் கிடந்த இந்தியக் குடிகளின் வீதிகள், இன்று வியப்பில் ஆழ்ந்து கிடக்கின்றன.

கும்பி (வயிறு) எரிந்த போதும் குடல் கருகிய போதும், கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, இன்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பேசுகிறது. இந்தச் சீர்திருத்தம், “நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் ஊட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி முதலீடுகளை மேலும் ஈர்க்கும்என்று கணித்திருக்கிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி. இந்த உண்மையைக் கண்டறிய அவருக்கு 12 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது.

செல்லும் இடமெங்கும் தமிழ் இலக்கிய மேற்கோள்களைச் சுட்டிக்காட்டும் மோடி ஜி, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்தபோதும் மறக்காமல் ஒளவையாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். ஆனால், பொருள் உணர்ந்து கூறினாரா? என்பதுதான் பெரும் கேள்விக்குறி.

வரப்புயர நீர் உயரும்;

நீர் உயர நெல் உயரும்;

நெல் உயர குடி உயரும்;

குடி உயர கோல் உயரும்;

கோல் உயர கோன் உயர்வான்!”

என்னும் வரிகளை மேடை முழக்கமாகக் கூறி வந்தாரே தவிர, மக்கள் தங்கள் வாழ்வில் காண வாய்ப்புத் தரவே இல்லை.

நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர, பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்த ஜி.எஸ்.டி-யை அறிமுகம் செய்தது பா... அரசு. கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் சிறு-குறு தொழில்கள் மிகவும் நசுக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்வியல் தேவையின் பணமதிப்பு உயர்ந்து, குடும்பங்களின் ஆண்டு வருமானம் சிதைந்து, ஏழ்மையும் வறுமையும் முற்றாக அகலாத மண்ணாக மாறிப்போன இந்த நாட்டில், இன்று ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறார். ஒட்டகத்தை விட்டுவிட்டுக் கொசுவை வடிகட்டிய இவர், பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குமாட்டின் தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதையாகிப்போனார்.

பண மதிப்பிழப்பு ஒரு பக்கம் வாழ்வைப் பந்தாடுகின்ற போது, ஒன்றிய பா... அரசு, நாட்டில் 5%, 12%, 18%, 28% என நான்கு விகித ஜி.எஸ்.டி. முறையைக் கொண்டு வந்தது. வறுமைக்கோடு என்பது வறுமைக் காடாகிப் போனது. முள்செடியில் விழுந்த விதையாகத்தான் முண்டி முளைத்த யாவரும் நெருக்கப்பட்டார்கள்; நசுக்கப்பட்டார்கள். ஏழைகளின் வாழ்க்கை தற்கொலைகளில் தடம்புரண்டது. தலைமையின் பார்வை தவத்தில் ஒன்றித்திருந்தது. அப்போதெல்லாம் வராத ஞானம், எட்டு ஆண்டுகள் கழித்து இன்று அவர்களுக்கு எட்டியிருக்கிறது.

நான்கு நிலை ஜி.எஸ்.டி.-யில் 12%, 18% ஆகிய நிலைகளை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இருநிலை விகிதமுறையைச் செயல்படுத்தவும், புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள் மற்றும் ஆடம்பரப் பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கும் புதிய சீர்திருத்தத்தை இன்று வெளியிட்டிருக்கிறது.

ஏறக்குறைய 375 பொருள்கள் மீதான வரிகுறைப்பால் ஏழைகள், நடுத்தர வகுப்பினர், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் யாவரும் பெரிதும் பலனடைவர் என்றும், மருந்துகள், மருத்துவக் காப்பீடுகள், சமையல் உணவுப்பொருள்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் என அடிப்படைத் தேவைகள் மீது வரி குறைத்திருப்பதால் இத்தீபாவளி விழாசேமிப்புத் திருவிழாவாகஅமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோடி.

ஆயினும், எட்டு ஆண்டுகள் கழித்து இன்று விழித்துக்கொண்ட ஒன்றிய அரசு, ஜி.எஸ்.டி. குறைப்பின் மூலம்மக்கள் தங்கள் கனவுகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்என்று கொக்கரிக்கிறது. கனவுகள் கருகிச் சிதைந்துபோன பிறகு இன்றுகனவுகள் பூர்த்தியாகும்என்று கற்பனை கொள்கிறது.

நவராத்திரியின் தொடக்கத்தில்தற்சார்பு தேசம்என்னும் இலக்கை எட்ட, மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்க அடியெடுத்து வைக்கிறது நம் நாடுஎன மோடி கூறுகிறார். “நவராத்திரி தொடக்க நாளில் ஜி.எஸ்.டி. சலுகை அமலாகிறதுஎன மகிழ்ச்சியைப் பகிர்ந்த பிரதமர் அவர்களே! எட்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. கொடுமையால் மக்களின் தூக்கத்தைக் கெடுத்து, அவர்கள் வாழ்வைச் சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” என்று கேட்கும் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனின் கேள்விக்குப் பதில் இல்லை.

மேலும், நடப்பாண்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூபாய் 12 இலட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி. குறைப்பையும் கருத்தில்கொண்டால், நடுத்தர வகுப்பினருக்கு இது இரட்டை மகிழ்வு தரக்கூடியதாகும்; இவ்விரு நடவடிக்கைகளால் இந்திய மக்களின் பணம் ரூ.2.5 இலட்சம் கோடி சேமிக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடியிடம், “இதைத்தானே தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்; எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே!” என்று விமர்சித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின்.

இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை இந்தியக் குடிமகனாக நாம் வரவேற்றாலும், இது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் காலமும் நேரமும் கருத்தாய்க் கணிக்கப்பட வேண்டியிருக்கிறது. 2017-இல் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் புதிய வரலாறு தொடங்கப்பட்டது; ‘ஒரே நாடு-ஒரே வரிகனவு நனவானது என்று பெருமைப்படும் ஒன்றிய அரசு, பா... ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குத் தாராளமாக ஜி.எஸ்.டி. நிதி வழங்கியதும், மற்ற மாநிலங்களை வஞ்சித்ததும் உலகறிந்த உண்மை. மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எனப் பல கொள்கைகளுக்கு ஒத்துழைப்புத் தராத தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுத்ததும் யாவரும் அறிந்த உண்மையே!

பா... ஆளும் மாநிலங்களை வளமாக்கிய பிறகு, இன்று கடை திறந்திருக்கிறது பா... அரசு. மடை திறந்தது போன்ற மாயை கொண்டு, ஜி.எஸ்.டி. அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவின் வணிக நடைமுறைகள் உலகளாவிய வணிக நடைமுறைக்கு ஏற்றதாக மாறியிருப்பதை மறந்து விடக்கூடாது என மார்தட்டிக் கொண்டாலும், வணிகர்களின் அன்றாட வர்த்தக நடைமுறைகளில் ஆயிரம் முரண்பாடுகள் இருந்ததையும் மறுக்க இயலாது. ஜி.எஸ்.டி. என்ற பெயரில் ஏழைக் குடியானவனின் சுருக்குப்பையில் கை வைத்ததுதான் இந்தப் பா... ஆட்சியின் வெற்றியின் இரகசியம்.

குடிமக்களே கடவுள்என்னும் தாரக மந்திரமே ஜி.எஸ்.டி. குறைப்புக்கான அடிப்படைக் காரணம் என்னும் ஒன்றிய அரசின் கூற்று, இன்று அனைவருடைய நகைப்புக்கும் உள்ளாகிறது. கடவுள்கள் (மக்கள்) காணாமல் போன பின்புதான், இங்கு ஒரு பக்தன் கடவுள்களைத் தேடுகிறான். பல் துலக்கும் பற்பசை முதல், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஆக்சிஜன் சிலிண்டர் வரை ஜி.எஸ்.டி. விதித்தது இந்த அரசு என்பதை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். பெண்களின் வருமானம், அவர்களது தன்னிறைவு பேசும் இந்த அரசுதான், அவர்களுடைய அன்றாடத் தேவைக்கான பொருள்கள் மீதும் ஜி.எஸ்.டி. விதித்ததையும் எளிதில் எவரும் மறக்கமாட்டார்கள்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய்...’ எனப் பெருமூச்சுவிட்டுக் காத்திருந்த சூழலில், இந்தச் சீர்திருத்தத்தின் காலச்சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்வரும் பீகார், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளத் தேர்தல்களை நாம் மறந்து விடக்கூடாது.

அன்று, கி.மு., கி.பி. என்று இரண்டாகப் பிளவுபட்டது உலக வரலாறு; பா...-வின் ஆட்சி வரலாறோ தே.மு., தே.பி. என்றே பிரிகிறது: கடந்த 12 ஆண்டுகால வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். பா.. அரசின், அரசியல் தலைவர்களின், ஆட்சிப் பொறுப்பாளர்களின் நடை, உடை, பாவனைகள் தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் என்றே வரையறுக்கப்படுகிறது.

எது எப்படியோ, ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!

விழித்துக் கொண்டால் விடியல் நமக்கு;

விவேகம் கொண்டால் உலகே நமக்கு!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்